பட்டணத்தையே உலுக்கிய உண்மை சம்பவம்

பட்டணத்தையே உலுக்கிய உண்மை சம்பவம் 

 

கல்லாம்பொத்தை முதல் கல்லடித்தோப்பு வரை பரந்து விரிந்த பட்டணம் தேசத்தையே பரபரபாக்கியது ஒரு பசுமாடு.

 

அறுபதுகளின் கடைசியில் – நான் ஒரு பள்ளி மாணவனாக துள்ளி திரிந்த காலத்தில் – பட்டணத்தையே பரப்பரப்பிலாழ்த்திய உண்மை நிகழ்ச்சி இது.

 

அந்த காலத்தில் பட்டணத்தில் பலவீடுகளிலும், கோழி, ஆடு, பசு வளர்க்கப்பட்டு வந்தது.  சில வீடுகளில் பால் வியாபாரமும் நடந்து வந்தது.

 

 

அப்படி வளர்க்கப்பட்ட பசுமாடுகளை சிலர் வெளியே மேயவிடுவதுமுண்டு.  அவைகள் கூட்டமாக அலைந்து திரிந்து மேய்ந்து மாலை வேளையில் வீடு திரும்பும். இதில் வாழைமரத்தையும்,  தென்னம்பிள்ளையும் தின்றுவிட்டு, உரிமையாளருக்கு ‘நல்ல’ பெயர் வாங்கி கொடுக்கும் வம்பன் மாடுகளும்,   தெருவில் வருவோர் போவோரை மிரட்டும் கொம்பன் மாடுகளும் உண்டு.

 

இந்த கூட்டத்துடன் ஒரு பசு கன்றும் சுற்றி திரிந்தது.  இதன் உரிமையாளர் யாரென யாருக்கும் தெரியவில்லை. அதுபற்றி யாரும் கவலைப்படவுமில்லை.  மற்ற மாடுகளெல்லாம் வீடு திரும்பும் போது இந்த கன்று மட்டும் தெருவோரங்களிலோ, கல்லாம்பொத்தையிலோ தங்கிவிடும்.

 

புல் மேய்ந்தும், தெருவோர உணவை உண்டும், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணவுமாக வளர்ந்து வந்த இந்த பசு சினையாகி ஒருநாள் கல்லாம்பொத்தையில் அழகிய ஒரு கன்றினை ஈன்றெடுத்தது. 

 

இதுவரையில் எந்த கவலையும் இல்லாமால் வளர்ந்து வந்த பசுமாட்டிற்கும், அமைதியாயிருந்த பட்டணத்திற்கும் அன்று முதல்   பிரச்னைகள் ஆரம்பித்தன.  பசுமாட்டிற்கு பலர் உரிமை கொண்டாட,  மற்றவர்களோ அவரவருக்கு வேண்டியவருக்கு ஆதரவாக செயல்பட்டனர். பலர் இது முஹல்லத்திற்கு உரிமையானது என வாதிட்டனர்.  இப்படியே. வேடிக்கை பார்த்தனர் பலர்,   விவாதம் புரிந்தோர் பலர்,  முஹல்லத்திற்கே சொந்தம் என விளக்கம் சொன்னனர் பலர்.  எங்கு பர்ர்த்தாலும் இந்த பசு மாட்டினை பற்றியே பேச்சு.  நண்பர்கள், உறவினர்கள் சந்திப்பின் போதெல்லாம் நலம் விசாரிக்க மறந்து பசு மாட்டினையே விசாரித்தனர். கல்யாண வீட்டிலும் கத்த வீட்டிலும் இந்த பசுமாடே காதநாயகன் ஆனது. ஆக மொத்தம் ஒரு அனாதை பசு மாடு பட்டணத்தின் வீர கதாபாத்திரமாக மாறிவிட்டது.

 

 இப்படி உரிமை கொண்டாடியோர் அவரவர் வீட்டு வாசலில் வைக்கோலும், காடியும் வைத்து விட்டு கயிற்றுடன் காத்திருந்தனர். தத்தம் உரிமையினை நிலைநாட்ட காரணங்களை சொன்னார்கள்.   சிலர் வம்பன்களை ’சட்டம் கட்டி’ பசு மாட்டினை பிடிக்க முயற்சித்தனர்.  ஆனால் இந்த பசு யாருக்கும் பிடிகொடுக்காமல் பதுங்கியே இருந்தது.  பசு எங்கே மறைந்ததென யாருக்கும் தெரியவில்லை.  ஆனாலும் அங்கே இங்கே கண்டதாக வதந்திகள் மட்டும் வலம் வந்துக்கொண்டே இருந்தன.

 

ஒரு தாயார் பல பிள்ளை பெறுவதுண்டு. பல தாயார் ஒரு பிள்ளை பெறுவதுண்டோ?  நிலமை சிக்கலாகி சீர்கெட்டுப் போகும் என கருதியோர் சிலர் முஹல்லத்தை தலையிடுமாறு வற்புறுத்த, முஹல்லமோ,  இந்த பசு மாடு ஊருக்கு சொந்தமானது என முடிவு செய்து அதனை பிடித்து ஏலம் செய்து விற்றது. இந்த முடிவுக்காக காத்திருந்ததைப் போல தலைமறைவாயிருந்த பசுவும் பணிந்தது.  S.M. Hajiyar அதனை ஏலத்தில் பெற்றுக்கொண்டு பிரச்னையினை முடிவுக்கு கொண்டுவந்தார்.

ஒரு பிள்ளை பல தாயார் வழக்கின் தீர்ப்பைப் போல அறுத்து பங்கிட முடிவு செய்யாமல் ஒரு சுமுகமான தீர்ப்பினால் பெரும் பிரச்னை முடிவுக்கு வந்து, ஒரு சினிமா கதையின் விறுவிறுப்பும் கிளைமாக்ஸும் கொண்ட ஒரு சம்பவம்  முடிந்து பட்டணத்து மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

எம்.என். ஹமீது

பஹ்ரைன்.

பட்டணத்தையே உலுக்கிய உண்மை சம்பவம்    கல்லாம்பொத்தை முதல் கல்லடித்தோப்பு வரை பரந்து விரிந்த பட்டணம் தேசத்தையே பரபரபாக்கியது ஒரு பசுமாடு.   அறுபதுகளின் கடைசியில் – நான் ஒரு பள்ளி மாணவனாக துள்ளி திரிந்த காலத்தில் – பட்டணத்தையே பரப்பரப்பிலாழ்த்திய உண்மை நிகழ்ச்சி இது.   அந்த காலத்தில் பட்டணத்தில் பலவீடுகளிலும், கோழி, ஆடு, பசு வளர்க்கப்பட்டு வந்தது.  சில வீடுகளில் பால் வியாபாரமும் நடந்து வந்தது.     அப்படி வளர்க்கப்பட்ட பசுமாடுகளை சிலர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *