நிலமெல்லாம் ரத்தம் – 41 &42

41] யூதர்களின் நில வங்கி தந்திரம்.

யூத தேசிய காங்கிரஸ் என்கிறோம். யூத நில வங்கிகள் என்கிறோம். யூத காங்கிரஸ் மாநாடு என்கிறோம். இதெல்லாம் பகிரங்கமாக நடந்திருந்தாலோ, அல்லது யார் மூலமாவது தியோடர் ஹெஸிலின் திட்டங்கள் வெளியே தெரிந்திருந்தாலோ என்ன ஆகியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

இன்றைக்குப் பேச முடிகிறது. விலாவாரியாக அலசிப்பார்க்க முடிகிறது. ஆனால் இந்தச் சம்பவங்கள் நடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் காற்றுக்குக் கூடத் தெரியாத ரகசியமாகத்தான் இதையெல்லாம் வைத்திருந்தார்கள்.

யூதர்களிலே கூட, பொறுப்பில் இருக்கும் நபர்கள் தவிர, பொதுமக்கள் இதையெல்லாம் பகிரங்கமாகப் பேசவே மாட்டார்கள். எப்போதும் யூதர்களின் முகத்தில் ஒரு பயமும் ஏக்கமும் படர்ந்திருக்கும். அந்த பய உணர்ச்சியையும் ஏக்க உணர்ச்சியையும் அவர்கள் ஒருபோதும் மாற்றிக் காண்பித்ததே இல்லை.

இத்தனை பெரிய திட்டங்களை அவர்கள் தொடங்கியிருக்கிறார்கள், நில வங்கியின் கிளைகளைத் திறக்க பாலஸ்தீனுக்குப் போயிருக்கிறார்கள், நிலவங்கியின் நோக்கமே பாலஸ்தீனின் நிலங்களை அபகரிப்பதுதான் என்பதையெல்லாம் ஒரு யூதர் கூட வெளியே பேசியதில்லை.

இத்தனைக்கும் பத்திரிகைகள் பெருகத் தொடங்கியிருந்த காலம் அது. ஆனால், எந்தப் பத்திரிகையின் நிருபருக்கும் அப்போது மூக்கில் வியர்க்கவில்லை. எந்த நாட்டின் அரசுக்கும் யூதர்களின் திட்டம் இதுதான் என்பது விளங்கவில்லை.

எல்லா தேசங்களிலும் ஆட்சியில் இருப்போருக்கு யூதர்கள் பலர் நெருக்கமாக இருந்தார்கள். ஆனாலும் வரையறுக்கப்பட்ட நெருக்கம் அது.

ஆட்சியாளர்களிடமிருந்து அவர்கள் செய்திகளையும் ரகசியங்களையும் பெறப் பார்ப்பார்களே தவிர, தமது ரகசியங்களை அவர்களிடம் மறந்தும்கூடப் பேசமாட்டார்கள்.

எல்லாமே இருப்பது போலத்தான் இருந்தது. எந்த மாற்றமும் இல்லை. யாருக்கும் எதுவும் கண்ணில் படவேயில்லை. ஆனாலும் அது நடக்கத்தான் செய்தது.

ஒட்டாமான் துருக்கியப் பேரரசின் ஆளுகைக்கு உட்பட்ட பாலஸ்தீனில் வசித்துக்கொண்டிருந்த சில பணக்கார யூதர்கள் திடீரென்று மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாக ஆங்காங்கே நில வங்கிகளைத் தொடங்கினார்கள்.

யார் வேண்டுமானாலும் வந்து நிலம் வாங்குவதற்காக அங்கே கடன் பெறலாம். குறைந்த வட்டி விகிதங்கள். நிலங்களை விற்க விரும்புகிறீர்களா?

தாராளமாக வந்து வங்கி மூலமாகவே நிலங்களை விற்கலாம். அதிகப் பணம் கொடுத்து நிலங்கள் வாங்கப்படும்.

வங்கிகளே நேரடியாகவும் நிலங்களை வாங்கும். அல்லது இடைத்தரகர் போலச் செயல்பட்டு யூதர்களுக்கு நிலங்களை வாங்கிக்கொடுக்கும்.

பாலஸ்தீனைப் பிரமாதமான விவசாய பூமி என்று சொல்லமுடியாது. அங்கு விவசாயம் இருந்தது. ஆனால் விவசாய நிலங்களைக் காட்டிலும் வறண்ட, பிரயோஜனமில்லாத பூமியே அதிகம்.

யூதர்கள் நில வங்கிகளைத் தொடங்கி, நிலங்கள் வாங்கத் தொடங்கியபோது, படிப்பறிவில்லாத கிராமப்புறத்து அரேபிய நிலச்சுவான்தார்கள், தம்மிடமிருந்த பாலை நிலங்களை அவர்களுக்கு விற்க விரும்பினார்கள்.

தண்டத்துக்கு வெறும் பூமியை வைத்துக்கொண்டு அவதிப்படுவானேன் என்று அவர்கள் கருதியிருக்கலாம்.

மேலும் நில வங்கிகள், அவர்கள் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அந்த வறண்ட நிலங்களுக்குப் பணம் கொடுக்க முன்வந்தன. ஆகவே, இதனை ஒரு வாய்ப்பாகவே அவர்கள் கருதினார்கள்.

யூத வங்கிகள் எதற்காக இத்தனை பணம் கொடுத்து உருப்படாத நிலங்களை வாங்குகின்றன என்றெல்லாம் அவர்களுக்கு யோசிக்கத் தெரியவில்லை.

ஆகவே, பாலஸ்தீன் முழுவதிலும் எங்கெல்லாம் விவசாயத்துக்குப் பயன்படாத தரிசு நிலங்கள் இருந்தனவோ, அவற்றின் உரிமையாளர்கள் எல்லோரும் அந்த நிலங்களை நில வங்கிகளுக்கு விற்றுக் கொண்டிருந்தார்கள்.

எத்தனை நிலம் கிடைத்தாலும் வங்கி வாங்கிக்கொள்கிறது என்பதைப் பார்த்து, அதிகப் பணத்துக்கு ஆசைப்பட்டு, தரிசு நிலங்களுக்கு நம்பமுடியாத விலைகளைச் சொல்லிப் பார்த்தார்கள் அரேபியர்கள்.

அப்போதும் நில வங்கிகள் தயங்கவே இல்லை. பத்துப்பைசா பெறாத நிலங்களுக்குக் கூட பல லட்சம் கொடுக்க அவை முன்வந்தன.

உண்மையில் அதிர்ஷ்டதேவதைதான் நில வங்கி ரூபத்தில் வந்திருப்பதாக அரேபியர்கள் மடத்தனமாக நினைத்தார்கள்.

தினசரி நூற்றுக்கணக்கான ஏக்கர்கள், இந்த வகையில் யூத நில வங்கிகளின் வசமாகிக்கொண்டிருந்தன.

வங்கி இப்படி கணக்கு வழக்கில்லாமல் பணம் கொடுத்து நிலம் வாங்குவதற்குப் பணம் எங்கிருந்து வரும்?

அதைப்பற்றி அவர்கள் கவலைப்படவே இல்லை. உலகெங்கிலுமிருந்து யூதர்கள் தினசரி லட்சக்கணக்கில் பணம் திரட்டி பாலஸ்தீனுக்கு அனுப்பிக்கொண்டிருந்தார்கள்.

உலகமெங்கும் வசித்துக்கொண்டிருந்த பல லட்சம் யூத வர்த்தகர்கள் தமது வருமானத்தில் கணிசமான பகுதியை இந்த நில வங்கிகளுக்கு நன்கொடையாக அளித்தார்கள். சாதாரண யூத மக்களோ, துண்டேந்திச் சென்று பணம் வசூலித்து அனுப்பினார்கள்.

கலை நிகழ்ச்சிகள் நடத்திப் பணம் சேர்ப்பது, புத்தகம் விற்ற பணம், நாடகம் போட்ட பணம் என்று எந்த ஒரு சிறு வாய்ப்பையும் அவர்கள் தவற விடவில்லை.

எங்கோ, கண்ணுக்குத் தெரியாத தொலைவில், பாலஸ்தீன் என்கிற தமது மூதாதையர் தேசத்தில் தங்களுக்கென்று தங்கள் தலைவர்கள் நிலம் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள், விரைவில் தாங்கள் அங்கே இடம் பெயர்ந்து நிம்மதியாக வசிக்கப்போகிறோம் என்கிற ஓர் உணர்ச்சி மட்டுமே அவர்களிடம் இருந்தது. அதையும் ரகசியமாகவே வைத்திருக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருந்தது.

மறுபுறம், யூதர்களின் இந்த மாபெரும் திட்டத்தின் ஒரு வரி கூடத் தெரியாத பாலஸ்தீனத்து அரேபியர்கள், வந்தவரை லாபம் என்று தங்களுடைய நிலங்களையெல்லாம் நில வங்கிக்கு அள்ளியள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அத்தனையும் தரிசு நிலம் தானே என்கிற அலட்சியம்.

ஆனால், நிலவங்கிகள் தரிசு நிலக் கொள்முதலோடு மட்டும் நிறுத்திக்கொள்ளவில்லை.

மாறாக, தங்கள் திட்டத்தின் இன்னொரு பகுதியாக, உள்ளூர் மக்கள் நிலம் வாங்குவதற்குக் கடன் கொடுக்கவும் அவர்கள் தவறவில்லை.

கடன் வாங்கி, நிலம் வாங்கும் அரேபியர்கள், உரிய காலத்தில் வங்கிக்கடனைத் திருப்பிச் செலுத்தாவிட்டால், நோட்டீஸ் எல்லாம் அனுப்பிக் கொண்டிராமல் நேரடியாக அந்த நிலங்களைக் கையகப்படுத்தத் தொடங்கி விடுவார்கள்.

இன்னொரு உத்தியையும் அவர்கள் கடைப்பிடித்தார்கள். கடன் வாங்க வரும் அரேபியர்களிடம் முதலில் எளிய வட்டி விகிதங்கள் மட்டுமே சொல்லப்படும்.

பெரிய கஷ்டம் ஏதும் வராது என்று நம்பும் அரேபிய முஸ்லிம்கள் நிறைய கடன் பெற்று, நிலங்களை வாங்குவார்கள். பத்திரங்களை வங்கியில் அடகு வைப்பார்கள்.

ஆனால், கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் நீடிக்குமானால் வட்டி விகிதங்கள் கண்ணுக்குத் தெரியாமல் ஏற ஆரம்பித்துவிடும்.

பெரிய படிப்பறிவு இல்லாத பாலஸ்தீனத்து அரேபியர்களுக்கு, வங்கி முதலிலேயே வழங்கும் கடன் விதிமுறைகள் அடங்கிய தாளை முழுவதுமாகப் படித்துப் புரிந்து கொள்ளக்கூட ஒருநாளும் முடிந்ததில்லை.

இதன் விளைவு என்னவானது என்றால், ஏராளமான அரேபிய நிலச்சுவான்தார்கள் நில வங்கியில் கடன் பெற்றே ஓட்டாண்டியாகிப் போனார்கள்.

திருப்பிச் செலுத்தும் காலம் அதிகரித்துக்கொண்டே போக, வட்டி விகிதம் மலையளவு உயர்ந்து கழுத்தை நெரித்தது. வழியில்லாமல் அவர்கள் தமது நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை வங்கியிடமே விற்றுவிட நேர்ந்தது.

அப்படி விற்கப்படும்போது கூடுதலாகப் பணம் கேட்காமல், வாங்கிய கடன் தொகைக்கே சமமாக விலையை நிர்ணயித்து யூதர்கள் கழித்துவிடுவார்கள்! தர்மம்!

ஒரு விஷயம் சொல்ல வேண்டும். யூதர்களின் நில வங்கிக்கு, நிலம் வாங்குவது ஒன்றுதான் குறிக்கோளாக இருந்ததே தவிர, பணம் சம்பாதிப்பது அல்ல.

வங்கிகள் விரும்பியிருந்தால் வட்டி மூலமே எத்தனையோ கோடிகள் லாபம் பார்த்திருக்கலாம். ஆனால், அவர்கள் அதைச் செய்யவில்லை.

மாறாக, ஒரு துண்டு நிலம் கிடைத்தாலும் விடக்கூடாது என்பதில் மட்டுமே கவனமாக இருந்தார்கள். தமது நோக்கத்திலிருந்து இம்மியும் பிசகாமல் இருந்ததுதான் யூதர்களின் மிகப்பெரிய சாதனை. அது சரியான நோக்கம்தானா என்பதெல்லாம் அப்புறம் யோசிக்க வேண்டிய விஷயம்.

உலகில் வேறெந்த ஒரு இனமும் இத்தனை திட்டமிட்டு ஒரு காரியம் செய்ததாகச் சரித்திரமே இல்லை.

அதுவும் ரகசியமாக. ஒரு ஈ, காக்கைக்குக்கூடத் தங்கள் நோக்கம் தெரிந்துவிடாமல்!

அரேபியர்கள் இப்போதாவது சற்று விழித்துக்கொண்டு யோசித்திருக்கலாம்.

ஏன் இந்த வங்கிகள் சந்தை விலையைவிட இரண்டரை மடங்கு அதிக விலை கொடுத்து நிலங்களை வாங்குகின்றன?

அப்படி வாங்கப்படும் நிலங்களிலெல்லாம் ஏன் யூதக்குடியிருப்புகள் மட்டுமே நிறுவப்படுகின்றன?

முயற்சி செய்தாலும் வங்கி வாங்கிய நிலத்தை ஒரு முஸ்லிம் ஏன் திரும்ப வாங்க முடிவதில்லை?

பாலஸ்தீனில் ஏற்கெனவே உள்ள யூதர்களின் எண்ணிக்கை எல்லாருக்கும் தெரியும். இப்படிப் புதிதாக வங்கி வாங்கும் நிலங்களில் வந்து குடியமரும் யூதர்களும் புதியவர்களாக இருக்கிறார்களே, இவர்களெல்லாம் எங்கிருந்து வருகிறார்கள்?

வங்கி நிலம் வாங்கியது தெரிந்ததும் சொல்லி வைத்தமாதிரி வந்து குடியமர்கிறார்களே, இவர்களுக்காகத்தான் வங்கி நிலங்களை வாங்குகிறதா? அல்லது தற்செயலாக நடக்கிறதா?

இந்த வங்கிகளின் செயல்பாடுகள் முழுவதுமாக அரசுக்குத் தெரியுமா? இதுபற்றி அரசின் கருத்து என்ன?

ஏராளமாகப் பணம் கொடுத்து தரிசு நிலங்களை வாங்கும் வங்கிகளுக்குப் பணம் எங்கிருந்து வருகிறது? யார் தருகிறார்கள்?

இவற்றில் எந்த ஒரு கேள்வியும் பாலஸ்தீனத்து அரேபியர்களுக்குத் தோன்றவேயில்லை என்பது மிகவும் வியப்பான விஷயம்.

சிலகாலம் இப்படியாக அவர்கள் பாலஸ்தீனில் நிலங்களை வாங்கிச் சேர்த்துக்கொண்டிருந்தார்கள். அதற்குள் மாநிலம் முழுவதும் நில வங்கிகளுக்கு மிகப்பெரிய மதிப்பும் செல்வாக்கும் ஏற்பட்டிருந்தது. பாங்கர்கள் என்று சொல்லப்பட்ட வங்கி அதிகாரிகள் மிகப்பெரிய மனிதர்களாக மதிக்கப்பட ஆரம்பித்தார்கள்.

முஸ்லிம் பண்ணையார்கள் இருந்த இடங்களிலெல்லாம் யூதப் பண்ணையார்கள் தோன்றி விட்டார்கள்.

பணம் அதிகம் இருப்போரே மதிக்கத்தகுந்தவர்கள் என்னும் பொதுவான கருத்தாக்கம் மிக வலுவாக அங்கே கடைப்பிடிக்கப்பட ஆரம்பித்தது. அதன் அடிப்படையில் பாலஸ்தீனில் யூதர்களுக்கு மீண்டும் செல்வாக்கு ஏற்பட ஆரம்பித்தது.

இந்தச் சந்தர்ப்பத்தில் யூதர்கள் இன்னொரு நடைமுறையை அறிமுகப்படுத்தினார்கள். மிரட்டல்கள் மூலம் நிலங்களைப் பெறுவது என்பதே அது.

அதுவரை தாமாக நிலங்களை விற்க முன்வரும் முஸ்லிம்களுக்கு அதிகப் பணம் கொடுத்து நிலங்களை வாங்கிக்கொண்டிருந்தது நில வங்கி. கொஞ்சம் இருப்பை ஸ்தாபித்துக் கொண்ட பிறகு, வேறு வகையில் இம்முயற்சியைத் தொடர ஆரம்பித்தார்கள்.

வங்கியின் சர்வேயர்கள், வண்டியெடுத்துக்கொண்டு நகர்ப்புறங்களையும் கிராமப்புறங்களையும் சுற்றி வருவார்கள். நூறு ஏக்கர் வங்கி நிலம் இருக்கும் இடத்தின் நடுவே பத்து ஏக்கர் அரேபியர் நிலம் இருக்குமானால் அந்த இடங்களை வங்கிக்கு விற்றுவிடும்படி சம்பந்தப்பட்ட நில உடைமையாளர் கேட்டுக்கொள்ளப்படுவார்.

உரிமையாளர் மறுத்தால், முதலில் மிரட்டல் ஆரம்பிக்கும். பிறகு அதுவே பரிமாணம் அடைந்து சில சந்தர்ப்பங்களில் கடத்தல் வரை கூடப் போயிருக்கிறது!

ஆனால், இத்தகைய காரியங்களை வங்கியே நேரடியாகச் செய்யமுடியாது அல்லவா? என்ன செய்யலாம்?

யூதர்கள் யோசித்தார்கள். விளைவாக, பாலஸ்தீனின் பல்வேறு பகுதிகளில் வங்கிக்குச் சம்பந்தமில்லாத சில தனியமைப்புகளைத் தோற்றுவித்தார்கள்.

பொது நல அமைப்புகளாக அடையாளம் காட்டப்பட்ட அந்த அமைப்புகளின் முழுநேரப்பணி, நில ஆக்கிரமிப்புதான்.

குண்டர்களும் ரவுடிகளும் நிறைந்த அத்தகைய அமைப்புகளின் உறுப்பினர்கள் மிரட்டியும் தாக்கியும் நிலங்களைக் கையகப்படுத்தி நிலவங்கிக்கு அளித்துவிடுவார்கள்! அதற்காக அவர்களுக்கு மாத ஊதியமே தரப்பட்டிருக்கிறது.

சுமார் இரண்டாண்டு காலகட்டத்துக்குள் பாலஸ்தீனிய அரேபியர்களின் மொத்த நிலப்பரப்பில் சுமார் நாலரை சதவிகித நிலம் யூத நில வங்கிகளின் மூலம் யூதர்களின் வசமாகியிருந்தது.

அதுவரைதான் யூதர்கள் ‘கஷ்டப்பட’வேண்டியிருந்தது. அதற்குப்பின்னால் நிலக் கொள்முதல் திட்டம் பிடித்த வேகம், விவரிப்புக்கு அப்பாற்பட்டது!

42] யூதர்களை ஒருங்கிணைத்த ஹெஸில்

நிலமெல்லாம் ரத்தம் – 43

1897-ல் ஸ்விட்சர்லாந்தில் ஒரு சூதாட்ட விடுதி அறையில் ரகசியமாக நடந்த முதல் சர்வதேச ஜியோனிச மாநாடு குறித்து ஏற்கெனவே பார்த்திருக்கிறோம்.

தியோடர் ஹெஸிலின் முயற்சியில் யூதர்கள் தம் தனி நாடு திட்டம் தொடர்பாக எடுத்துவைத்த முதல் அடி. அதிலிருந்து தொடங்கி 1902-ம் ஆண்டுக்குள் அதாவது சரியாக ஐந்து ஆண்டுகளுக்குள் மொத்தம் ஆறு மாநாடுகளை அவர்கள் நடத்திவிட்டார்கள்.

ஒரு பக்கம் பாலஸ்தீனில் யூத நிலவங்கி, நிலங்களை வாங்கி யூதக் குடியிருப்புகளை ஏற்படுத்திக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் ஐரோப்பியர்களும் அரேபியர்களும் தமது யூத எதிர்ப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுக்கொண்டிருக்க, எது குறித்தும் சந்தோஷமோ, கலவரமோ கொள்ளாமல் படிப்படியாகத் தங்களது திட்டத்தைச் செயல்படுத்துவது பற்றி ஹெஸிலின் தலைமையில் யூதர்கள் கலந்து ஆலோசித்துக் கொண்டிருந்தார்கள். சரியாகச் சொல்லுவதென்றால் இருப்பிடம் அற்ற யூதர்களை ஒருங்கிணைத்து, கட்டுப்படுத்தும் ஒரு முதன்மை சக்தியாக ஹெஸில் இருந்தார்.

இத்தனைக்கும் ஜியோனிஸத்தைத் தோற்றுவித்த மிகச் சில வருடங்களிலேயே காலமாகிவிட்டவர் அவர். அவருக்குப்பின் எத்தனையோ பேர் கூடித்தான் இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றார்கள். ஆனால் அவர் இருந்தவரை அவரது ஒரு குரல் போதுமானதாக இருந்திருக்கிறது!

தியோடர் ஹெஸில், அடிப்படையில் ஒரு பத்திரிகையாளர். புடாபெஸ்டில் 1860-ம் ஆண்டு பிறந்த ஹெஸில், அன்றைய ஜெர்மானிய ஆதிக்கத்துக்கு உட்பட்ட பிராந்தியங்களிலேயே வளர வேண்டியிருந்ததால் ஜெர்மன் மொழியில் மிகப்பெரிய புலமை கொண்டவர்.

1884-ல் வியன்னா பல்கலைக் கழகத்தில் சட்டப்படிப்பை முடித்த சூட்டில் ஒரு முழுநேர எழுத்தாளராகவும் பத்திரிகையாளராகவும் நாடக ஆசிரியராகவும் ஆனவர். வியன்னாவில் அந்நாளில் வெளியான புகழ்பெற்ற ழிமீuமீ திக்ஷீமீவீமீ றிக்ஷீமீssமீ என்கிற தினசரியின் பாரீஸ் நிருபராக அவர் அப்போது பணியாற்றிக்கொண்டிருந்தார்.

ஐரோப்பாவெங்கும் இருந்த தன்னுடைய பத்திரிகை நண்பர்களின் உதவியுடனேயே யூதர்கள் ஒருங்கிணைப்பு முயற்சிகளை அவரால் மேற்கொள்ள முடிந்தது.

அவர் ஒரு நாவல் எழுதினார். ‘கிறீtஸீமீuறீணீஸீபீ’ (என்றால் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட பழைய நிலம் என்று அர்த்தம். 1902-ல் இது ளிறீபீ ழிமீஷ் லிணீஸீபீ என்று ஆங்கிலத்திலும் வெளிவந்திருக்கிறது.) என்கிற அந்நாவலில் முழுக்க முழுக்க யூதர்களின் அடையாளப் பிரச்னைகள் குறித்தே பேசுகிறார்.

யூதர்களை நிச்சயமாக உலகில் யாருக்கும் பிடிக்கவில்லை. பல ஆயிரம் வருடங்களாக மனத்தில் புரையோடிப்போயிருக்கும் கருத்துக்களை ஐரோப்பியர்கள் மாற்றிக்கொள்வார்கள் என்றும் தோனறவில்லை. எனில் யூதர்கள் சுயமரியாதையுடன் வாழ்வதுதான் எப்படி?

இதுதான் ஹெஸிலின் சிந்தனைப் போக்கின் தொடக்கம். இங்கிருந்து புறப்படுபவர், யூதர்களுக்கான ஒரு கற்பனை தேசத்தை (உடோபிய தேசம்) உருவாக்கி, தமது மக்களை அங்கே நகர்த்திச் செல்வது போல கதையைக் கொண்டுபோகிறார்.

யூதர்களுக்கென்று ஒரு தேசம் உருவாகி, அங்கே அவர்கள் ஒரே இனமாக, ஒரே குழுவாக வாழத்தொடங்கினாலொழிய மேற்கத்திய உலகின் நசுக்கலிலிருந்து தப்பிக்க முடியாது என்பதுதான் அவர் அந்நாவலில் சொல்ல வந்த விஷயம். இதையே ஏற்கெனவே 1896-ல் தாம் எழுதிய ஞிமீக்ஷீ யிuபீமீஸீstணீணீt (யூத தேசியம்) என்கிற கட்டுரை நூலிலும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஹெஸிலின் நோக்கம் ஒன்றுதான். எழுத்து அவருக்குக் கைவந்த கலை. அதன் அத்தனை சாத்தியங்களிலும் யூத தேசம் ஒன்றை உருவாக்குவது குறித்த தம் எண்ணங்களை வெளிப்படுத்த அவர் முடிவெடுத்தார். அதற்காகத் திட்டமிட்டுச் செயல்படவும் தொடங்கினார்.

இத்தனைக்கும் தொடக்க காலத்தில் அத்தனை யூதர்களும் தியோடர் ஹெஸிலின் ஜியோனிச இயக்கத்தை ஆதரித்து, அதில் இணைந்துவிட்டார்கள் என்று சொல்லமுடியாது. அதையும் அவநம்பிக்கையுடன் பார்த்தவர்கள் இருந்திருக்கிறார்கள்.

ஆனால் யூத நிலவங்கிகள் பாலஸ்தீனில் திட்டமிட்டபடி நிலங்களை வாங்கிச் சேர்க்கத் தொடங்கிய பிறகு இந்தப் போக்கு அறவே மாறிப்போனது. உலகில் உள்ள அத்தனை யூதர்களும் தம்மை ஜியோனிஸ இயக்கத்துடன் இணைத்துக்கொண்டார்கள்.

மறுபுறம் ஹெஸில், தமது இயக்கத்துக்கு மிகப்பெரிய இடங்களில் ஆதரவு பெறவேண்டும் என்று நினைத்தார். அதாவது யாரும் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத உயர்மட்டங்களின் ஆதரவு.

ஆகவே, அவர் இரண்டு மிக முக்கியப் பயணங்களை மேற்கொண்டார். இது நடந்தது 1898-ம் ஆண்டு. முதலில் ஜெர்மானிய சக்கரவர்த்தி கெய்ஸர் வில்லியம் 2ஐ (ரிணீவீsமீக்ஷீ கீவீறீலீமீறீனீ 2) சந்தித்துப் பேசினார்.

ஐரோப்பாவெங்கும் யூதர்கள் தாக்கப்படுவது பற்றி, யூதர்களும் மனிதர்களே என்பது பற்றி, அவர்கள் சுதந்திரமாக, நிம்மதியாக வாழ ஒரு நிலம் வேண்டும் என்பது பற்றி! ஜெர்மன் கெய்ஸர், மிகுந்த அக்கறையுடன் ஹெஸிலின் கருத்துக்களுக்குக் காது கொடுத்தார். ஆனால் பதில் சொல்லவில்லை.

அடுத்தபடியாக ஹெஸில் இஸ்தான்புல்லுக்குப் போய் ஒட்டாமான் துருக்கியப் பேரரசின் சுல்தான் மெஹ்மூத் வாதிதீனைச் சந்தித்தார். மணிக்கணக்காகப் பேசியும் சுல்தான் வெறுமனே தாடியை உருவிக்கொண்டு சிந்தித்தாரே தவிர அவரும் ஹெஸில் விரும்பும் விதத்தில் எந்தப் பதிலும் சொல்லத் தயாராக இல்லை.

ஆகவே ஹெஸில் யோசித்தார். எந்த ஐரோப்பிய தேசத் தலைவரும் துருக்கி சுல்தானும் தனக்குச் சற்றும் உதவப்போவதில்லை என்கிற அவரது முடிவு இந்த இரு சந்திப்புகளால் மேலும் வலுப்பட்டது.

இறுதி முயற்சியாக பிரிட்டனை மட்டும் அணுகலாம் என்று நினைத்தார். ஒரு யூதரை பிரதம மந்திரியாகவே ஆக்கிய தேசமல்லவா?

ஆகவே அவர் பிரிட்டனுக்குப் புறப்பட்டார். அப்போது பிரிட்டனின் காலனிகளாக இருந்த தேசங்களை நிர்வகித்துக்கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசின் மூத்த அமைச்சர் ஜோசப் சாம்பர்லெயின் ஹெஸிலைச் சந்தித்தார். சாம்பர்லெயின் தவிர வேறு சில முக்கிய அதிகாரிகளையும் ஹெஸிலால் அப்போது சந்தித்துப் பேச முடிந்தது.

ஜெர்மன் சக்ரவர்த்தியும் ஒட்டாமான் சுல்தானும் அளித்த அளவுக்கு பிரிட்டன் அரசுத்தரப்பு ஹெஸிலுக்கு ஏமாற்றம் அளிக்கவில்லை என்றாலும், அவரது தலையாய யோசனையை அதாவது பாலஸ்தீனில் ஒரு யூத தேசம் என்பதை அவர்கள் முதலில் ஏற்கத் தயாராக இல்லை.

சாம்பர்லெயின் மிகத்தெளிவாகச் சொன்னார். யூதர்களுக்கு ஒரு தனிநாடு வேண்டுமென்பது முக்கியம்தான்.

அவர்கள் இனியும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கக் கூடாது என்பதையும் பிரிட்டன் ஏற்றுக்கொள்கிறது. ஆனால், அப்படித் தனியாட்சி உரிமையுடன் அவர்களுக்கான தேசம் ஒன்றை நிறுவுவது என்றால் அதை கிழக்கு ஆப்பிரிக்காவில்தான் செய்ய முடியும். குறிப்பாக, உகாண்டாவில்.

ஹெஸிலுக்குக் கொஞ்சம் ஏமாற்றம்தான். எப்படியாவது பாலஸ்தீனில் ஒரு யூத தேசத்தை உருவாக்க பிரிட்டனைச் சம்மதிக்க வைப்பதுடன் அவர்களது முழு ஆதரவுடன் அதற்கான முயற்சிகளை உடனே தொடங்கிவிட வேண்டும் என்று அவர் எண்ணியிருந்தார்.

இருபதாம் நூற்றாண்டு தொடங்கவிருந்த சூழலில் ஐரோப்பிய அரசியல் வானில் அப்போது ஏற்பட்டுக்கொண்டிருந்த பல சிக்கல்களையும் கருத்தில் கொண்டு, தம்முடைய இந்தக் கோரிக்கைக்கு பிரிட்டன் கண்டிப்பாக சம்மதம் தெரிவிக்கும் என்று அவர் நினைத்தார்.

பிரிட்டனுக்கு யூதர்களின் பரிபூரண ஆதரவைத் திரட்டித் தருவதனால் அவர்கள் மூலம் தங்களுக்கு ஆகவேண்டிய காரியங்களைச் சாதித்துக்கொள்ள முடியும் என்று கருதினார். ஆனால் அதெல்லாம் முடியாமல் ஆகிவிட்டது. ஆகவே, தன் வருத்தத்தைக் காட்டிக்கொள்ளாமல் நாசூக்காகப் பேசிவிட்டுக் கிளம்பிவிட்டார்.

பின்னால் அதே பிரிட்டன்தான் உலகப்போருக்குப் பின் பாலஸ்தீனின் ஆட்சி அதிகாரத்தை வென்று, அங்கே இஸ்ரேல் உருவாவதற்கு முன்னணியில் நின்று உதவி செய்தது.

இதற்கு, மனமாற்றம் காரணம் என்று யூதர்கள் சொன்னாலும் நிறைய பணப்பரிமாற்றம் நடந்த பிறகே பிரிட்டனை வசப்படுத்த முடிந்தது என்று சரித்திரத்தின் வதந்திப் பக்கங்கள் தெரிவிக்கின்றன.

இருபதாம் நூற்றாண்டு பிறந்தபோதே மிகுந்த பரபரப்புடன்தான் பிறந்தது. புதிய நூற்றாண்டுக் கொண்டாட்டங்கள் முடிவதற்குள்ளாகவே உலகப்போர் வந்துவிடப்போகிறது.

அதற்கும் முன்பாக, ரஷ்ய யூதர்கள் மகா அவலமான போராட்டங்களைச் சந்திக்க நேரிட்டது. ஏதாவது உடனடித் தீர்வு அவசியம் என்கிற நிலையில், 1903-ல் கூடிய ஆறாவது ஜியோனிஸ காங்கிரஸ் மாநாட்டில் பிரிட்டன் முன்வைத்த உகாண்டா யோசனையைக்கூட பொருட்படுத்தி விவாதிக்க வேண்டி நேர்ந்தது.

ஹெஸில், தன் அபிப்பிராயம் என்பதாக அல்லாமல், பிரிட்டன் தன்னிடம் தெரிவித்த ஒரு சாத்தியமாக அதனை முன்வைத்தார். அதாவது, உகாண்டாவில் ஒரு யூத தேசம்.

ஆனால், இது ஒரு தாற்காலிகத் தீர்வாக மட்டுமே இருக்கமுடியும் என்பதையும் அவர் அப்போது தெரிவித்தார்.

“ரஷ்யாவில் யூதர்கள் தாங்கமுடியாத கொடுமைகளுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். அங்கிருந்து ஆயிரமாயிரம் யூதர்கள் தினசரி அகதிகளாக வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களெல்லாம் எங்கே போவார்கள்? அகதிகளாகவும், நாடோடிகளாகவும் சுற்றிச்சுற்றியே யூத இனம் மடிந்துபோய்விடும் அபாயம் உண்டாகியிருக்கிறது.

ஆகவே, பிரிட்டன் முன்வைத்த உகாண்டா யோசனையை ஓர் உடனடி ஏற்பாடாக, ஆனால் தாற்காலிக ஏற்பாடாக மட்டும் நாம் சிந்தித்துப் பார்க்கலாம்’’ என்று அந்த மாநாட்டில் பேசினார்.

துரதிருஷ்டவசமாக அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பலரால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஹெஸில் தன் கொள்கையிலிருந்து சறுக்கிவிட்டார் என்று நினைத்துவிட்டார்கள். தவிரவும் அவரை நம்பிக்கைத் துரோகி என்றும் யூதர் குலத்துக்கே எமனாக வந்து சேர்ந்தவர் என்றும் பேசத் தொடங்கினார்கள்.

மிகவும் மனம் ஒடிந்துபோனார் ஹெஸில். எந்த யூதகுலத்துக்காக, அவர்களின் நலனுக்காக நாளெல்லாம் சிந்தித்துச் செயல்பட்டுக்கொண்டிருந்தாரோ, அதே யூதர்கள்தான் அவரை துரோகி என்று சொன்னார்கள்.

இந்த வருத்தத்திலேயே ஹெஸில் படுக்கையில் விழுந்தார். கடும் நிமோனியாக் காய்ச்சல் வந்தது. 1904-ம் ஆண்டு காலமாகிப்போனார்.

பின்னால் தியோடர் ஹெஸிலின் தன்னலமற்ற சேவையும் இஸ்ரேல் உருவாவதற்காக அவர் எடுத்துக்கொண்ட கடும் முயற்சிகளும் மேற்கொண்ட போராட்டங்களும் முழுமையாகத் தெரியவந்தபோது ஒட்டுமொத்த யூதகுலமும் தன் தவறை எண்ணி வருந்தியது.

இன்னொருமுறை இந்தமாதிரி தவறேதும் செய்யக்கூடாது என்று மனத்துக்குள் தீர்மானம் செய்துகொண்டார்கள். ஹெஸிலை ஒரு கண்கண்ட தெய்வமாகவே கருதி எல்லா யூதர்களும் தம் வீட்டில் அவர் புகைப்படத்தை மாட்டிவைத்தார்கள்.

அப்புறமென்ன? மீண்டும் போராடக் கிளம்பிவிட்டார்கள்.

41] யூதர்களின் நில வங்கி தந்திரம். யூத தேசிய காங்கிரஸ் என்கிறோம். யூத நில வங்கிகள் என்கிறோம். யூத காங்கிரஸ் மாநாடு என்கிறோம். இதெல்லாம் பகிரங்கமாக நடந்திருந்தாலோ, அல்லது யார் மூலமாவது தியோடர் ஹெஸிலின் திட்டங்கள் வெளியே தெரிந்திருந்தாலோ என்ன ஆகியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். இன்றைக்குப் பேச முடிகிறது. விலாவாரியாக அலசிப்பார்க்க முடிகிறது. ஆனால் இந்தச் சம்பவங்கள் நடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் காற்றுக்குக் கூடத் தெரியாத ரகசியமாகத்தான் இதையெல்லாம் வைத்திருந்தார்கள். யூதர்களிலே கூட,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *