நிலமெல்லாம் ரத்தம் – 43 & 44
by Abdul Rashid
43] ஐரோப்பிய தேசங்களுக்கிடையே யுத்தங்கள்.
நிலமெல்லாம் ரத்தம் – 43
உலக நாடுகள் ஒவ்வொன்றும் தமது பக்கத்து நாட்டுடன் உறவு அல்லது பகையை எப்படி வளர்த்துக்கொண்டன என்று ஆராயப்போனால் மூன்று அல்லது நான்கு காரணங்களுக்குள் இதற்கான விடை அடங்கிவிடும்.
எல்லைப்பகுதி நிலப்பரப்பு, எல்லையோர மக்களின் மொழி, கலாசாரம், சமயம் ஆகியவை, அடுத்த தேசத்தின் அரசியல் ஸ்திரத்தன்மை அல்லது ஸ்திரமின்மை. அவ்வளவுதான்.
இந்தச்சில காரணங்களால்தான் உலகில் ஒவ்வொரு தேசமும் தன் அடுத்த தேசத்துடன் எப்போதும் மல்லுக்கு நிற்கவேண்டியதாகிறது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல ஐரோப்பிய தேசங்கள் மேற்கண்ட காரணங்களை முன்னிட்டு எந்தக்கணமும் தன் அண்டை தேசத்துடன் ஒரு முழுநீள யுத்தம் செய்யத் தயாராக இருந்தன.
ஒவ்வொரு தேசமும், அடுத்த தேசத்துக்குத் தெரியாமல் தன்னுடைய ஆயுதபலத்தை அதிகரித்துக்கொண்டிருந்தது. ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை நம்பமுடியாத அளவுக்கு உயர்த்திக்கொண்டிருந்தது.
ராணுவத்துக்கு ஒதுக்கும் வருடாந்தர நிதியின் அளவு, இதர இனங்களுக்கு ஒதுக்கப்படும் தொகையைக் காட்டிலும் குறைந்தது பத்து மடங்கு அதிகமாக இருந்தது.
இவையெல்லாம் ஒரு தேசம் அல்லது இரண்டு மூன்று தேசங்களில் நடந்த காரியங்கள் அல்ல. கிட்டத்தட்ட ஒட்டுமொத்த ஐரோப்பாவும் இப்படித்தான் இருந்தது. ஆனால், ஒவ்வொரு தேசமும் தன்னுடைய இந்தப் போர்த்தயாரிப்பு நடவடிக்கை மற்றவர்களுக்குத் தெரியாது என்றே நம்பிக்கொண்டிருந்தன.
உலகப்போர் என்று யாரும் சொல்லிவிட்டு ஆரம்பிக்கவில்லை. ஒரு சிறிய எல்லையோரத் தகராறாகத்தான் அது தொடங்கி முடிவுபெற்றிருக்க வேண்டும்.
துரதிருஷ்டவசமாக அந்தச் சிறு எல்லைத்தகராறு ஆஸ்திரிய இளவரசர் ஃப்ரான்சிஸ் பெர்ட்டினாண்டின் படுகொலைக்குக் காரணமாக அமைந்துவிட, ஆஸ்திரியாவுக்கும் செர்பியாவுக்கும் யுத்தம் மூண்டது.
இதன் காரணத்தைச் சற்று சுருக்கமாகப் பார்த்துவிட்டு மேலே போய்விடலாம்.
இன்றைக்கு ஆஸ்திரியா, ஹங்கேரி என்று இரண்டு தேசங்கள் வரைபடத்தில் இருக்கின்றன அல்லவா?
ஆனால், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அவை ஒரே தேசமாக இருந்தன. ரஷ்ய எல்லையை ஒட்டி அமைந்திருந்த ஒரு ஐரோப்பிய தேசம் அது. அந்த எல்லையோர தேசத்தின் எல்லைப்பகுதி, இன்றைக்கு போஸ்னியா என்று அழைக்கப்படுகிறது. அப்போது அதுவும் ஆஸ்திரியாவின் ஒரு பகுதிதான்.
ஒரே தேசம் என்றாலும் போஸ்னிய மக்களின் இனம் வேறு. அவர்கள் ஸ்லாவ் என்று அழைக்கப்பட்டார்கள். போஸ்னியாவுக்குப் பக்கத்தில் இருந்த செர்பியாவிலும் பெரும்பான்மை மக்கள் ஸ்லாவ் இனத்தைச் சேர்ந்தவர்கள்தாம்.
ஆஸ்திரிய மக்களின் மொழி, கலாசாரம் ஆகியவற்றோடு எந்த சம்பந்தமும் இல்லாத போஸ்னியப் பகுதி ஸ்லாவ் இன மக்கள் தமது உடன்பிறப்புகள் என்றும், போஸ்னியாவை எப்படியாவது ஆஸ்திரியாவின் பிடியிலிருந்து விடுவித்துத் தன்னுடன் இணைத்துக்கொண்டுவிடவேண்டுமென்றும் செர்பியா விரும்பியது.
தொடர்ந்து போஸ்னிய ஸ்லாவ்களைத் தூண்டிவிட்டு உள்நாட்டுக் கலவரங்களை அவ்வப்போது நடத்திக்கொண்டிருந்தது.
இந்தக் கலவரம் அல்லது கிளர்ச்சியை அடக்குவதற்காகத்தான் ஆஸ்திரிய இளவரசர் (அவர் ராணுவத்தளபதியும் கூட.) ஃப்ரான்சிஸ் பெர்ட்டினாண்ட் போஸ்னியப் பகுதிக்கு வந்து தங்கியிருந்தார்.
செரஜிவோ என்கிற நகரில் கூடாரம் அடித்துத் தங்கியிருந்த இளவரசரை, சரஜீவோ காவ்ரிலோ ப்ரின்ஸி என்கிற ஒரு ஸ்லாவ் இன இளைஞன் சுட்டுக்கொன்றான்.
ஆகவே, ஆஸ்திரியா இந்தப் படுகொலைக்கு செர்பியாதான் காரணம் என்று சொல்லி, செர்பியாவின் மீது போர் தொடுத்தது. போரில் ஆஸ்திரியா மட்டும் ஈடுபட்டிருக்கலாம்.
ஆனால், தனது அப்போதைய நட்பு நாடான ஜெர்மனியை உதவிக்கு அழைத்தது. ஆஸ்திரியாவுக்கு ஒரு ஜெர்மனி என்றால், செர்பியாவுக்கு உதவ ரஷ்யா முன்வந்தது.
எப்படி ஆஸ்திரியா, ஜெர்மனி என்கிற இரு தேசங்களுக்குமே செர்பியாவைக் கைப்பற்றும் ரகசிய வேட்கை இருந்ததோ, அதேபோலத்தான் ரஷ்யாவுக்கும் ஆசை இருந்தது. எதிரிக்கும் நண்பனுக்கும் தன்னை விழுங்கத்தான் ஆசை என்பது தெரியாத செர்பியா, அந்த யுத்தத்தின் சரியான பகடைக்காய் ஆனது.
ரஷ்யாவுக்கு ஜெர்மனியை ஒழித்துக்கட்டவேண்டும் என்கிற இன்னொரு ஆசையும் இருந்தது. அதுவும் போஸ்னியாவுக்குத் தெரியாது.
அது 1914-ம் வருடம். ஜூலை மாதம், 28-ம் தேதி. நான்கு ஐரோப்பிய தேசங்கள் பங்குகொண்ட அந்த பிரசித்தி பெற்ற யுத்தம் ஆரம்பமானது.
யுத்தம் தொடங்கியபோதே ஒட்டுமொத்த ஐரோப்பாவும், பிரான்ஸ் இப்போது என்ன செய்யப்போகிறது என்றுதான் பார்த்தது. ஏனென்றால் பிரான்ஸுக்கும் ஜெர்மனிக்கும் பெரும்பகை இருந்த காலம் அது.
ஜெர்மனிக்கு எதிராக ஏதாவது நடவடிக்கை எடுக்க பிரான்ஸ் சமயம் பார்த்துக்கொண்டிருந்தது. இதை அறிந்த ஜெர்மனி, எங்கே பிரான்ஸ் மூக்கை நுழைத்தால் யுத்தத்தின் நோக்கம் திசைமாறிவிடுமோ, செர்பியாவைக் கைப்பற்ற முடியாமல் போய்விடுமோ என்று அஞ்சி, பிரான்ஸ் நடுநிலைமை வகிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
பிரான்ஸுக்கு அப்போது நடுநிலைமை வகிக்கும் உத்தேசமெல்லாம் இல்லை. மாபெரும் யுத்தம் ஒன்றுக்கான ஆயத்தங்களைச் செய்துவைத்துவிட்டு, சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்த தேசம் அது. தவறவிடுமா? ஆகவே எப்படியும் யுத்தத்தில் பங்குபெற்றே தீர்வது என்று முடிவு செய்தது.
ஜெர்மனிக்குக் கோபம் வந்தது. செர்பியா ஒரு கொசு. அதை எப்போது வேண்டுமானாலும் அடித்துக்கொல்லலாம்; முதலில் பிரான்ஸை ஒழித்துவிடலாம் என்று முடிவு செய்து, யாரும் எதிர்பாராத கணத்தில் பெல்ஜியம் வழியாக பிரான்ஸை நோக்கி ஒரு பெரும் படையை அனுப்பிவிட்டது.
இங்கும் பிழை. ஒரு தேசத்தின் வழியே இன்னொரு தேசத்துக்குப் படை அனுப்புவதென்றால், வழியில் உள்ள தேசத்திடம் முதலில் அனுமதி கேட்கவேண்டும். ஜெர்மனி அதைச் செய்யவில்லை. அதுவும் யுத்தத்தில் நடுநிலைமை வகிப்பதாக பெல்ஜியம் அறிவித்திருந்த சமயம் அது.
நடுநிலைமை வகிக்கும் தேசத்தின் வழியாக ஜெர்மனி படைகளை அனுப்புவது வீண் வம்பு மட்டுமே என்று கருத்துத் தெரிவித்த பிரிட்டன், ஜெர்மனிக்கு எதிராகப் போரில் குதித்தது. பிரிட்டன் போரில் இறங்கியது தெரிந்ததும், அதன் நட்பு நாடான ஜப்பானும் களத்தில் இறங்கியது. ஜப்பானுக்கு ஜெர்மனியைப் பிடிக்காது.
எல்லோருமே ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துக்குத் தான் காத்திருந்தார்கள். ஆகவே இந்த ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததும் தவறவிடாமல் பயன்படுத்திக் கொண்டுவிட்டார்கள்.
இந்தப் பக்கம் ருமேனியா, பிரிட்டனுடன் சேர்ந்துகொண்டது. அந்தப்பக்கம் பல்கேரியா, ஜெர்மனியுடன் இணைந்துகொண்டது. இங்கே சீனாவும் பிரிட்டனை ஆதரித்தது.
துருக்கி, ஜெர்மானிய அணியில் இணைந்தது. ஒட்டாமான்களின் துருக்கி. ஐரோப்பாவை மத்திய ஆசியாவுடன் இணைக்கும் பாலம்போல் அமைந்திருந்த துருக்கி. மாபெரும் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தை மத்தியக்கிழக்கில் வேரூன்ற வழிசெய்த துருக்கி.
பாலஸ்தீனத்தை அப்போது ஆண்டுகொண்டிருந்த துருக்கி.
ஐரோப்பா எப்படி போப்பாண்டவருக்கு அடிபணிந்து நடந்ததோ, அதுமாதிரி அப்போது ஒட்டுமொத்த மத்திய ஆசியாவும் இஸ்தான்புல் அதிகார மையத்துக்குக் கட்டுப்பட்டே நடந்தது.
பெரிய அளவில் இன மோதல்களுக்கோ, இட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கோ வழியில்லாமல் ஒரு கட்டுக்கோப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது ஒட்டாமான் துருக்கியப் பேரரசு.
சுல்தான், யூதர்களை அரவணைத்துத்தான் போனார். கிறிஸ்துவர்களும் அங்கே பிரச்னையின்றி வாழமுடிந்தது. ஒருவருக்கொருவர் பகைவர்தான் என்று உள்மனத்தில் எண்ணம் வேரூன்றியிருந்தாலும் வெளியில் தெரியாத வண்ணம் பூசி மெழுகத் தெரிந்திருந்தது அவர்களுக்கு. பகையையோ, பிளவையோ தவிர்க்கமுடியாது என்றாலும் தள்ளிப்போட முடியும் என்பது தெரிந்திருந்தது.
ஆனால் இதெல்லாமே உள்நாட்டு விவகாரங்கள். ஒட்டுமொத்த ஐரோப்பாவும் பங்குபெறும் ஒரு யுத்தம் என்று வரும்போது, துருக்கியும் ஒரு நிலையை எடுத்து பகிரங்கமாக அறிவிக்கத்தான் வேண்டியிருந்தது. துருக்கி சுல்தான், ஜெர்மானிய ஆதரவு நிலை எடுத்தார். ஆகவே, பிரிட்டன், துருக்கியின் எதிரி தேசமாகிப்போனது.
நவீன காலத்தில், குறிப்பாக இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாலஸ்தீன் பிரச்னை புதிய பரிமாணம் எடுப்பதற்குத் தொடக்கக் கண்ணியாக இருந்த சம்பவம் இதுதான்.
முதல் உலகப்போரில் பங்குபெற்ற ஒவ்வொரு தேசத்துக்கும் இருந்த அரசியல் காரணங்கள், நியாயங்கள் போன்றவை இந்த வரலாற்றுக்குச் சம்பந்தமில்லாதவை.
ஆனால் கவனிக்கவேண்டிய ஒரு விஷயம் உண்டு. இந்த யுத்தத்தில் பங்குபெற்ற யூதர்கள் பற்றிய குறிப்பு அது.
தமக்கென ஒரு தனிநாடு வேண்டுமென்று போராடிக்கொண்டிருந்த யூதர்கள், அந்தத் தனிநாடு பாலஸ்தீனில்தான் அமையவேண்டும் என்று விரும்பிய யூதர்கள், சொந்த இடம் என்று ஒன்று இல்லாமல் ஐரோப்பாவெங்கும் பரவி வசித்துக்கொண்டிருந்த யூதர்கள், யுத்தம் ஆரம்பித்தபோது ஒவ்வொரு ஐரோப்பிய தேசத்திலும் இருந்த யூதர்கள் போரில் தம்மையும் இணைத்துக்கொண்டார்கள்.
அதாவது, ஒவ்வொரு தேசமும் யுத்தம் தொடங்குமுன் அளித்த வாக்குறுதிகளில் யூதர்களுக்கும் ஏதோ கொஞ்சம் நம்பிக்கையளிக்கும் விதத்தில் பேசியிருந்தன. ஆகவே, யுத்தத்தில் பங்கெடுப்பதின்மூலம், யுத்தம் முடிந்தபிறகு சில சாதகமான பலன்களைப் பெறமுடியும் என்று யூதர்கள் கருதினார்கள்.
சரித்திரத்தில் அதற்குமுன் எந்த சந்தர்ப்பத்திலும் ‘ஒரே இனம்’ என்கிற அடையாளத்தை எக்காரணத்துக்காகவும் விட்டுக்கொடுக்காமல் போராடிய யூதர்கள், முதல் முறையாக தாம் வாழும் தேசங்களின் சார்பில் யுத்தத்தில் பங்கெடுத்தார்கள்.
அதாவது ஒரு படையில் யூதர்கள் இருக்கிறார்கள் என்றால், எதிரிப் படையிலும் அந்நாட்டு யூதர்கள் இருப்பார்கள்.
தேசத்துக்காக, சொந்த இனத்தைச் சேர்ந்தவரோடு யுத்தம் புரிந்தாகவேண்டிய நெருக்கடி! யூதர்களை யூதர்களே அடித்துக் கொல்ல வேண்டிய கட்டாயம்.
யுத்தத்துக்குப் பிறகு ஐரோப்பிய தேசங்களின் அரசியல் சூழ்நிலை மிக நிச்சயமாக மாறும்; ஒவ்வொரு தேசமும் அதுவரை எடுக்காத பல புதிய முடிவுகளை எடுத்தே தீரும் என்று யூதர்கள் நினைத்தார்கள். அப்படியரு சூழல் வரும்போது, எந்த தேசம் வெற்றி பெற்ற அணியில் இருக்கும், எது தோல்வியுற்ற அணியில் இருக்கும் என்று இப்போது சொல்ல முடியாது. யார் வென்றாலும் யூதர்களின் தனிநாடு கோரிக்கை ஏற்கப்பட்டாக வேண்டும்.
பாலஸ்தீனில் அவர்களுக்கான பங்கை உறுதி செய்தாகவேண்டும். யார் ஜெயிப்பார்கள் என்று ஜோசியம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. ஆகவே, எல்லா தேசங்களின் படைகளிலும் யூதர்கள் இருந்தாக வேண்டியது அவசியம்.
களப்பலி போல சொந்தச் சகோதரர்கள் சிலரை இழந்தே தீரவேண்டியிருக்கும். ஆனால் நீண்டநாள் நோக்கில், யூதர்களுக்கான தனிநாடு என்கிற இலக்கை அடையவேண்டுமானால் இது தவிர்க்கவே முடியாதது என்று அவர்கள் நினைத்தார்கள்.
ஆகவே, ஐரோப்பிய யூதர்கள் அத்தனை பேரும் தத்தமது தேசத்தின் ராணுவத்துடன் தம்மை இணைத்துக்கொள்ள ஆரம்பித்தார்கள்.
பல தேசங்களின் ராணுவத்தில் யூதப் படைப்பிரிவே தனியாக அமைக்கப்பட்டது. அவர்கள் எதிரி தேசத்தின் யூதப் படையுடனேயே மோத வேண்டி இருந்தது.
எத்தனை உணர்ச்சிமயமான கட்டம்! ஆனாலும் தம் உணர்ச்சியைக் காட்டிக்கொள்ளாமல் யூதர்கள் உலக யுத்தத்தில் பங்கெடுத்தார்கள். நூற்றுக்கணக்கில். ஆயிரக்கணக்கில். லட்சக்கணக்கில்!ஒரே நோக்கம்தான். ஒரே எதிர்பார்ப்புதான். யுத்தத்தின் இறுதியில் தமக்கொரு தனிநாடு!
Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:”Table Normal”; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:””; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:”Calibri”,”sans-serif”; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:”Times New Roman”; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;}
44.முதல் உலகப்போரில் யூதர்களின் பங்களிப்பு
நிலமெல்லாம் ரத்தம் – 44
முதல் உலகப்போரில் யூதர்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல.
போருக்குப் பின் ஐரோப்பிய அரசியல் சூழலில் இருந்த வெப்பம் தணிந்து, யாராவது கரம் கொடுத்துத் தங்களைத் தூக்கிவிடமாட்டார்களா?
தங்களுக்கென்று ஒரு தனிதேசம் அமையாதா? என்கிற மாபெரும் எதிர்பார்ப்பு அவர்களிடம் இருந்தது. கொள்கைரீதியில் அவர்கள் தமக்கான அணியைத் தேர்ந்தெடுக்கும் நிலையில் எல்லாம் இல்லை. எல்லா அணிகளிலும் இருப்பது.
போரில் ஜெயித்தாலும் சரி, தோற்றாலும் சரி. ஜெயிக்கிற அணி எதுவானாலும் அதில் யூதர்களும் இருப்பார்கள். சொல்லிக்கொள்ள சௌகரியமாக, தாங்கள் வாழும் தேசத்தின் படையில் இருக்கிறோம் என்று காட்டிக்கொள்வது.
இப்படியரு சிந்தனைகூட உலகில் வேறு எந்த இனத்துக்கும் எந்தக் காலத்திலும் தோன்றியதில்லை. உண்மையில் ஐரோப்பாவெங்கும் யூதர்கள் வசித்து வந்தார்கள் என்றாலும் எந்த தேசத்தின் குடிமக்களாகவும் மனத்தளவில் அவர்கள் போரில் பங்கெடுக்கவில்லை. மாறாக, யூத குலத்தின் நலனுக்கு போரின் முடிவில் யாராவது உதவுவார்கள் என்கிற ஒரே ஒரு எதிர்பார்ப்புதான்.
ஒருபுறம், சாமானிய யூதர்கள் படைகளில் சேர்ந்து யுத்தகளத்துக்குப் போய்விட, மறுபுறம் யூதத் தலைவர்களும் ராஜதந்திரிகளும் அரசியல் மேல்மட்டங்களில் பேச்சுவார்த்தைகள் நடத்த ஆரம்பித்தார்கள்.
போர்ச்செலவுகளுக்காக ஏராளமான பணத்தை யூதர்கள் வசூலித்து வழங்கினார்கள்.
இதுவும் எல்லா தேசங்களுக்கும். எப்படி நம் தேசத்தில், தேர்தல் சமயங்களில் மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்கள் எல்லாக் கட்சிகளுக்கும் நிதி உதவி செய்யுமோ அதே மாதிரி. எந்தக் கட்சி வென்றாலும் தமது தொழில் தடையின்றி அவர்களுக்கு நடந்தாக வேண்டும்.
யூதர்களுக்கும் யார் போரில் வென்றாலும் தங்களுக்கு இஸ்ரேலை உருவாக்கித் தரவேண்டும். அவ்வளவுதான்.
குறிப்பாக ஜெர்மனிக்கு எதிராக பிரிட்டன் போரில் குதித்தவுடன் இங்கிலாந்தில் வசித்துவந்த யூதர்கள் அதுவரை இல்லாத வேகத்தில் தமது அரசை ஆதரிக்க ஆரம்பித்தார்கள். லட்சக்கணக்கில் பணம் வசூலித்து போர்நிதியாக அளித்தார்கள். இப்படி வசூல் நடத்திப் பணம் தந்தது தவிர, அன்றைக்கு இங்கிலாந்தில் வசித்துவந்த பெரும் பணக்கார யூத வர்த்தகர்கள் அரசின் பல செலவினங்களைத் தாமே நேரடியாகவும் ஏற்றுக்கொண்டார்கள்.
உதாரணமாக, ராணுவத்தினருக்கு ஆடைகள் தைப்பது, மருந்துப்பொருள்கள் வாங்குவது, ஆயுதங்கள் வாங்கிச் சேகரிப்பது போன்ற பல செலவினங்களுக்கு யூத வர்த்தக முதலைகளே நேரடியாகப் பணம் தந்துவிடுவார்கள். பொருள்கள் நேரடியாக அரசுக்குப் போய்விடும். பணத்தை மட்டும் இவர்களிடம் வாங்கிக்கொள்ளவேண்டும்.
இதைவிட யூதர்கள் பிரிட்டனுக்குச் செய்த மகத்தான உதவி ஒன்று உண்டு. ஜெர்மனியில் உள்ள யூதர்களின் உதவியுடன் ஜெர்மானியப் படைகளின் இலக்கு, செல்லும் பாதை, தீட்டும் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மிக முக்கிய விவரங்களைச் சேகரித்து ரகசியமாக பிரிட்டிஷ் அரசுக்குத் தெரிவித்து வந்தார்கள்.
ஜெர்மனி யூதர்கள், ஜெர்மன் ராணுவத்தில் இடம்பெற்று அதே பிரிட்டனை எதிர்த்துக்கொண்டிருந்தார்கள் என்றபோதும் இந்தப் பணியும் எவ்வித மனத்தடங்கலும் இல்லாமல் நடக்கத்தான் செய்தது! (இதே வேலையை ஜெர்மன் ராணுவத்துக்காக பிரிட்டன் யூதர்களும் செய்திருக்க வேண்டும். ஆனால் அதற்கான உரிய ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை.)
புரிந்துகொள்வதற்கு மிகவும் சிக்கலான விஷயமாக இது தோன்றலாம். உண்மை இதுதான்.
யூதர்கள் எந்த தேசத்தின் ராணுவத்தில் இருந்தாலும் அவர்களுக்கு அந்தந்த தேசத்தின்மீது பக்தியோ, பெரிய ஈடுபாடோ கிடையாது. மாறாக, தமது இனத்துக்காகச் செய்யும் கடமையாகவே அதைக் கருதினார்கள். யுத்தத்துக்குப் பிறகு இஸ்ரேல் உருவாக வேண்டும். அதுதான். அது ஒன்றுமட்டும்தான் அவர்களது நோக்கம்.
முதல் உலகப்போரில் கலந்துகொண்ட யூதப் பிரபலங்கள் யார் யார் என்று தெரிந்தால் ஆச்சர்யமாக இருக்கும். புகழ்பெற்ற தத்துவஞானி லுட்விக் விட்ஜென்ஸ்டைன் இந்தப் போரில் ரஷ்யப் படையின் ஒரு பிரிவுக்குத் தலைமை தாங்கி ஆஸ்திரியாவில் சண்டை போட்டுக்கொண்டிருந்தார்.
ஐ.நாவின் மனித உரிமை கமிஷனின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட (அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்டுடன் இணைந்து இப்பொறுப்பை வகித்தவர்) ரெனே கேஸின் முதல் உலகப்போரில் ஈடுபட்ட பிரெஞ்சுப் படையில் பணியாற்றியவர். போரில் மிகப்பலமான காயமடைந்து பின்னால் அதனாலேயே பிரான்ஸ் அரசின் மிக உயர்ந்த விருதைப் பெற்றவர்.
டைபாய்ட், பாராடைஃபாய்ட் காய்ச்சலுக்குக் காரணமான பாக்டீரியாவையும் அதற்கான மாற்று மருந்தையும் கண்டுபிடித்து உலக அளவில் இன்றும் கொண்டாடப்படும் மாபெரும் மருத்துவரான லுட்விக் ஹிர்ஸ்ஃபெட் யுத்த சமயத்தில் ஜெர்மானியப் படைகளுக்கான மருத்துவராக செர்பியாவில் பணியாற்றிக்கொண்டிருந்தவர்.
‘கான் வித் தி விண்ட்’ என்கிற புகழ்பெற்ற திரைப்படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்தப் படத்தில் நடித்து உலகப்புகழ் பெற்ற யூதரான லெஸ்லி ஹோவர்ட் உலகப்போரில் துடிப்புமிக்க பிரிட்டிஷ் ராணுவ வீரர்! (இவர் இரண்டாம் உலகப்போரிலும் பிறகு பங்குபெற்றார்)
முதல் உலகப்போர் சமயத்தில்தான் யுத்தத்தில் ஹெலிகாப்டர்களின் பங்களிப்பு இடம்பெறத் தொடங்கியது. யுத்த சாத்தியங்களுக்கேற்ற வகையில் ஹெலிகாப்டரை வடிவமைத்து வெற்றிகரமாக இயக்கிக் காட்டியவரும் ஒரு யூதர்தான். அவர் பெயர் தியோடர் வோன் கர்மன். புடாபெஸ்ட் நகரைச் சேர்ந்த பொறியியல் வல்லுநர் அவர். ஆஸ்திரிய ஹங்கேரிய ராணுவத்தில் நீண்டகாலம் பணியாற்றியவர்.
முதல் உலகப்போரில் பங்குபெற்ற அத்தனை தேசங்களுமே வியந்து பாராட்டிய ஒரு அம்சம், இத்தாலியத் தயாரிப்பான போர்விமானங்கள். ஒரு சிறிய குறைபாடுகூடச் சொல்ல முடியாத வகையில் சிறப்பாக அதை வடிவமைத்து, தயாரித்துத் தருவதற்கு மூல முதற்காரணமாக இருந்தவர், இத்தாலியின் புகழ்பெற்ற கணித அறிஞர் விடோ வோல்டெரா. (அதுநாள் வரை போர் விமானங்களின் பிரதான எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டு வந்த ஹைட்ரஜனுக்கு பதிலாக ஹீலியத்தைப் பயன்படுத்தலாம் என்றும் அதன்மூலம் விபத்து சாத்தியங்களைக் கணிசமாகக் குறைக்க முடியும் என்பதையும் கண்டுபிடித்துச் சொன்னவரான இவரும் ஒரு யூதர்தான்.
இதையெல்லாம் விட முக்கியம், போரில் ஜெர்மனி பயன்படுத்திய விஷவாயு ரசாயன வேதிப்பொருட்கள் சிலவற்றைக் கலந்து விஷ வாயுவை உருவாக்கி, அதை ஒரு போர் ஆயுதமாகவும் பயன்படுத்தமுடியும் என்று நிரூபித்துக்காட்டியது ஜெர்மனி என்றால், ஜெர்மனியின் இந்தத் திட்டத்தின் சூத்திரதாரியாக இருந்து செயல்வடிவமும் கொடுத்தவர் ஃப்ரிட்ஸ் ஹேபர் என்கிற வேதியியல் துறை விற்பன்னர். பின்னாளில் வேதியியல் துறையில் இவர் மேற்கொண்ட வேறுபல முக்கிய ஆய்வுகளுக்காகவும் சாதனைகளுக்காகவும் நோபல் பரிசுகூடக் கிடைத்தது. ஹேபரும் ஒரு யூதர்தான்!
மேற்சொன்ன உதாரணங்களைத் தொகுத்துப் பார்த்தால் ஓர் உண்மை புரியலாம்.
உலகப்போரில் கூட களத்தில் இறங்கிப் பங்களித்ததைக் காட்டிலும் யூதர்கள், யுத்தத்தின் பின்னணியில் நின்று செலுத்தக்கூடிய சக்திகளாகவே பெரும்பாலும் இருந்திருக்கிறார்கள் என்பதே அது.
ஒரு சில தேசங்களில் மட்டும்தான் இவ்வாறு என்றில்லை. ஐரோப்பா முழுவதிலுமே, எங்கெல்லாம் யுத்த சத்தம் கேட்டுக்கொண்டிருந்ததோ, அங்கெல்லாம் யூதர்கள் தமது முழுத்திறமையைச் செலுத்திப் பணியாற்றிக்கொண்டிருந்தார்கள்.
ஆயிரக்கணக்கான சாதாரண ராணுவ வீரர்களை யூதகுலம் தராமல் இல்லை. ஆனாலும் இத்தகைய அதிபுத்திசாலிகள்தான் போரின் முடிவுகளைத் தீர்மானிப்பவர்களாக இருந்திருக்கிறார்கள்.
இன்றைக்கு வரை ஜெர்மனியின் விஷவாயுத்தாக்குதல் பேசப்படும் ஒரு பொருளாக இருக்கிறது. இன்றைக்கு வரை டைபாய்ட் மருந்து நமக்கு வேண்டித்தான் இருக்கிறது. இன்றைக்கு வரை போர் விமானங்களில் ஹீலியம்தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இவையெல்லாமே முதல் உலகப்போரின் விளைவுகள்.
அந்தச் சூழ்நிலையில், அப்போதைய தேவைக்கேற்பக் கண்டுபிடிக்கப்பட்டவை அல்லது அறிமுகப்படுத்தப்பட்டவை. அத்தனையையும் செய்தவர்கள் யூதர்கள்தான்!
ஏன் செய்தார்கள்? ஐரோப்பியப் பங்காளிச் சண்டையில் யூதர்களுக்கு என்ன அக்கறை என்று கேட்டால் அதற்கான பதில் முன்னர் சொன்னதுதான்!
அவர்களுக்கு யுத்தத்தில் அல்ல; யுத்தத்தின் முடிவில் தமக்கொரு தனிநாடு கிடைக்காதா என்கிற எதிர்பார்ப்பு இருந்ததுதான் இதற்கெல்லாம் ஒரே காரணம். (முதல் உலக யுத்தத்தில் மொத்தம் ஒருலட்சம் ரஷ்ய யூதர்கள் கொல்லப்பட்டார்கள். நாற்பதாயிரம் ஆஸ்திரிய யூதர்கள், பன்னிரண்டாயிரம் ஜெர்மானிய யூதர்கள், எட்டாயிரத்து அறுநூறு பிரிட்டிஷ் யூதர்கள், ஒன்பதாயிரத்து ஐந்நூறு பிரான்ஸ் யூதர்கள் கொல்லப்பட்டதாக இன்றைக்கு இஸ்ரேல் புள்ளிவிவரம் தருகிறது.)
யுத்தத்தில் அமெரிக்கா சற்று தாமதமாகப் பங்குபெற்றதால் உயிரிழந்த அமெரிக்க யூதர்களின் எண்ணிக்கை மற்ற நாட்டு யூதர்களோடு ஒப்பிடுகையில் கொஞ்சம் குறைவுதான். (மூவாயிரத்து ஐந்நூறு.)
ஐரோப்பாவுக்குச் சம்பந்தமே இல்லாமல் பாலஸ்தீனில் வசித்துக்கொண்டிருந்த யூதர்களும் யுத்தத்தில் பங்குபெறுவதற்காக பிரிட்டனுக்குப் போயிருக்கிறார்கள்.
இவர்கள் அனைவரும் ஒட்டாமான் அரசால் நாடுகடத்தப்பட்டவர்கள் என்று இஸ்ரேல் அரசுத்தரப்பு வெளியிட்டிருக்கும் போர்க்கால அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஆனால், ஒட்டாமான் துருக்கியப் பேரரசு யூதர்களை இப்படி மொத்தமாக பல்லாயிரக்கணக்கில் வெளியேற்றியதாக வேறு எந்த சரித்திர நூலிலும் குறிப்புகள் இல்லை. சமூகவிரோதச் செயல்களில் ஈடுபட்டவர்கள், கலவரங்களைத் தூண்டியவர்கள் அல்லது பங்குபெற்றவர்கள் எனச் சில நூறுபேர் அவ்வப்போது நாடுகடத்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால் ஐயாயிரம், பத்தாயிரம் என்று பாலஸ்தீனிலிருந்து யூதர்கள் நாடுகடத்தப்பட்டதாக குறிப்பாக ஒட்டாமான்களின் காலத்தில் ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை.
மாறாக, துருக்கிப் பேரரசின் பல்வேறு பகுதிகளில் வசித்துக்கொண்டிருந்த யூதர்கள் பாலஸ்தீனுக்கு இடம்பெயர அரசே உதவி செய்திருக்கிறது.
உலகப்போர் தொடங்கிய பிறகு பாதுகாப்புக் காரணங்களுக்காக சுமார் எழுநூறு பாலஸ்தீன் யூதர்கள் நாடுகடத்தப்பட்டிருக்கிறார்கள்; அவ்வளவுதான்.
உலக யுத்தம் தொடங்கிய ஓராண்டு காலத்துக்குள்ளாக யுத்தத்தில் பிரிட்டனின் கை ஓங்குவது தெளிவாகத் தெரிந்தது. எப்படியும் பிரிட்டனின் கூட்டணிப்படைகள்தான் போரில் வெற்றிபெறும் என்பதை வல்லுநர்களால் ஊகித்துவிடமுடிந்தது.
இவ்விவரம் வெளியே வரத் தொடங்கிய மிகச் சில காலத்துக்குள்ளாக (சுமார் நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்குள் என்று வைத்துக்கொள்ளலாம்.)
யூதர்களின் பிரிட்டன் ஆதரவு நடவடிக்கைகள் அதிகரிக்கத் தொடங்கின.
பிரிட்டனில் வசித்துவந்த பணக்கார யூதர்களும் அதிகாரமையமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்த யூதர்களும் பிரிட்டன் அரசின் உயர்மட்ட அதிகாரிகளுடன் அடிக்கடி கலந்து பேச ஆரம்பித்தார்கள்.
பிரிட்டனுக்கு யூதகுலம் எந்தெந்த வகையில், எந்தெந்த இனங்களில் அனுகூலமாக இருக்கமுடியும் என்று தெளிவாக விளக்கிச் சொல்லப்பட்டது.
இஸ்ரேல் என்றொரு தேசம் உருவாக பிரிட்டன் உதவி செய்யுமானால், பதிலுக்கு சாத்தியமான விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி பல கட்டங்களில் பேச்சுவார்த்தைகள் நடந்தன.
கொள்கை அளவில் அப்போது இஸ்ரேல் உருவாவதற்கான வரலாற்று நியாயங்கள் உள்ளதாகவே பிரிட்டன் கருதியதையும் நாம் கவனிக்க வேண்டும். என்ன இருந்தாலும் அவர்களும் பாலஸ்தீனத்தின் பூர்வகுடிகள் என்பதை பிரிட்டன் நினைவு கூர்ந்தது.
தவிர யூதர்கள் பிரிட்டன் அரசுக்கு அளிக்கும் கண்மூடித்தனமான ஆதரவும் அவர்களைச் சிந்திக்க வைத்தது. ஒருவேளை இஸ்ரேல் உருவாவதற்கு தான் ஒரு முக்கியக் காரணமாக இருக்க முடியுமானால், பின்னாளில் மத்தியக் கிழக்கில் தனக்கொரு வலுவான தளமாக அத்தேசத்தை அமைத்துக்கொள்ள முடியுமே என்று பிரிட்டன் நினைத்தது.
அமெரிக்கா ஒரு மாபெரும் சக்தியாக உருவாகிக்கொண்டிருந்த நேரம் அது.
ஒரு வல்லரசாக அமெரிக்கா உருவாகிவிடுமோ என்கிற கவலை அனைத்து ஐரோப்பிய தேசங்களுக்குமே இருந்தது என்றாலும் பிரிட்டனுக்கு அக்கவலை மிகவும் அதிகமாகவே இருந்தது.
ஏனெனில் பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் என்கிற மூன்று தேசங்கள்தான் அப்போது உலகின் மாபெரும் வல்லரசுகள் என்று சொல்லப்பட்டன.
இந்த மூன்றையும் ஒதுக்கிவிட்டு எங்கே அமெரிக்கா முன்னால் வந்துவிடுமோ என்கிற பிரிட்டனின் நியாயமான கவலையைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
உலகெங்கும் தனது காலனிகள் மூலம் தனது வல்லரசுத்தன்மையைப் பறைசாற்றிக்கொண்டிருந்த பிரிட்டன், இஸ்ரேலை உருவாக்கித் தருவதன் மூலம் சர்வதேச அரசியல் அரங்கில் இன்னொரு புதுப்பரிமாணம் பெற்று, மேலும் முக்கியத்துவம் உள்ள தேசமாக உருவாவதற்கு இருந்த சாத்தியங்களை யோசித்துப் பார்த்தது.
அரசு என்பது என்ன? சில மனிதர்களால் ஆன ஓர் அமைப்பு. அவ்வளவுதானே? யூதர்களுக்கு இது மிக நன்றாகப் புரிந்திருந்ததால், பிரிட்டிஷ் அரசின் மிக உயர்ந்த பதவிகளில் இருந்தவர்களை மிக கவனமாக, ‘கவனித்து’க்கொள்ள ஆரம்பித்தார்கள். எல்லாமாகச் சேர்ந்து வேலை செய்ய ஆரம்பித்தன.
1917-ம் ஆண்டு துருக்கியின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த பாலஸ்தீனை பிரிட்டன் தாக்கியது.
43] ஐரோப்பிய தேசங்களுக்கிடையே யுத்தங்கள். நிலமெல்லாம் ரத்தம் – 43 உலக நாடுகள் ஒவ்வொன்றும் தமது பக்கத்து நாட்டுடன் உறவு அல்லது பகையை எப்படி வளர்த்துக்கொண்டன என்று ஆராயப்போனால் மூன்று அல்லது நான்கு காரணங்களுக்குள் இதற்கான விடை அடங்கிவிடும். எல்லைப்பகுதி நிலப்பரப்பு, எல்லையோர மக்களின் மொழி, கலாசாரம், சமயம் ஆகியவை, அடுத்த தேசத்தின் அரசியல் ஸ்திரத்தன்மை அல்லது ஸ்திரமின்மை. அவ்வளவுதான். இந்தச்சில காரணங்களால்தான் உலகில் ஒவ்வொரு தேசமும் தன் அடுத்த தேசத்துடன் எப்போதும் மல்லுக்கு நிற்கவேண்டியதாகிறது. இருபதாம்…
Recent Comments
Archives
- April 2023
- May 2022
- April 2022
- January 2022
- August 2019
- June 2019
- January 2019
- June 2018
- February 2018
- December 2017
- November 2017
- June 2017
- February 2017
- December 2016
- June 2016
- January 2016
- December 2015
- November 2015
- October 2015
- August 2015
- July 2015
- June 2015
- May 2015
- April 2015
- March 2015
- February 2015
- January 2015
- December 2014
- November 2014
- October 2014
- September 2014
- August 2014
- July 2014
- June 2014
- May 2014
- April 2014
- March 2014
- February 2014
- January 2014
- December 2013
- November 2013
- October 2013
- September 2013
- August 2013
- July 2013
- June 2013
- May 2013
- April 2013
- March 2013
- February 2013
- December 2012
- November 2012
- October 2012
- September 2012
- August 2012
- July 2012
- June 2012
- May 2012
- April 2012
- March 2012
- February 2012
- January 2012
- December 2011
- November 2011
- October 2011
- September 2011
- August 2011
- July 2011
- June 2011
- May 2011
- April 2011
- March 2011
- February 2011
- January 2011
- December 2010
- November 2010
- October 2010
- September 2010
- August 2010
- July 2010
- September 2009
- August 2009
- June 2009
- May 2009
- April 2009
- March 2009
- February 2009
- January 2009
- December 2008
- November 2008
- October 2008
- September 2008
- August 2008
- June 2008
- March 2008
- January 2008
- December 2007
- June 2007
- May 2007
- April 2007
- March 2007
- February 2007
- January 2007
- December 2006
- October 2006
- September 2006
- August 2006
- July 2006
- June 2006