நோன்பாளிகளே பிறை குழப்பத்திற்கு இதோ தீர்வு

நோன்பாளிகளே பிறை குழப்பத்திற்கு இதோ தீர்வு

 

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

 

அன்புச் சகோதர, சகோதரிகளே

 

புனித ரமலான் மாதம் வந்துவிட்டாலே முஸ்லிம்களாகிய நம் சமுதாயத்தின் மத்தியில் பெரும் மகிழ்ச்சி காணப்படுகிறது நோன்பு நோற்க வேண்டும், தான தர்மங்களை செயல்படுத்த வேண்டும் பொய், புறம், கேலி, கிண்டல், நக்கல் நையாண்டி ஆகியவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கனமாக சிந்திக்கிறோம் மேலும்

ஒருபடி முன்னே சென்று நம் சமுதாயத்தவர்களுக்கு நம்மால் இயன்ற அளவு நன்மைகள் செய்ய வேண்டும் என்று ஆர்வப்படுகிறோம் ஆனால் அதே வேலையில் இந்த மாதம் வந்துவிட்டால் சமுதாயம் பிறையின் விஷயத்தில் தத்தளிக்கிறது நம் சமுதாயத்தில் சிலர் மார்க்க விஷயத்தில் பிறைக்கு புது வடிவம் கொடுத்த புதுமையை புகுத்தி குழப்பிவிடுகிறார்கள் இதோ இதுதான் அந்த குழப்பம்!

 

08.09.2010 அன்று ரமளான் மாதம் முடிவடைகிறது, அதற்கு அடுத்த நாளான 09.09.2010 பெருநாள் தினம் என்றும் அன்று நோன்பு வைப்பதை அல்லாஹ்வின் தூதர் தடை செய்துள்ளார்கள் என்றும் சில இயக்கவாதிகள் தங்கள் வளைத்தளங்களில் பிரசுரிக்கிறார்கள் இதுபோன்ற செய்திகளை கண்டு மனம் வேதனைப்படுகிறது நோன்பாளிகளாகிய நம்மில் ஒரு கூட்டத்தார் இந்த சுவையான மாதத்தின் முதல் நாளையும் இறுதி நாளையும் தீர்மானிக்க அருள்மறை குர்ஆன் மற்றும் நபிவழியை அணுகாமல் தான்தோன்றித்தனமான செயல்படுகின்றனர். இந்த நாளில்தான் ரமலான் ஆரம்பமாகிறது! இந்த நாளில்தான் பெருநாள் கொண்டாட வேண்டும் என்று நபிகளார் அறுதியிட்டு தின்னமாக கூறியிருக்கிறார்களா? அல்லது அவரவர் பகுதியின் பிறையை அடிப்படையாக வைத்து தீர்மானிக்க வழிவகுத்தார்களா?

 

அன்புச் சகோதரர்களே ரமலான் ஆரம்பிப்பதற்க முன்னரும் பெருநாள் தினத்தையும் 1 மாதத்திற்கு முன்னரே முன்கூட்டி தீர்மானிக்க மார்க்கத்தில் எவருக்கேனும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா? இது நபிகளார் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த நடைமுறையா? இது சுன்னத்தான வழிமுறையா?

 

அருள்மறை குர்ஆன் மற்றும் நபிகளார் (ஸல்) அவர்களின் கீழ்கண்ட இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் என்ன?

 

உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு வைக்கட்டும் (அல்குர்ஆன் 2:185)

அல்லாஹ் உலக மக்கள் அனைவரையும் நோக்கி உங்களில் நோக்கி அவர் எந்த மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு வைக்கட்டும் என்று தெளிவாக கூறுகிறான் இதன் விளக்கம் அவரவர் பகுதியில் பிறையை வைத்து ரமலான் மற்றும் பெருநாளை அறிந்துக்கொள்ளுங்கள் என்றுதானே அர்த்தமாகிறது. மேலும் மாநபி (ஸல்) அவர்கள் கீழ்காணும் விதமாக அறிவுறுத்துகிறார்கள் அதாவது!

 

நீங்கள் பிறை பார்த்தால் நோன்பு வையுங்கள், அடுத்த பிறையைப் பார்த்தால் நோன்பை விட்டு விடுங்கள், மேகம் (பிறையை) உங்களுக்கு மறைத்து விடுமானால் (ரமளானையும் ஷாஃபானையும்) முப்பது நாட்களாகப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள், என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு உமர் (ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா, திர்மிதீ, தாரகுத்னீ, இப்னுஹிப்பான், இப்னுகுஸைமா, ஹாகீம்.

 

ரமலான் பிறையை நீங்கள் காணும் வரை நோன்பு நோற்காதீர்கள்; (மறு) பிறையைக் காணும்வரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் (முப்பது நாள்களாக) அதைக் கணித்துக் கொள்ளுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 1906 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).

 

நபிமார்களின் முத்திரையாம் மாநபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடமிருந்து 23 ஆண்டுகள் வஹியினை பெற்று நமக்கு அருள்மறை குர்ஆனையும், விஞ்ஞானத்தையும் நற்பண்புகளையும் காட்டித்தந்து வழிகாட்டிச்சென்றார்கள் மேலும் அந்த மாநபி (ஸல்) அவர்கள் பல்வேறு விஞ்ஞான ரீதியான ஆதாரங்களையும் நம்முன்னே வைத்துவிட்டு சென்றார்கள் அதன் வரிசையில் இதோ கீழ்கண்ட ஹதீஸ் ஒன்றை படியுங்கள்

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (மினாவில்) இருந்து கொண்டிருந்தபோது சந்திரன் பிளவுபட்டு இரண்டு துண்டுகளாக மாறிற்று . அப்போது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம், ‘நீங்கள் சாட்சியாக இருங்கள். நீங்கள் சாட்சியாக இருங்கள்’ என்று (இரண்டு முறை) கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) நூல் : புகாரி 3636,4864,4865.

 

இன்றைக்கு சர்ச்சையாக இருக்கும் சந்திரன் பிறையைப் பேசும்போது நபிகளார் (ஸல்) அவர்கள் அந்த சந்திரன் பிளவுபட்டு இருதுண்டுகளாக மாறிற்று என்று விஞ்ஞானத்தை வகுத்துள்ளார்கள் அதை இன்றைய ஆராய்ச்சியாளர்களும் கண்டு வியக்குகின்றனர். இப்படிப்பட்ட மாநபி (ஸல்) அவர்கள் நினைத்திருந்தால் இந்த உலகிற்கு ஒரு பிறைதான் உலகம் முழுவதும் ஒரே நாளில் பெருநாள் கொண்டாடுங்கள் என்று அறிவிப்பு செய்திருக்கலாமே ஆனால் மாநபி (ஸல்) அவர்கள் மாதங்களைப் பற்றி கீழ்கண்டவாறு கூறுவது ஏன்?

 

”பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள்; பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாள்களாக முழுமைப் படுத்துங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி: 1909 அபூஹுரைரா (ரலி).


இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘மாதம் என்பது இப்படியும், இப்படியும், இப்படியும் இருக்கும்” என்று (இரண்டு கைகளையும் மும்முறை விரித்துக் காட்டி) முப்பது நாள் எனச் சொல்லிவிட்டு, பிறகு ‘மேலும் இப்படியும், இப்படியும், இப்படியும் இருக்கலாம்” (என்று இரண்டு கைகளையும் மும்முறை விரித்துக் காட்டி மூன்றாம் முறை பெருவிரலை மடக்கியபடி) – இருபத்தொன்பது நாள்களாகவும் இருக்கலாம் என்று கூறினார்கள். அதாவது (மாதம் என்பது,) சில வேளை முப்பது நாள்களாக இருக்கும்; மற்ற சில வேளை’ இருபத்தொன்பது நாள்களாக இருக்கும் என்று கூறினார்கள். புஹாரி :5302 இப்னு உமர் (ரலி).

 

விஞ்ஞான பிறைவாதிகள் உண்மையை உணர மறுப்பது ஏன்?

இணைவைப்பு கொள்கையை ஆதரித்து பேசக்கூடிய ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி போன்றோர் விவாதங்களில் ஈடுபடும்போது அவர்களுக்கு முன்னர் என்னதான் குர்ஆன் ஹதீஸ் வசனங்களை எடுத்துவைத்தாலும் அந்த கூட்டத்தார் உண்மையை அறிந்தும் அறியாதவிதமாக மறுத்து பேசுவார்கள் இது அறிவுடைமையாகாது எனவே இந்த பிடிவாத குணங்களை ஏன் பிறையை முன்கூட்டி தீர்மானிக்கும் விஞ்ஞான பிறைவாதிகளுக்கு ஏற்படுகிறது. நபிகளார் மாதம் இப்படியும் இருக்கும் அப்படியும் இருக்கும் என்கிறார்கள் இதை இவர்கள் உணருவதில்லை, பிறைபார்த்து நோன்பு வையுங்கள் பெருநாள் கொண்டாடுங்கள் என்றால் அதையும் உணர மறுக்கின்றனர் இறுதியாக அல்லாஹ் சுப்ஹானவதாலா கீழ்கண்டவாறு உண்மையை உரைக்கிறான் அதையும் உணர்வதில்லை இதோ!

உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு வைக்கட்டும் (அல்குர்ஆன் 2:185)

விஞ்ஞான பிறைவாதிகள் முன்கூட்டி தீர்மானிக்கும் இந்த பிறையின் மூலம் உலகம் முழுவதும் ஒரே நாள் பிறை ஒரே நாள் பெருநாள் என்ற வாதத்தை முன்வைப்பது அல்லாஹ்வின் வார்த்தைக்கு மாற்றமில்லையா?

 

”பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள்; பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாள்களாக முழுமைப் படுத்துங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி: 1909 அபூஹுரைரா (ரலி).

 

என்று நபிகளார் (ஸல்) அவர்கள் கூற இந்த விஞ்ஞான பிறைவாதிகளோ உலகம் முழுவதும் ஒரே நாள் பிறை ஒரே நாள் பெருநாள் என்று வாதிடுகிறார்கள் இது நபிகளாரின் பொன்மொழிகளுக்கு மாற்றமில்லையா?

 

தங்கள் அமீருக்கு (தலைவருக்கு) கட்டுப்படுகிறார்களா?

மேற்கண்ட விஞ்ஞான பிறைவாதிகள் தலைமைக்கு கட்டுப்பட வேண்டும் என்று அறைகூவல் விடுகிறார்கள் அதன்படி அவர்கள் நடந்துக்கொள்கிறார்களா? என்றால் அதுவும் கிடையாது மாறாக தங்கள் தலைவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விஞ்ஞான பிறை விஷயம் பற்றி தங்கள் பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டு உண்மையை ஒத்துக்கொண்டார் அப்படியிருக்க அந்த வார்த்தைகளுக்கேணும் இவர்கள் கட்டுப்படுகிறார்களா? தாங்கள் கொண்ட கொள்கையைக்காவது செவிசாய்க்கிறார்களா? என்றால் அதுவும் கிடையாது!

 

  • பிறை விஷயத்தில் அல்லாஹ்வின் வார்த்தைக்கு கட்டுப்படுவதில்லை!

 

  • பிறை விஷயத்தில் நபிகளார் (ஸல்) அவர்களின் வார்த்தைக்கு கட்டுப்படுவதில்லை!

 

  • பிறை விஷயத்தில் தங்கள் தலைவரின் வார்த்தைக்கு கட்டுப்படுவதில்லை!

 

அல்லாஹ்வுக்கோ, அவனது தூதருக்கோ அல்லது தங்களது அமீர் என்ற தலைவர் முதற்கொண்டு யாருக்கும் கட்டுப்படாமல் முழுக்க, முழுக்க விஞ்ஞானத்திற்கு கட்டுப்படும் இவர்களுக்கு நாம் ஏன் கட்டுப்படவேண்டும், நம் சமுதாயம் ஏன் கட்டுபட வேண்டும்! சிந்திப்பீர்! செயல்படுவீர்!

 

விஞ்ஞானத்தில் பிறையையும் பெருநாளையும் முன்கூட்டியே கணிக்கும் இவர்களிடம் நாம் கேட்கவேண்டிய கேள்விகள் இதோ இதுதான்

 

  • நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 1 மாதத்திற்கு முன் முன்கூட்டியே ரமலான் பிறையை அறிவித்தார்களா?

 

  • நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 1 மாதத்திற்கு முன் முன்கூட்டியே பெருநாள் தொழுகை இந்த நாள்தான் விழும் என்று அறிவித்தார்களா?

 

இந்த பிறை பற்றிய பிரச்சினைக்கு தீர்வுதான் என்ன?

 

உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள். (அல்குர்ஆன் 4:65)

 

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே பிறை பற்றிய இந்த பிரச்சினைக்க நாம் நபிகளார் (ஸல்) அவர்களை நீதிபதியாக, ஏற்று அவர் எவ்வாறு பிறையை கையாண்டார்களோ அதுபோன்று நாமும் பிறை விஷயத்தில் தெளிவை பெற்ற நன்மக்களாக முயல்வோமாக!

 

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!

 

அல்ஹம்துலில்லாஹ்

நோன்பாளிகளே பிறை குழப்பத்திற்கு இதோ தீர்வு   பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்   அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)   அன்புச் சகோதர, சகோதரிகளே   புனித ரமலான் மாதம் வந்துவிட்டாலே முஸ்லிம்களாகிய நம் சமுதாயத்தின் மத்தியில் பெரும் மகிழ்ச்சி காணப்படுகிறது நோன்பு நோற்க வேண்டும், தான தர்மங்களை செயல்படுத்த வேண்டும் பொய், புறம், கேலி, கிண்டல், நக்கல் நையாண்டி ஆகியவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கனமாக சிந்திக்கிறோம் மேலும் ஒருபடி முன்னே சென்று நம் சமுதாயத்தவர்களுக்கு நம்மால் இயன்ற…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *