சுதந்திரக் கனவும் நாட்டின் நிலையும்

வெள்ளையரின் ஆதிக்கம் இந்துஸ்தானத்தில் ஏற்பட்டுவிடாமல் தடுத்திட தனது படைபலம், செல்வம், நட்பு ஆகிய அனைத்தையும் சேர்த்து மிகக் கடுமையாகப் போராடிய மாவீரன் திப்பு சுல்தானை, 1799ஆம் ஆண்டு ஸ்ரீரங்கப்பட்டினத்தில் நடந்த பெரும் பேரில் கொன்றவிட்டு அமைந்ததுதான் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம். இதற்கு மேல் இந்தியா எனும் ஆசியாவின் துணைக் கண்டம் நிரந்தரமாகத் தன்னுடையதே என்று எண்ணி, இந்த நாட்டின் சிற்றரசர்கள் ஒவ்வொருவரையும் அழித்து அல்லது நட்பெனும் பெயரில் அடிமைப்படுத்தி பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தி நிலைப்படுத்தியது.

இந்த நாட்டின் செல்வச் செழிப்பைக் கண்டு வணிகம் செய்ய வந்த பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி, தனக்கு முன் இந்நாட்டில் கால்பதித்து போட்டியாளர்களாக திகழ்ந்த ஃபிரெஞ்சு, டச்சுக்காரர்களை வணிகத்திலும், ராஜதந்திரத்திலும், போரிலும் மிக சாமர்த்தியமாக வென்று வணிகத்திலிருந்து ஆளுமைக்கு உயர்ந்து இந்நாட்டை அடிமைப்படுத்தி 1801ஆம் ஆண்டில் அடியெடுத்தவைத்தபோது, ஒரு நாள் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என்று ஒருபோதும் சிந்திருக்ககாது. ஆனால் அது நடந்தது.

1801ஆம் ஆண்டு வேலூர் கோட்டைக்குள் நடந்த சிப்பாய்க் கலகம் கடுமையாக ஒடுக்கப்பட்டதற்குப் பிறகு எந்த எதிர்ப்பும் இல்லை இதற்குமேல் என்றுதான் பிரிட்டிஷ் அரசு நினைத்தது. ஆனால் தங்களை ஆண்ட அரசர்களிடம் தாங்கள் அனுவித்த விடுதலையுணர்வு, இந்திய மக்களை பிரிட்டிஷ் அரசாட்சியிடம் அடிமைப்பட்டு வாழும் வாழ்வை ஏற்க மறுத்தது. எத்தனையோ உள் பலவீனங்களை கொண்ட பாரத சமூதாயம், திமிறிக் கொண்டு எழுந்தது. அது ஆட்சிக்கு எதிரான போராட்டங்களாக வெடித்தது. விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள், பழங்குடியின மக்கள் என்று ஆங்காங்கு ஆட்சிக்கு எதிராக பல்வேறு ரூபங்களில் அந்த விடுதலை உணர்வு கிளர்ந்தெழுந்தது. பிரிட்டிஷ் காவல் படைகளின், இராணுவத்தின் கடும் ஒடுக்குமுறையை எதிர்கொண்டு கடுமையாகப் போராடியது. எண்ணிலடங்க உயிர்சேதத்தை சந்தித்தது. ஒவ்வொரு பிரதேசத்திலும் அப்படி எழுந்த போராட்டங்கள் அல்லது கலகங்கள் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டது. ஆனால் அது வெளிப்படுத்திய உணர்வு ஒன்றாகவே இருந்தது.

இப்படி ஒரிரு ஆண்டுகள் அல்ல, ஒரு சில பத்தாண்டுகள் அல்ல, ஒரு நூற்றாண்டுக்காலத்தை எட்டிய பின்னரே, அது ஒரு அரசியல் விடுதலைப் போராட்டமாக வடிவம் பெற்றது. வெள்ளையர் கொடுத்த பதவியும், அவர்களது ஆட்சியை நிலைப்படுத்திய கொண்டு வந்த கல்வியும், உருவாக்கிய தொலைத்தொடர்புகளும், ஏற்படுத்திய இரயில் போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படைக் கட்டுமானங்களும் அந்த விடுதலைப் போராட்டத்தை மேலும் பலப்படுத்தி வளர உதவியதே தவிர, எதிர்வினையாற்றவில்லை.

விடுதலை பெற்ற தீருவோம் என்ற உணர்வு இந்த நாட்டு மக்களை ஒருங்கிணைத்து வழிநடத்தும் சக்தியானது. அந்தச் சக்தியை வெளிப்படுத்த பக்கிம் சந்திர சாட்டர்ஜி கொடுத்த வந்தே மாதரம் எனும் முழக்கம் விடுதலைப் போரின் தாரக மந்திரமானது

விடுதலையுணர்வை நீர்க்கக் செய்ய, ஆட்சியாளர்களிடமிருந்து சிற்சில உரிமைகளையும், உயர் பதவிகளையும் பெற, பேரம் பேச மெத்தப் படித்த மேதாவிகள் உருவாக்கிய இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியை அந்த விடுதலையுணர்வு முழுமையாகத் தனதாக்கிக் கொண்டு, அதையே ஆட்சிக்கு எதிரான அரசியல் விடுதலை சக்தியாகவும் மாற்றியது. சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று குரல் கொடுத்த பத்திரிக்கையாளன் பால கங்காதர திலகர், இந்திய விடுதலை முன்னெடுக்கும் முதன்மைத் தலைவரானார். போராட்டக் குணங்கொண்ட பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி ராய் அந்த இயக்கத்தின் முதன்மை போராளியானார். பிபின் சந்திர பால் வங்கத்திலிருந்து விடுதலைச் சங்கை முழங்கினார். ஆங்கிலக் கல்வி கற்க இங்கிலாந்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட அரவிந்த கோஷ், பல மொழி கற்ற பண்டிதராய் நாடு திரும்பி, தனது எழுத்துக்களால் ஆங்கில ஆட்சிக்கு எதிரான புரட்சியைத் தூண்டினார். பிரிட்டிஷ் சர்க்காருக்கு எதிராக இந்தியர்கள் முன்னெடுக்கும் இந்தப் போராட்டத்தின் இலக்கு முழுமையான விடுதலையே என்று அரவிந்தர் முழக்கமிட்டார்.

தங்களை மறந்த தியாகத்தாலும், ஒளி வீசும் அறிவாற்றலாலும், சீறிய போராட்ட வழிகளாலும் நாட்டு மக்களை ஒன்றிணைத்த இந்தத் தலைவர்கள், சுதந்திரம் எந்த சமரசத்திற்கும் உட்பட்டதல்ல என்று முழங்கினர். உலகம் இருபதாம் நூற்றாண்டில் அடியெடுத்த வைத்தபோது, இந்திய நாடு முழுவதும் சுதந்திரத் தீ பற்றி எறிந்தது. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நிரந்தரம் என்று நினைத்த வெள்ளையரின் சாம்ராஜ்யக் கனவு, அந்த நூற்றாண்டின் பிறப்பில் நொறுங்கத் துவங்கியது.

அடுத்த கால் நூற்றாண்டுக் காலத்தில் இந்தத் தலைவர்களின் நெருப்புப் பேச்சாலும், செயலாற்றலாலும் பிரிட்டிஷ் ஆட்சியின் நிலையிழக்கத் துவங்கியது. தங்கள் நாட்டை உயிரினும் மேலாக நேசித்த உன்னதமான அந்தத் தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக இழக்க நேர்ந்தபோதுதான், அந்த விடுதலைத் தீ அணையாமல் முன்னெடுக்க தென் ஆப்ரிக்காவிலிருந்து மகாத்மா காந்தி வந்தார். இந்த விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமையேற்றார். சாத்வீக வழியில் மக்கள் சக்தியைத் திரட்டி பல போராட்டங்களை நடத்தினார்.

மகாத்மா காந்தியின் தலைமை கிடைத்து தேச விடுதலைப் போராட்டம் முன்னோக்கிச் சென்ற அதே வேளையில் சந்திரசேகர ஆசாத், அஷ்பகுல்லா கான், பகத் சிங், இராஜ குரு, சுகதேவ் என்று வடக்கிலும், தெற்கில் வாஞ்சிநாதன் போன்ற வீர இளைஞர்களும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஆயுதப் புரட்சியில் ஈடுபட்டனர்.

இந்த நாட்டின் ஈடிணையற்ற வீர இளைஞர்களைத் திரட்டி, நாட்டிற்கு வெளியே படையமைத்து பிரிட்டிஷ் ஆட்சியைத் தூக்கியெறிய யுத்தத்தை மூட்டினார் நேத்தாஜி சுபாஷ் சந்திர போஸ்.

விடுதலைப் போராட்டம் உச்ச கட்டத்தை எட்டியதையறிந்த மகாத்மா காந்தி 1942இல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெள்ளையனே வெளியேறு என்று முழங்கி இறுதிக் கட்ட போராட்டத்திற்கு வித்திட்டார். இரண்டாம் உலகப் போர் இந்திய சுதந்திரப் போராட்டத்தை வலுவூட்டிய அதே நேரத்தில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை வலுவிழக்கச் செய்தது. நாட்டை விட்டு வெளியேறுவது என்று தீர்மானித்த வெள்ளைய அரசு, ஒன்றாய் நின்றுப் போராடிய இந்தியரை மத ரீதியாக பிளவுபடுத்தி, அவர்களின் நாட்டையும் இரண்டாக்கிவிட்டு வெளியேறியது.

ஒரு பெரும் குறையுடன் தான் இந்த நாடு விடுதலைப் பெற்றது. முழுமையான விடுதலையே பிரிட்டிஸ் சாம்ராஜ்யத்திற்கு எதிரான இந்தியப் போராட்டத்தின் நோக்கம் என்று கர்ஜித்த அரவிந்தரின் பிறந்த நாளில், ஆகஸ்ட் 15ஆம் தேதி, இந்தியா விடுதலைப் பெற்றது. விடுதலை நாள் செய்தி வழங்கிய ஸ்ரீ அரவிந்தர், இந்திய, பாகிஸ்தான் பிரிவினை நிரந்தரமாகிவிடக் கூடாது என்று தனது சுதந்திர தினச் செய்தியில் குறிப்பிட்டார்.
விடுதலைப் பெற்று 63 ஆண்டுகள் உருண்டோடிவிட்டது. ஆனால் எந்த நோக்கத்திற்காக இந்த நாட்டிற்கு விடுதலை பெற்றுத் தர போராடினரோ அவர்களின் கனவு நிறைவேறியதா என்று நினைத்துப் பார்த்தால், இந்த விடுதலை நாளில் துயரமே விஞ்சுகிறது.

நிலைகுலைந்துள்ள விவசாயமும், கிராம வாழ்வும

விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமையேற்ற மகாத்மா காந்தி, இந்த நாட்டின் ஆன்மா கிராமத்தில்தான் உள்ளது என்றார். ஆனால் இன்றைய இந்தியாவின் கிராமங்களில்தான் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பங்களின் எண்ணிக்கையில் 80 விழுக்காடு வாழ்கிறது.

உணவுப் பற்றாக்குறையைத் தீர்க்கிறோம் என்று கூறி கொண்டுவரப்பட்ட பசுமைப் புரட்சித் திட்டம் இந்திய விவசாயத்தின் முதுகெலும்பையே முறித்துவிட்டது இப்போதுதான் புரிகிறது. உரத்தில் இருந்து பூச்சிக் கொல்லி மருந்துவரை ஒன்றின் மீது ஒன்றாக அடித்து இன்றைக்கு விவசாய பூமி உயிரிழந்துவிட்டது. உற்பத்தியைப் பெருக்க உரமிடங்கள் என்று ஒரு நேரத்தில் கூவிய மத்திய, மாநில அரசுகள் இன்றைக்கு உரத்திற்குக் கொடுக்கும் மானியச் சுமையை சமாளிக்க முடியவில்லை என்று கூறி, மண்ணிற்கு தக்கவாறு இரசாயண உரங்களை பயன்படுத்துங்கள் என்று மாற்றிப் பேசிக் கொண்டிருக்கிறது.

விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கொடுக்காத நடுவன் அரசும், அதனை அச்சு பிசகாமல் பின்தொடரும் மாநில அரசுகளும், அயல் நாட்டிலிருந்து அதிக விலைக்கு உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதில் அதீத ஆர்வம் காட்டுகின்றன. ஏனெனில் அவர்களுக்கு விவசாய உற்பத்தியை விட, இறக்குமதி வாணிபம் அதிகம் பயன் தருவதாக உள்ளது.

இந்தியாவின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 விழுக்காடு பங்களித்த வேளாண் உற்பத்தி இன்றைக்கு கால் பங்கிற்குக் குறைந்துள்ளது. விவசாய உற்பத்தி 4 விழுக்காடு அதிகரித்தால் போதும் என்கிறது அரசு.

பொய்க்கும் மழை, இடு பொருட்களின் விலையேற்றம், கட்டுப்படியாகாத கொள்முதல் விலை ஆகியவற்றால் நிலைகுலைந்த இந்தியாவின் விவசாயி, உள்ளூர் கடன் முதலைகளின் வட்டி வாயில் சிக்கி, மீள முடியாமல் தற்கொலை செய்து கொண்டு சாகும் நிலை இன்றளவும் தொடர்கிறது. 10 ஆண்டுகளில் 2 இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு உயிர் துறந்துள்ளனர். இறந்தபின் கருமாதி என்பதுபோல், காலம் கடந்து விழித்துக்கொண்ட மத்திய அரசு 69 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி அறிவித்தது. ஆயினும் தற்கொலை சாவுகள் தொடர்கின்றன.

முதலில் மண்ணிற்கு வேட்டு, இப்போது விதைக்க

இரசாயண உரங்களை ஊக்கவித்து மண்ணைக் கெடுத்து, விவசாயத்தை இலாபமற்ற தொழிலாக்கிய அரசுகள், இப்போது அயல் நாட்டு பெரு நிறுவனங்கள் ‘ஆய்வு’ செய்து உருவாக்கிய மரபணு மாற்றப்பட்ட விதைகளை பயன்படுத்துமாறு விவசாயிகளை நெருக்குகின்றன. பருத்தியிலிருந்து கத்தரிக்காய் வரை மரபணு மாற்ற விதைகளை பயன்படுத்துமாறு மத்திய அமைச்சரிலிருந்து மாநில முதலமைச்சர்கள் வரை ஆர்வமாய் ஆலோசனை சொல்கிறார்கள்.

அதிக விளைச்சலை அள்ளித் தந்து நம்மையும் வாழ வைத்து, நமது கால்நடைகளையும் வாழ வைத்த, நமது நாட்டிற்கு உணவுப் பாதுகாப்பை அளித்த பல விதைகள் இன்றைக்கு காணாமல் போய்விட்டன. வரலாற்றுக் காலந்தொட்டு ஆசியாவின் தலைசிறந்த வேளாண் பூமியாக இருந்த இந்தியா இன்று வளமற்ற, சொந்தத் தேவைக்கே உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யும் அவல நிலைக்கு வந்துள்ளது.
ஒற்றை வரியில் சொல்வதானால், உணவுப் பொருள் உற்பத்தியில் இண்டிபண்டன்டாக இருந்த இந்தியா, இன்று இறக்குமதியை நம்பும் டிபன்டெண்ட் நாடாகியுள்ளது. இது விடுதலைப் பெற்ற நம் நாட்டின் 63 ஆண்டுக்கால சாதனையாகும்.

இன்றும் தொடரும் வெள்ளையர் நிர்வாகம்

வெள்ளையரிடமிருந்து விடுதலைப் பெற்று அரை நூற்றாண்டுக் காலம் ஆகியும் இன்னமும் நமது நாட்டின் ஆட்சி – நிர்வாக அமைப்பு முழுமையாக வெள்ளையன் விட்டுச் சென்ற பாதையில்தான் தொடர்கிறது. அன்றைக்கும் கலெக்டர், இன்றைக்கும் கலெக்டர். அன்றைக்கும் எஸ்.பி. இன்றைக்கும் எஸ்.பி.!

நிர்வாக முறைதான் அப்படியே இருக்கிறது என்று நினைத்தால், அவர்களின் எண்ணங்களும், நடப்பும் கூட அப்படித்தான் இருக்கிறது. நம்மை ஆள்வோர் நமதாளாக இருந்தும் ஒரு சுதந்திர நாட்டின் குடிமக்களாக இதுநாள் வரை நாம் நடத்தப்படுவதில்லை. கலெக்டர் ஆபிசுக்கு போனாலும் கலக்கமாகத்தான் இருக்கிறது, காவல் நிலையத்தை நாடினாலும் நடுக்கமாகத்தான் இருக்கிறது.

வெள்ளையன் காலத்து கட்டடங்களைப் போல, அவன் விட்டுச் சென்ற ஆட்சி – நிர்வாக அமைப்பும் பலமாகவே உள்ளது. ஒரே வித்தியாசம், ‘அவன் ஆண்ட காலத்தில் இப்படியெல்லாம் ஊழல் இல்லையப்பா’ என்று பெரியவர்கள் கூறும் நிலையை உருவாக்கியுள்ளோம்.

அன்று ரெளலட் மட்டுமே, இன்று தடா பொடா என்.எஸ்.ஏ.

வெள்ளையன் காலத்தில் ரெளலட் சட்டம் கொண்டுவந்ததை கடுமையாக எதிர்த்தனர் நமது தலைவர்கள், போராடிய பல ஆண்டுக் கணக்கில் சிறையேகினர். அவனிடமிருந்து விடுதலைப் பெற்று 63 ஆண்டுகள் ஆகிவிட்டது. நமக்கென்று அரசமைப்புச் சட்டம் உள்ளது. தேசப் பற்றாளர் பாபா சாகேப் அம்பேத்கார் விடுதலைப் பெற்ற நாட்டின் குடிமக்களாகிய நமக்குள்ள அடிப்படை உரிமைகளுக்கு என்னென்ன பாதுகாப்பு வழங்கினாரோ, அதையெல்லாம் பிடிங்கிக்கொண்டு, கேள்வி முறையில்லாமல் ‘உள்ளே வைக்க’ அதிகாரம் வழங்கும் சட்டங்கள் ஒவ்வொரு ஆட்சியிலும் வெவ்வேறு பெயரில் இயற்றப்பட்டு நடைமுறையில் உள்ளன. பாபா மசூதியை இடிக்கவிட்டு அதன் மூலம் பெரும் கலவரத்தை உண்டாக்கி, தீவிரவாதம் வளர வழியேற்படுத்திவி்ட்டு அதனை ஒடுக்க தடா சட்டம் கொண்டுவந்தனர். அப்பாவி மக்கள் பல்லாயிரக்கணக்கில் பிணைய விடுதலையின்றி, வாழ்வுரிமையும், அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டும் பல ஆண்டுகள் சிறையடைக்கப்பட்டனர். விசாரணை நடந்தபோது பலரும் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டனர்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தடா பொடாவானது. மீண்டும் கைது, சிறையடைப்பு. அப்போது தீவிரவாதம், இப்போது பயங்கரவாதம். பாபர் மசூதியை இடித்து கலவரை ஏற்படுத்திய கட்சியும், நாட்டின் தலைநகரிலேயே பல்லாயிரக்கணக்கான சீக்கியர்களைக் கொன்று கொலைவெறித் தாண்டவமாடிய கட்சியும்தான் மாறி மாறி ஆட்சியில் உட்கார்ந்துகொண்டு தேசப்பற்றைப் பேசுகின்றன. அவர்கள் கொண்டு வந்த சட்டங்களினால் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கின்றன. இதைத்தான் இவர்கள் சட்டத்தின் ஆட்சி என்கின்றனர்.

மாநிலங்களுக்கு இடையிலான பகைமை

ஆற்றுப் பிரச்சனையில் இருந்து அணைப் பிரச்சனை வரை இந்தியாவின் மாநிலங்களுக்கு இடையே பல பத்தாண்டுகளாக நீடித்துவரும் தகராறுகளுக்கு நீதிமன்றங்களும், தீர்ப்பாயங்களும் தீர்வைத் தந்ததும் மோதல் நிற்கவில்லையே!

கர்நாடக்கதிற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே காவிரியாற்றுப் பிரச்சனை 35 ஆண்டுகளாக நீடிக்கிறது. கேரளத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை 30 ஆண்டுகளாக நீடிக்கிறது. யமுனா நதி நீர்ப் பகிர்வு தொடர்பாக பஞ்சாபிற்கும் இராஜஸ்தானிற்கும் இடையே நீடிக்கிறது. அலமாட்டி அணைப் பிரச்சனை கர்நாடகத்திற்கும் ஆந்திராவிற்கும், இப்போது கோதாவரி நதியின் குறுக்கே அணைக் கட்டுவதில் மராட்டியத்திற்கும் ஆந்திரத்திற்கும் பிரச்சனை முளைத்துள்ளது. இதில் எதிலுமே ஒரு நிலையெடுத்து தீர்த்து வைத்ததில்லை மத்திய அரசு. நதி நீர்த் தகராறு தீர்க்க சட்டம் இருக்கிறது. நீர்வளத் துறை மத்திய அரசிடம் உள்ளது. ஆனால் எதிலும் தலையிடாமல் ஆட்சியைத் தக்க வைப்பதிலேயே குறியாகவுள்ளது.

காஷ்மீர் அரை நூற்றாண்டுச் சிக்கல்!

காஷ்மீரை இந்தியாவின் ஒரு அங்கம் என்று வீராவேசமாகக் கூறுவதில் காங்கிரஸ், பா.ஜ.க. இடையே வேற்றுமையில்லை. ஆனால் அந்த மக்களின் அரசியல் ரீதியான எதிர்ப்பார்ப்பிற்கு எப்படித் தீர்வு காண்பது என்பதில் இரு கட்சிகளுமே நேர்மையைக் காட்டுவதில்லை. நாட்டுப் பிரிவினையின் போது இந்தியாவோடு இருப்போம் என்று தீர்மானித்த தலைவர் காஷ்மீர் சிங்கம் ஷேக் அப்துல்லா. ஆனால் அவருக்கு அளித்த உறுதி மொழியை மீறி சிறையில் அடைத்தார்கள். அவர் இருக்கு்ம்போது சுயாட்சியை அளித்து பிரச்சனையை தீர்த்திருக்கலாம். ஆனால் அந்த மாபெரும் மக்கள் தலைவரை பிரிவினைவாதி என்று கூறி சிறையில் அடைத்தார்கள். கால் நூற்றாண்டுக் காலம் போராடிப் பார்த்துவிட்டு அவரும் போய் சேர்ந்தவிட்ட பின்னர்தான், பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. இவர்கள் செய்த தவறுகளின் விளைவு, அந்த மக்களை இந்தியாவிலிருந்து அந்நியப்படுத்திவிட்டது.

5 இலட்சத்திற்கும் அதிகமாக பாதுகாப்புப் படைகளை நிறுத்தி, அங்கே தங்களுடைய அதிகாரத்தை நிலை நிறுத்த மத்திய மாநில அரசுகள் முயற்சிக்கின்றன. ஆனால் அதனை எதிர்த்து ஆண்கள் பெண்கள் மாணவர்கள் சிறுவர் என்று அனைவரும் வீதிக்கு வந்து போராடுகிறார்கள். அந்த போராட்டத்திற்கு காரணமென்ன என்பதை அறிந்தே, பாகிஸ்தானில் இருந்து தூண்டிவிடப்படுவதாக உள்துறை அமைச்சர் திசைதிருப்புகிறார்.

பழங்குடியினரை வெளியேற்ற பச்சை வேட்டஇந்தியாவின் நடுப்பகுதியில் 5 மாநிலங்களைப் பற்றிக்கொண்டு பரவிக் கிடக்கும் தண்டகாரண்ய காடுகளில் பொதிந்திருக்கும் வளத்தைக் கைப்பற்ற அங்கே தொன்றுதொட்டு வாழ்ந்துவரும் பழங்குடியினரை வெளியேற்ற மத்திய மாநில அரசுகளே வன்முறைக் கும்பலை உருவாக்கி ஏவியதன் விளைவு, அங்கே இரத்தக் களறி அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

மீனவரைப் பாதுகாக்க நாதியில்ல

7,000 கி.மீ. நீளமுடைய தீபகற்ப இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவர்கள் இந்தியக் கடற்பகுதியிலும், சர்வதேசக் கடற்பரப்பிலும் சென்று நிம்மதியாக மீன் பிடித்து வாழ்கின்றனர். எல்லையைத தாண்டி மீன் பிடிக்கும்போது பாகிஸ்தான், வங்கதேச நாடுகளின் கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்டாலும், கெளரமாக நடத்தப்பட்டு, கைதிகள் பறிமாற்றம் நடக்கும்போது விடுவிக்கப்படுகிறார்கள்.

ஆனால், தமிழக மீனவர்கள் மட்டும் சிறிலங்க கடற்படையினரால் கடந்த 27 ஆண்டுகளாக தொடர்ந்து தாக்கப்பட்டு 500க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். பல ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் காயப்படுத்தப்பட்டுள்ளனர். சிறிலங்க படையினரால் நிர்வாணப்படுத்தி கேவலப்படுத்தப்படுகின்றனர். ஆனால் டெல்லி ஏனென்று கேட்கவில்லை!

சேதுபதி ஜமீனிற்குச் சொந்தமான கச்சத்தீவு, தகராறுக்குட்பட்ட பகுதி என்று கூறி, தமிழரின் ஒப்புதலின்றி, இலங்கைக்கு தாரை வார்த்து ஒப்பந்தம் போடுகிறது இந்திய அரசு. வெள்ளையன் ஆட்சியில் நம்மோடு இருந்த கச்சத் தீவு நமது அரசு வந்துவுடன் அந்நிய நாட்டிற்குத் தாரை வார்க்கப்படுகிறது. தமிழ்நாடு எழுப்பும் கேள்விகளுக்கு பதிலில்லை, தமிழக மீனவரின் நலன் காகவும் நாதியில்லை. இங்குள்ள அரசு புத்தருக்கு நிகரான மெளன சாமியாகி கண்ணை மூடி தியானத்தில் மூழ்கி பதவிப் பரவசத்தில் தன்னை மறந்த நிலையில் உள்ளது.

தொழிலாளர் நலச் சட்டங்கள் தூங்குகின்ற

பொதுவுடைமை நாடுகளுக்கு இணையாக நமது நாட்டில் தொழிலாளர் நலச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு நடைமுறையில் இருந்தது. இன்றைக்கு புதிய பொருளாதாரம், உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்று கூறி தொழிலாளர் நல உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

அரசு உருவாக்கும் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இச்சட்டங்களுக்கு இடம் கிடையாது. வேலை நாடி வந்த தொழிலாளர்கள் அடிமைப் போல் நடத்தும் நிலை காலனி ஆதிக்கக் காலத்தை நினைவுபடுத்துகிறது என்கின்றனர். தொழிலாளர் நலன் என்பது தவறான வார்த்தையாக பெரு நிறுவனங்கள் பார்க்கின்றன.

அமெரிக்காவிற்கு அடிமையான அயலுறவு

நாட்டின் தொழில். விவசாயம், பாதுகாப்பு, கல்வி, மருத்துவம், ஆராய்ச்சி ஆகிய முக்கியத் துறைகள் அனைத்திலும் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற (இரு நாடுகளின் நலனையும் இணைக்கும்) ஸ்ட்ராட்ஜிக் ஒப்பந்தத்தம் 2006ஆம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்தே இந்திய அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இப்போது அமெரிக்க நிறுவன நலன்களைப் பேணும் வகையில் அணு சக்தி விபத்து இழப்பீடு காப்பு சட்ட வரைவை நிறைவேற்ற மன்மோகன் சிங் அரசு தீவிரம் காட்டிவருகிறது. அமெரிக்காவின் வசதியே இந்தியாவின் அயலுறவு மற்றும் உள்நாட்டு பொருளாதார நலன் என்ற நிலை உருவாகும் நாள் தூரத்தில் இல்லை.

இலங்கையில் ராஜபக்சவின் சிங்கள இனவெறி அரசு நடத்திய தமிழினப் படுகொலைக்கு டெல்லி அரசு எப்படியெல்லாம் துணை போனது என்பதை விவரிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவின் போரை நான் நடத்தினேன் என்று ராஜபக்ச கூறியதன் பொருள் என்னவென்று இன்று வரை டெல்லி கேட்கவில்லை.
ஒரு நேரத்தில் அணி சேரா நாடுகளின் தலைமைப் பொறுப்பேற்று, உலகிலுள்ள ஜனநாயக நாடுகளுக்கு எல்லாம் வழிகாட்டிய திகழ்ந்த இந்தியா, இன்று தனது பொருளாதார சாம்ராஜ்யத்தை காத்துக் கொள்ள போராடிக்கொண்டிருக்கும் ஒரு வல்லரசின் துணைக் கோளாக திகழ்கிறது.

ஜனநாயகத்தின், ஆன்மீகத்தின் வழிகாட்டியாக இந்தியா திகழ வேண்டும் என்று இந்நாட்டிற்குச் சுத்ந்திரம் பெற்றுத் தந்த தலைவர்கள் கனவு கண்டார்கள். ஆனால், அவர்களின் கனவுகளை மட்டுமல்ல, மக்களையும் மறந்த அதிகாரத் திலகங்களாக நமது நாட்டுத் தலைவர்கள் நாட்டை தாழ்த்திவிட்டனர். 150 ஆண்டுகள் போராடிப் பெற்ற சுதந்திர கேலிக்கூத்தாக்கப்பட்டு நிற்கிறது.

நாமாவது அந்த தலைவர்கள் கன்ட கனவை நிறைவேற்ற இந்த நாளில் உறுதியேற்போமா?

வெள்ளையரின் ஆதிக்கம் இந்துஸ்தானத்தில் ஏற்பட்டுவிடாமல் தடுத்திட தனது படைபலம், செல்வம், நட்பு ஆகிய அனைத்தையும் சேர்த்து மிகக் கடுமையாகப் போராடிய மாவீரன் திப்பு சுல்தானை, 1799ஆம் ஆண்டு ஸ்ரீரங்கப்பட்டினத்தில் நடந்த பெரும் பேரில் கொன்றவிட்டு அமைந்ததுதான் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம். இதற்கு மேல் இந்தியா எனும் ஆசியாவின் துணைக் கண்டம் நிரந்தரமாகத் தன்னுடையதே என்று எண்ணி, இந்த நாட்டின் சிற்றரசர்கள் ஒவ்வொருவரையும் அழித்து அல்லது நட்பெனும் பெயரில் அடிமைப்படுத்தி பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தி நிலைப்படுத்தியது. இந்த நாட்டின் செல்வச்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *