சொர்க்கம்-முஸ்லிம்களுக்கு மட்டுமா?

சொர்க்கம்-முஸ்லிம்களுக்கு மட்டுமா?
இறைவனின் திருப்பெயரால்…..

கேள்விக்குறியுடன் முடிந்த இவ்வாக்கியத்தை பார்த்ததும்,சிலர் முகத்தில் ஆச்சரியக்குறி,பலர் முகத்தில் கோபத்தின் அறிகுறி
ஆனால் உண்மையில் -கேள்விக்குறியுடன் முடிந்த அவ்வாக்கியமே உண்மை.

பார்த்தீர்களா…உலகத்தை படைத்து அனைத்து மக்களையும் இரட்சிக்கும் கடவுள் இப்படி பாரபட்சமாக நீதி செலுத்தலாமா.?-என போர்க்கொடி தூக்கும் சக மனித நல விரும்பிகள் அதற்கு முன்பாக இஸ்லாம் ஏன் அவ்வாறு கூறுகிறது என்பதை அறிய நடுநிலை சிந்தனையை மேற்கொள்ளவேண்டும் என அன்புடன் அழைக்கின்றேன்.
இந்நிலையில் ஒரு விசயத்தில் யாராக இருந்தாலும் உடன் பட வேண்டும். ஒன்று,இஸ்லாத்தின் அடிப்படையில் இக்கோட்பாட்டை விளங்குவதற்கு முன் வர வேண்டும்,அவ்விளக்கங்களில் உடன்பாடு இல்லையென்றால் குறைந்தபட்சம் சமுக நிலை ஒப்பிட்டு அடிப்படையிலாவது அதை ஏற்க முன் வர வேண்டும்.
முதலில் சமுக நிலை ஒப்பிடு -புரிதலுக்காக…
ஒரு தேர்ந்த பள்ளியில் மாணவர்கள் சேர்வதாக இருந்தால் முதலில் அப்பள்ளியின் சட்டத்திட்டங்களுக்கு உடன்பட்ட பிறகே அப்பள்ளியில் சேர்க்கப்படுவர்.மாறாக சமுக அந்தஸ்து பெற்றவராக இருப்பினும்,பொருள் வளம் நிரம்ப பெற்றவராக இருப்பினும்,மக்கள் மத்தியில் நற்பெயர் கொண்டவராக இருந்தாலும்-மேற்குறிப்பிட்ட காரணங்களுக்காக அப்பள்ளியில் அவரது சேர்க்கை இருக்காது. வேண்டுமானால் அச்சேர்க்கைக்கான கூடுதல் காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்.இன்னும் சொல்லப்போனால் மேற்குறிப்பிட்ட பண்புகள் பெற்றிருப்பினும் அப்பள்ளியின் சட்டத்திட்டங்களுக்கு உடன்படவில்லையென்றால் அப்பள்ளியில் சேர்க்கவே படமாட்டார் ஏனெனில்,அப்பள்ளியின் செயல் திட்டங்கள் யாவருக்கும் பொதுவாக முன்னரே வகுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் எந்த ஒரு மாணவனும், ஒன்று அப்பள்ளியின் வரையறைக்கு உட்பட்டு அதில் சேரலாம் அல்லது தன் சுய விருப்பத்தின் பேரில் அப்பள்ளியில் சேராமலும் இருக்கலாம்.சேர்ந்த மாணவர்களை மட்டுமே அப்பள்ளியின் நிர்வாகம் கட்டுப்படுத்தும்.அஃகுதில்லாத ஏனைய மக்களை அப்பள்ளி கட்டும் படுத்தாது தம் மாணவர்கள் என்றும் சொல்லாது,அப்படி ஒரு நிலையை அத்தகையோரும் எதிர்ப்பார்க்கவும் மாட்டார்கள்.மேலும் கல்விப்பயிலும் தம் மாணவர்களை மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கும்.அதன் விளைவால் அவர் பெற்ற வெற்றிக்காக அவருக்கும் பாராட்டும்,வெகுமதியும் அப்பள்ளி வழங்கும்.மாறாக அப்பள்ளியின் சட்டடத்திட்டங்களை பேணாத,படிக்கவும் செய்யாத ஏனையோர் பாராட்டையோ,வெகுமதியையோ எதிர்ப்பார்க்கவும் கூடாது,எதிர்ப்பார்ப்பதில் எத்தகையே நியாயமும் கிடையாது (இங்கு ஒரு +)எனினும் அப்பள்ளியின் அடிப்படை சட்டத்திட்டங்களை உணர்ந்து கல்வி பயில விரும்பும் எவராக இருப்பினும் அவரின் செயல் திறன் அடிப்படையில் அவருக்கு வெகுமதியோ பாராட்டோ வழங்கப்படும்.(இங்கு ஒரு -)
இந்த சம கால நிகழ்வு உதாரணத்தை ஒப்பிடாக கொண்டு (அளவு கோலாக அல்ல)மேற்காணும் தலைப்பின் கீழ் செல்லுங்கள்.,
இஸ்லாத்தின் பார்வையில்…
முஸ்லிம்-என்ற பதத்தை அறிந்துக் கொள்வதற்கு முன் இஸ்லாம் மீதான காழ்ப்புணர்ச்சியின் காரணமாக குர்-ஆன் மீது வைக்கப்படும் முதல் மற்றும் பொதுவான குற்றச்சாட்டான “காஃபிர்” என்ற பதம் குறித்து அறிவோம்.
காஃபிர் யார் ..?
காபிர்- இந்த ஒரு வார்த்தை மதம் சார்ந்த /சாரா மக்களால் அருவறுக்கத்தக்க வகையில் பார்க்கப்படுகிறது. இஸ்லாமிய அடிப்படை கோட்பாடுகள் குறித்து குர்-ஆன் கூறும் போது ஓரிறைவனை நிராகரிப்போரை,அவனுக்கு இணை கற்பிப்போரை அவன் கூறும் வழிமுறைகளை பின்பற்றாதவர்களை,சட்டத்திட்டங்களை ஏற்காதோரை காஃபிர்கள் என்கிறது.அதன் விளைவாக அவர்களுக்கு “சொர்க்கமும்” கிடைக்க வாய்ப்பே இல்லை.ஏனெனில் பொதுவாக ஒருவருக்கு கிடைக்கப்பெறும் பரிசோ,கூலியோ அவரின் நன்னடத்தை மற்றும் சொல்லிற்கிணங்க மேற்கொண்ட செயல்களுக்கே கொடுக்கப்படும்,எனும்போது இறைவனின் கட்டளைக்கிணங்க செயல் பாடாத காஃபிர்களுக்கு சொர்க்கம் மட்டும் கொடுக்க வேண்டும் என கேட்பது என்ன நியாயம்?
இங்கு ஒரு விசயம்.,காஃபிர் என்ற வார்த்தைக்கு நேரடி அர்த்தம் இறை நிராகரிப்பாளர் என்பதே ஆகும்.குர்-ஆனில் சில வார்த்தைகள் ஏனைய மொழிபெயர்ப்புகளிலும் அதன் மூல(அரபி)மொழியிலேயே பயன்படுத்தப்படுகின்றன.ஈமான்(இறையச்சம்),தக்வா(பயபக்தி), தவ்பா(பாவ மன்னிப்பு),ஸலாம்(சாந்தி),முனாஃபிக் (நயவஞ்சகன்)போன்றவைகள் அவற்றில் சில,அதன் அடிப்படையிலே காஃபிர் என்ற வார்த்தையும் குர்-ஆனிய மூலமொழியிலேயே உபயோகப்படுத்தப்படுகிறது.ஒருவேளை அச்சொல்லின் அவசியம் உணர்ந்தோ,விளங்குவதற்கு எளிதாக இருப்பதற்கோ அவ்வாறு பயன்ப்படுத்தப்பட்டிருக்கலாம். மேலும் நிய்யத்,அமல்,பர்ளூ,சுன்னத்,போன்ற வார்த்தைக்கு நிகரான தமிழ் சொற்கள் இருப்பினும் பெரும்பாலும் முஸ்லிம்கள் அதனை நடைமுறையில் அரபி(மொழி)யிலேயே பயன்படுத்துவதிலிருந்து மேற்கூறிய செயல்முறை காரணமே சரியானது என்பது தெளிவாகிறது.இதையும் மீறி காஃபிர் என்ற பதம் கேவலப்படுத்துவதற்கோ,மததுவேசத்திற்கோ பயன்படுத்தபடுவதாக யாரும் கூறுவாரானால் அதனை தக்க சான்றுகளோடு நிறுவட்டும்.
யார் முஸ்லிம் ?
தாடி வைப்பதோ தொப்பி அணிவதோ,முஸ்லிம் குடும்பத்தில் பிறப்பதோ ஒருவன் முஃமீன் என்பதற்கு போதுமானதன்று.இவை முஸ்லிம் என்பதற்கான சமுக குறியீடுகள் தான்.மாறாக யாராக இருப்பினும்,, எக்குடும்பத்தில் பிறப்பினும் “ஒரே இறைவனை ஏற்று அவனது இறுதித் தூதரை உண்மைப்படுத்தி இறைவன் கூறிய நேரிய பாதையில் தமது செயல்களை யார் தம் வாழ்வில் அமைத்து கொள்கிறார்களோ அவர்கள் தான் -“முமீன்கள்”.இறை பார்வையில் அவன் சொல்லிற்கிணங்க செயல்ப்பட்ட தூயவர்கள். அதற்காகவே அவர்களுக்கு சொர்க்கம் தருகிறான்.இதில் எங்கிருந்து வந்தது பாரபட்ச நிலை? போர்க்கொடி தூக்குவோர்கள் விளக்குவார்களா?
மேலும் சிறு விளக்கம்,
குர்-ஆன் மற்றும் அல்லாஹ் (என்ற அரேபிய சொல்லுக்கு கடவுள் என்றுதான் அர்த்தம்) இவ்வுலக அனைத்து மக்களுக்கும் பொதுவானவை தவிர முஸ்லிம் என்ற சமுகத்திற்கு மட்டும் உண்டானவை அல்ல.மாறாக கடவுள் தேர்ந்தெடுத்தது (குர்-ஆன் அடிப்படையில்,நபிகாளாரின் வழிகாட்டுதலுகிணங்க வாழ்வை அமைத்துக்கொண்ட)”முஸ்லிம்களை” -அது தான் உண்மையும் கூட! (முஸ்லிம் -பெயர் காரணம் முதல் பத்தியில் மிக தெளிவாக) ஏனெனில் குர்-ஆன் மொத்த மனித சமுதாயத்திற்கும் பொதுவானது என்பதை விளகக தன்னை இவ்வாறே அறிமுகப்படுத்துகிறது.
. . . இது (இக்குர்ஆன்) உலக மக்கள் யாவருக்கும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை” என்றுங் கூறுவீராக.-6:90 மேலும் பார்க்க (42:7, 81:27)
அதைப்போலவே அல்லாஹ் என்ற (அரேபிய கடவுள் அல்ல) உலகத்தின் ஒரே கடவுள் தன்னை குர்-ஆனில் அனைத்து மக்களின் இரட்சகன் என்ற தன்னை பிரகடனப்படுத்துகிறான்.
மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும், தூய்மையும்) உடையோராகளாம். -2:21
ஏனைய வசனங்களிலும் இறைக்குறித்து மேலும் பார்க்க (11:123, 18:28, 39:3,11,14, 53:62, 94:8)
அல்லாஹ் விடுத்து அவனுக்கு இணைக்கற்பிக்கும் வகையிலோ,அவனது தன்மைக்கு பொருந்தாத நிலை தவிர்த்து ஏனைய பெயர்களால் அவனை அழைக்கலாம் எனவும் குர்-ஆன் விளிக்கிறது
“நீங்கள் (அவனை) அல்லாஹ் என்று அழையுங்கள்; அல்லது அர்ரஹ்மான் என்றழையுங்கள்; எப்பெயரைக் கொண்டு அவனை நீங்கள் அழைத்தாலும், அவனுக்கு(ப் பல) அழகிய திருநாமங்கள் இருக்கின்றன” என்று (நபியே!) கூறுவீராக இன்னும், உம்முடைய தொழுகையில் அதிக சப்தமிட்டு ஓதாதீர்; மிக மெதுவாகவும் ஓதாதீர். மேலும் இவ்விரண்டிற்கும் இடையில் ஒரு மத்தியமான வழியைக் கடைப்பிடிப்பீராக -17:110 மேலும் பார்க்க (7:180, 20:8, 40:3, 57:3, 59:22-24)
மக்களை மாய்க்கும் போலி மத ச்சடங்குகள் அழித்து மனித நேயம் காக்க விரும்புவதாக கூறி இஸ்லாத்தையும் அத்தகையை பட்டியலில் சேர்க்காதீர்கள்.புரோகித விலங்கொடைத்து மனித இறைத்தொடர்புக்கு இடையில் எதனையும்,எவரையும் எற்படுத்தாதே எனக்கூறிய மனித நேய மார்க்கம்!படைப்பாளன் அனைத்து படைப்புகளையும் சமமாக பார்க்கும் பொழுது படைப்பினம் மட்டும் படைத்தவன் குறித்து பாகுபாடு பார்ப்பதேன்….?( பெருபான்மை மக்களால் மிக தவறாக புரிந்துக்கொள்ளப்பட்ட மிக அழகான வாசகம்)படைத்தவன் அல்லாது படைப்பினங்களை வணங்குவோரும்,படைப்பினங்களை தாண்டி படைத்தவன் அல்ல என சொல்வோரும் படத்தவன் சொல்வதை மட்டும் கேட்க மறுப்பதேன்?

அல்லாஹ் மிக அறிந்தவன்

சொர்க்கம்-முஸ்லிம்களுக்கு மட்டுமா?இறைவனின் திருப்பெயரால்….. கேள்விக்குறியுடன் முடிந்த இவ்வாக்கியத்தை பார்த்ததும்,சிலர் முகத்தில் ஆச்சரியக்குறி,பலர் முகத்தில் கோபத்தின் அறிகுறிஆனால் உண்மையில் -கேள்விக்குறியுடன் முடிந்த அவ்வாக்கியமே உண்மை. பார்த்தீர்களா…உலகத்தை படைத்து அனைத்து மக்களையும் இரட்சிக்கும் கடவுள் இப்படி பாரபட்சமாக நீதி செலுத்தலாமா.?-என போர்க்கொடி தூக்கும் சக மனித நல விரும்பிகள் அதற்கு முன்பாக இஸ்லாம் ஏன் அவ்வாறு கூறுகிறது என்பதை அறிய நடுநிலை சிந்தனையை மேற்கொள்ளவேண்டும் என அன்புடன் அழைக்கின்றேன்.இந்நிலையில் ஒரு விசயத்தில் யாராக இருந்தாலும் உடன் பட வேண்டும். ஒன்று,இஸ்லாத்தின்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *