கண்ணகிகளும், எரியும் காஷ்மீரும்!

கண்ணகிகளும், எரியும் காஷ்மீரும்!

காஷ்மீரில் நடப்பது பயங்கரவாதக் கலவரம் போலவும், மதரீதியான பதற்றமாகவுமே, காஷ்மீர் அல்லாத இந்தியப் பகுதிகளில் தோற்றங்கள் உருவாக்கப்படுகின்றன. அப்படித்தான் என்பதாகவும் பெரும்பான்மையோர் நினைக்கின்றனர். “தொடர்ச்சியான கடையடைப்புகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. அரசு நிர்வாகம் அறிவிக்கும் ஊரடங்கு உத்தரவுகளை மக்கள் மறுத்து வெளியே வருகிறார்கள் காவல்துறையினரின் துப்பாக்கிக் குண்டுகளை நேருக்கு நேர் எதிர்கொள்கிறார்கள். பெண்களும், குழந்தைகளும் தெருவில் வந்து போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இதனை நீங்கள் எப்படி விளக்குவீர்கள்?” என கேட்கிறார் முகமது யூசுப் தாரிகாமி (சி.பி.எம் மாநிலச் செயலாளர்). குமுறி, கொந்தளித்துப் போயிருக்கின்றனர் அங்குள்ள மக்கள் என்பதை இந்த தேசத்தின் அரசும், அனைத்து மக்களும் இப்போதாவது புரிந்துகொண்டாக வேண்டும். ‘தூண்டுதல்கள்’ என வசதியான ஒரு சொல்லாடலுக்குள் ஒளிந்துகொண்டு அரசு ‘திருவிளையாடல்களை’ செய்துகொண்டு இனியும் காலத்தைத் தள்ள முடியாது. ‘எப்போதும் போல’ இப்பிரச்சினையை குரங்கின் அப்பமாகக்  கையாண்டால் நிலைமைகள் மேலும் மோசமடையவேச் செய்யும்.

காஷ்மீரின் வரலாறு குறித்துப் பேசும்போது, அந்த மண்ணின் மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகங்களே முக்கிய அத்தியாயங்களாய் இடம்பெறும். மாறி, மாறி வந்த ஆட்சிகளால், அந்த மக்கள் வஞ்சிக்கப்பட்ட கதைகளை வெளியே பெரிதாய் இங்கு பேசுவதில்லை. இந்தியா, பாகிஸ்தானின் அரசியலுக்குள் அந்த காஷ்மீர் மக்களின் வாழ்க்கை சிதைந்து போனதைக் காட்டுவதில்லை.  ஒரு சில சம்பவங்களை பெரிது பெரிதாய் காட்டி, அங்கிருக்கும் முஸ்லீம்கள் அனைவருமே தீவீரவாதிகள் போலவும், பயங்கரவாதிகள் போலவும் இந்திய ஊடகங்களால் வெற்றிகரமாக சித்தரிக்கப்பட்டு வருகின்றனர். இந்திய பாதுகாப்புப் படையின் வரம்பற்ற அதிகாரத்தின் கீழ் அவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர். அவர்கள் அனைவருமே சந்தேகத்துக்குரிய பிரஜைகளாகி இருக்கின்றனர். அந்த சாதாரண மக்களின் உணர்வுகளும், உரிமைகளும் ‘மதம்’, ’பயங்கரவாதம்’, ‘தேசப் பாதுகாப்பு’ என்று சொல்லிச் சொல்லியே தட்டிக் கழிக்கப்பட்டன. அவைகள்தாம் இன்று பெருங்கோபமாய் கிளர்ந்து நிற்கிறது.

மூன்று அப்பாவி இளைஞர்களை பாதுகாப்புப் படையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்று  கொல்லப்பட்டதைத் தொடர்ந்தே இந்த வன்முறை வெடித்தது. கொதிப்பின் கடைசிப் புள்ளி இது. இத்தனை நாளும் அவர்கள் எப்படி உள்ளுக்குள் பொங்கிப் போயிருந்தார்கள் என்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. அதன் ஒரு பகுதியை அறிய, இந்த ஆவணப்படத்தைப் பாருங்கள்.

காஷ்மீரில் சந்தேகத்தின் பேரில், விசாரணைக்கு என்று இராணுவத்தால் அழைத்துச் செல்லப்படும் பல மூஸ்லீம் ஆண்கள் பிறகு வீடு திரும்புவதே இல்லை. பல்லாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் கணவரை தேடிக்கொண்டே இருக்கிறார்கள். எதிர்காலம் திசையற்றுப் போகிறது அவர்களுக்கு. ‘ஒருவன் கிடைத்திருக்கிறான். அவன் உன் கணவனா என்று வந்து பார்த்துச் சொல்” இப்படி நள்ளிரவில் அழைத்துச் செல்லப்படும் இளம் பெண்கள் இராணுவ முகாம்களில் என்ன ஆவார்கள் என்பதை சிந்திக்கவே முடியாது. அப்பெண்களுக்கு குடும்பங்களில், சமூகத்தில் நேரும் அவலங்கள் உயிரோடு கொல்வதாய் இருக்கின்றன. “அப்பா எங்கேம்மா” என கேட்கும் குழந்தைகளுக்கு “வருவாங்க கண்ணே” எனச் சொல்லி அந்தப் பெண்கள் காத்திருக்கிறார்கள். இதுதான் அடுல் குப்தா இயக்கிய ‘waiting’  என்னும் ஆவணப்படம்.  காஷ்மீரின் துயரம் படம் முழுவதும் நம்மீது கொடும்பனியாய்ப் பரவி உறைய வைக்கிறது.

இப்படி விசாரணைக்கு என்று அழைத்துச்  செல்லப்பட்டு, தொலைந்து போன ஆண்களின் மனைவிகளை அங்கே ‘half widows’ என்று சொல்கிறார்கள். தகிக்கும் பெருமூச்சோடு, ஆராய்ச்சி மணி அடித்த நம் கண்ணகியே நினைவில் வருகிறாள். அதுதான் காஷ்மீர் இப்படி பற்றி எரிகிறது போலும்.

தேரா மன்னர்களே, செப்புவது உடையது.

கண்ணகிகளும், எரியும் காஷ்மீரும்! காஷ்மீரில் நடப்பது பயங்கரவாதக் கலவரம் போலவும், மதரீதியான பதற்றமாகவுமே, காஷ்மீர் அல்லாத இந்தியப் பகுதிகளில் தோற்றங்கள் உருவாக்கப்படுகின்றன. அப்படித்தான் என்பதாகவும் பெரும்பான்மையோர் நினைக்கின்றனர். “தொடர்ச்சியான கடையடைப்புகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. அரசு நிர்வாகம் அறிவிக்கும் ஊரடங்கு உத்தரவுகளை மக்கள் மறுத்து வெளியே வருகிறார்கள் காவல்துறையினரின் துப்பாக்கிக் குண்டுகளை நேருக்கு நேர் எதிர்கொள்கிறார்கள். பெண்களும், குழந்தைகளும் தெருவில் வந்து போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இதனை நீங்கள் எப்படி விளக்குவீர்கள்?” என கேட்கிறார் முகமது யூசுப் தாரிகாமி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *