Thengapattanam Beach – Short Description

தேங்காய்பட்டணம் பீச் – 

 

தேங்காய்ப்பட்டணம் மக்களின் சமூக, பொருளாதார வாழ்வில் ‘தெக்கே’ என பட்டணம் மக்களால் அழைக்கப்படும் தேங்காய்ப்பட்டணம் கடற்கரை ஒரு காலத்தில் மிக முக்கிய பங்கு வகித்தது.  தேங்காய்ப்பட்டணம் கடற்கரை இப்போதைய பஸ் ஸ்டாண்ட் ஜங்சனை விட பரபரப்பான இடமாகவும் வியாபார கேந்திரமாகவும்  ஒரு காலத்தில் விளங்கியது.

அரசியல் கட்சிகளின் மாநாடுகளும், கட்சி கூட்டங்களும் தேங்காய்ப்பட்டணம் கடற்கரை பகுதியில் நடைபெற்று வந்தன.  முஸ்லீம் லீக் மாநாடு, கம்யூனிஸ்ட் மாநாடுகள் இங்கே நடைபெற்றது என்  நினவில் இன்றும் பசுமையாக உள்ளது. அக்காலத்தில் கடல் இப்போதைய கடற்கரையிலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் இருந்ந்தது.

 

 இன்று பொலிவிழந்து போன குமரியின் மெரீனாவான தேங்காய்ப்பட்டணம் கடற்கரை   அக்காலத்தில் வெள்ளை மணலுடன் பரந்து விரிந்து பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்ளும் அழகுடன் திகழ்ந்தது. கயிறு தொழிற்கூடம், பண்டாலை, கொப்புறா புரை என பரபரப்பான கடற்கரை  எல்லா வயதினருக்கும், எல்லா மதத்தினருக்கும், எத்துறையினருக்கும் தனது பங்களிப்பை தந்தது.  

 

சிறந்த வியாபார மையமாக திகழ்ந்த கடற்கரை பகுதியில் பலசரக்கு கடைகளும், உணவகங்களும், பெட்டிக்கடைகளும் நிறைந்திருந்தன.  கடற்கரை முஹியித்தின் பள்ளிவாசல் முஅத்தின் ஹனீபா சாகிப் நடத்திவரும் பெட்டிக்கடை அவற்றில் ஒன்றே.  அக்காலத்தில் மிக பிரபலமான இக்கடை அவரது மூத்த சகோதரரால் நடத்துப்பட்டு வந்தது.  மலபார் ஹோட்டல் அப்துல் வாகிதின் வாப்பாவால் நடத்தப்பட்டு வந்த ‘மனார் ஹோட்டல்’ மிகவும் பிரபலமானது.  மீன்பாடு சீசன்களில் அமைக்கப்படும் திடீர் ஸ்டால்கள், பண்டமாற்று முறையில் மீனுக்கு பனங்காய், பனங்கிழங்கு, கொல்லமாங்காய், மாங்காய் என பரிவர்த்தனைகள் எல்லாம் இங்கே நடைபெற்றன. மீனை மணற்வெளியில் காயவைத்து கருவாடாக மாற்றி ’சம்பை’ ஏற்றுமதியும் இங்கிருந்து நடைபெற்றது.

 

ரமலானில் பெருநாளுக்கு சில நாட்களுக்கு முன் அமைக்கப்படும் அன்னலூஞ்சை, சிறுவர்களையும்,  சாகச பிரியர்களையும் ஒரு சேர கவர்ந்திருந்தது.  கடற்கரையில் வாளி எனும் கடல் கிளிஞ்சல்களை வைத்து நடத்தப்படும் விளையாட்டு சிறுவர்களுக்கு மிக விருப்பமான பொழுதுபோக்கு. 

 

கடற்கரையில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பன்னாயங்களுக்குளே அமர்ந்து கடலை ரசிப்பது ஒரு அருமையான பொழுதுபோக்கு. நிலாக் காலங்களில் மணல்வெளியில் படுத்துக்கொண்டே கவலைகளை மறந்து, கற்பனைகளில் மிதந்து, கனவுகளை சுமந்து அமைதி கொள்வோர் ஏராளம்.   நிறைந்த மணற்பரப்பில் படுத்துக்கொண்டே விண்மீன்களை எண்ணுவதும் கடலில் செல்லும் கப்பல்களை பற்றிய தகவல்களை நண்பர்களுடன் பரிமாறிக்கொள்வதும் சுவையான பொழுதுபோக்கு. வெளியூர் காதல் ஜோடிகளுக்கும், குடும்பங்களுக்கும் பட்டணம் கடற்கரை நல்ல ஒரு பிக்னிக் ஸ்பாட். சுக நித்திரைக்காக இரவில் கடற்கரையிலேயே உறங்குபவர்களும் உண்டு.

 

கூட்டாலுமூடு திருவிழாவிற்கு முன்னோடியான ‘சீனாடி’யும், திருவிழாவின் போதான கலைநிகழ்ச்சிகளும், அஸ்தி கரைக்கும் போது வீசி எறியும் நாணயங்களும் சிறுவர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

– MN Hameed

தேங்காய்பட்டணம் பீச் –    தேங்காய்ப்பட்டணம் மக்களின் சமூக, பொருளாதார வாழ்வில் ‘தெக்கே’ என பட்டணம் மக்களால் அழைக்கப்படும் தேங்காய்ப்பட்டணம் கடற்கரை ஒரு காலத்தில் மிக முக்கிய பங்கு வகித்தது.  தேங்காய்ப்பட்டணம் கடற்கரை இப்போதைய பஸ் ஸ்டாண்ட் ஜங்சனை விட பரபரப்பான இடமாகவும் வியாபார கேந்திரமாகவும்  ஒரு காலத்தில் விளங்கியது. அரசியல் கட்சிகளின் மாநாடுகளும், கட்சி கூட்டங்களும் தேங்காய்ப்பட்டணம் கடற்கரை பகுதியில் நடைபெற்று வந்தன.  முஸ்லீம் லீக் மாநாடு, கம்யூனிஸ்ட் மாநாடுகள் இங்கே நடைபெற்றது என்  நினவில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *