‘நோன்பு’ சட்டம் – சலுகை – பரிகாரம்
by Abdul Rashid
வசந்தம் என்றாலே மனம் இனிக்கும். ஏனெனில் அது பூமி பூக்கும் காலம். ஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு வசந்தக் காலம் உண்டு. ஒட்டு மொத்த பூமிக்கும் சேர்த்து ஒரு வசந்தம் உண்டா… ஆம் உண்டு. ஆசியாவும், ஆப்ரிக்காவும், அமேரிக்காவும், ஐரோப்பாவும், உலகின் மேல் பகுதியும் கீழ் பகுதியும் ஒன்று சேர்ந்து எதிர்பார்கும் வசந்தம். அந்த வசந்தம் வருவதற்கு முன்பே அந்த வசந்தம் பற்றிய திருவிழாக்கள் ஒவ்வொருவரின் மனதிலும். இதோ நமக்கு எதிரில், அருகில் வந்து விட்டது அந்த வசந்தம். அந்த வசந்தத்திற்கு பெயர் ரமளான். முத்தாக ஒரு மாதம் பூக்கும் அந்த மலர்களுக்குப் பெயர் நோன்பு.
தான் ஒரு இறையடிமை என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் இன்னும் ஆழமாக இறைவனிடமும், உலகப் பார்வையாளர்கள் முன்பும் பதித்துக் கொள்ளும் மாதம். அனுமதிக்கப்பட்ட உணவுகளைக் கூட ஒதுக்கி வைத்து விட்டு பட்டினிக் கிடப்பதில் ஆனந்தம் கொள்ளும் அற்புதம் நிகழும் மாதம்.
இன்று நேற்றல்ல..
வருடந்தோரும் வரும் இந்த வசந்தம் துவங்கி சில நூறு ஆண்டுகளோ, அல்லது வெறும் ஆயிரம் ஆண்டுகளோ ஆகவில்லை. இதன் சரித்திரம் பல ஆயிரம் வருடங்களைக் கடந்ததாகும். இறைவன் நேசிக்கக் கூடிய, இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடக்கக் கூடிய அடியார்கள் என்றைக்கு இந்த பூமியில் வாழத் துவங்கினார்களோ அவர்கள் காலத்திலிருந்து துவங்கியது இந்த வசந்தம்.
நோன்பு என்றால் என்ன?
மனிதன் தன் உள்ளத்தையும் உடலையும் பக்குவப்படுத்துவதற்கு எவ்வளவோ முயற்சி செய்கிறான். அவன் மேற் கொள்ளும் பல்வேறு முயற்சிகளை உள்ளடக்கியதாக நோன்பு அமைந்துள்ளது. எழுத்தில் இதை முழுமையாக விளக்க முடியாது. அனுபவத்தால் மட்டுமே உணரும் காரியமாகும் இது.
பசியின் தன்மை உணர்த்தப்படுகிறது.
வேண்டா கொழுப்புகள் குறைக்கப்பட்டு உடல் நலம் காக்கப்படுகிறது.
தீய எண்ணங்களும் செயல்களும் மனிதனை விட்டு விலகி ஓடுகின்றன.
பிறர் மீதான அக்கறையும் இல்லாதோருக்கு கொடுத்துதவும் மனப்பக்குவமும் கூடுகின்றது. அதிகமான இறை வணக்கங்களால் மனம் மிகுந்த அமைதிப் பெறுகிறது.
பாவக்கறை படிந்தவனாக இருக்கும் நிலையில் மனிதனை மரணம் வந்தடைந்து விடாமல் இருக்க இறைநம்பிக்கையாளர்களின் பாவங்களை அவனை விட்டு அகற்ற இந்த நோன்பு வழிவகுக்கிறது.
நம்பிக்கையுடன் நன்மையை எதிர்பார்த்து எவர் ரமளானில் நோன்பு வைக்கிறாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்று இறைத்தூதர் (ஸல்) கூறியுள்ளார்கள். (அபூஹூரைரா(ரலி) புகாரி முஸ்லிம் திர்மிதி)
நோன்பு எதற்கு?
பகல் நேரங்களில் மனிதனை வருத்தி அவன் தோற்றத்தை பலவீனப்படுத்துவது நோன்பின் நோக்கமல்ல பலவீனமாகவே படைக்கப்பட்ட மனிதனை மேலும் பலவீனப்படுத்துவதற்காக இறைவன் நோன்பை கடமையாக்கி இருந்தால் இரக்க குணமிக்க இறைவனின் பண்பிற்கு மாற்றமாக அது அமைந்து விடும். அதனால் மனிதனை பலவீனப்படுத்தத் தான் நோன்பு என்ற எண்ணமோ அர்த்தமோ தவறானதாகும்.
நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது நீங்கள் உள்ளச்சமுடையோராய் ஆக வேண்டும் என்பதற்காக. (அல் குர்ஆன் 2:183)
மனிதனிடம் இறைவன் பற்றிய உள்ளச்சம் வந்து விட்டால் அவன் தூய்மையடைய அது வழிவகுத்துவிடும் இதற்கான முழு பயிற்சியையும் நோன்பின் மூலம் மனிதன் – ஓரிறை நம்பிக்கையாளர்கள் – பெற முடியும். உலகில் நடக்கும் கொடுமைகள் அனைத்திற்கும் இறைவன் பற்றிய அச்சமும் அவன் பற்றிய நம்பிக்கையும் இல்லாததேயாகும். நோன்பு தொழுகைப் போன்ற பயிற்சியின் வாயிலாக மனிதன் இறைவன் பற்றிய நம்பிக்கையையும் அச்சத்தையும் வளர்த்துக் கொள்ளும் போது அவன் மூலம் பிறருக்கு எவ்வித கெடுதிகளும் ஏற்படுவதில்லை. அல்லது மிகவும் குறைவான கெடுதிகளே அவனால் வெளிப்படும்.
இறைவனுக்காக ஒருவன் தனக்கு பிடித்த – அனுமதிக்கப்பட்ட – உணவுகளை பகல் பொழுதில் திரும்பிக் கூட பார்ப்பதில்லை பிறர் தூண்டினால் கூட உண்பதில்லை இவ்வாறு ஒருநாள் இரண்டுநாள் என்றில்லாமல் ஒருமாதம் முழுதும் பயிற்சி எடுக்கிறான் என்றால் அவனது இந்த பயிற்சியின் பக்குவம் மற்ற மாதங்களில் வெளிப்படவே செய்யும். இறைவன் விரும்பாத செயல்களிலிருந்து அவன் கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொள்வான். இதன் மூலம் அவன் வாழ்வு நிம்மதி அடைவதோடு மட்டுமல்லாமல் அவன் வழியாக பிறரும் நிம்மதியும் – உதவியும் பெறுகிறார்கள்.
வருடந்தோரும் உலக முஸ்லிம்களை சந்தித்து விட்டு செல்லும் இந்த நோன்பின் மூலம் உரிய பயிற்சியைப் பெறாதவர்கள் பயனற்றவைகளுக்கு உதாரணமாகி விடுகிறார்கள்
வயிற்றுப் போக்கு நோயால் அவதிப்படும் ஒருவனுக்கு டாக்டர் சில மருத்துவ முறைகளை கையாள சொல்கிறார். மருத்துவரை சந்தித்து அவருக்குரிய பணத்தையும் கொடுத்து விட்டு மருந்து சீட்டையும் வாங்கி வரும் நோயாளி மருத்துவர் சொன்ன அறிவுரையை மட்டும் கடைப்பிடிக்கவில்லை என்றால் அவன் மருத்துவரை சந்தித்த சந்திப்பில் எப்படி ஒரு பிரயோஜனமும் இல்லாமல் போய்விடுமோ அதே போன்று தான் இந்த ஆன்மீக மருத்துவ மாதத்தை சந்தித்து அதில் பயிற்சிப் பெறாதவர்களின் நிலையுமாகும்.
தன் வயிற்றில் பிறந்த பிள்ளை நல்லப்பிள்ளையாக வளர வேண்டும் என்று நினைக்கும் தாய்க்கு கூடுதல் பொறுப்பு உண்டு. தாய் என்ற உலகத்தை தாண்டி வேறு உலகத்தை குழந்தை எட்டிப்பார்க்க துவங்கும் போது தாயின் கூடுதல் பொறுப்பு வேலை செய்ய துவங்கி விட வேண்டும்.
ஒரு மாணவன் சிறந்தவனாக உருவாக ஆசிரியருக்கு அதிக பொறுப்பு உண்டு. வகுப்பறையைக் கடந்து இதர மாணவர்களோடு அவன் கலக்கும் போது ஆசிரியரின் பொறுப்பு உஷார் நிலையை எட்டி விட வேண்டும்.
தன் குடும்பம் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற ஆசைப்படும் குடும்பத் தலைவனுக்கும் கூடுதல் பொறுப்பு உண்டு. பணத்திலோ – ஆடம்பரத்திலோ – சுக போகங்களிலோ குடும்பம் காலடி எடுத்து வைக்கும் வேலைகளில் இவனுடைய கரம் நீண்டு அவற்றை கட்டுப்படுத்த வேண்டும்.
இந்த கூடுதல் பொறுப்பு குழந்தையையும், மாணவனையும், குடும்பத்தையும் இடற்பாடில்லாத அல்லது இடற்பாடு மிகக் குறைந்துப் போன ஒரு நல்லப் பாதையில் வழி நடத்தி செல்ல உதவும். உலகம் என்ற பகட்டுப் பல்லக்கில் மனிதன் ஊர்வலம் வர துவங்கி விட்டான். உச்சியில் ஊர்வலம் போகும் மனிதனுக்கு உலகம் அழகாகத் தெரியும். இந்த சந்தர்பங்களிலெல்லாம் அவன் பல்லக்கிலிருந்து தவறி விழுந்து விடாமலிருக்க அந்தப் பல்லக்கை இயக்குபவனுக்கு கூடுதல் பொறுப்பு உள்ளது. அந்த கூடுதல் பொறுப்பின் வெளிபாடுகளில் ஒன்றுதான் இந்த நோன்பு. இந்த பயிற்சியை முறையாகப் பெற்றால் வழி கேடுகள் என்ன வசீகரித்தாலும், உலகத்தின் பனிப் பாறைகள் பள்ளத்தாக்குகள் தன்னை நோக்கி ஈர்த்தாலும் பல்லக்கிலிருந்து தவறி விழும் அபாயம் நம்மை அண்டாது. சிந்திக்கும் மக்களுக்கு ரமளான் நல்லப் பயிற்சிக் கொடுக்கும்.
இறையச்சம் உலகில் மிகைக்கும் போது சாந்தி சமாதானம் எங்கும் வியாபித்து நிற்கும். இறையச்சமுள்ள மனிதன் பிற மனிதனுக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படுத்த மாட்டான். இதற்காக இஸ்லாம் பல்வேறு வழிகளில் மனிதனை பக்குவப்படுத்த வழிவகுக்கின்றது. அதில் ஒன்று நோன்பு. வருடந்தோரும் ஓராண்டு இந்த பயிற்சியில் ஒன்றிணையும் போது இந்தப் பயிற்சியின் தாக்கமும் விளைவும் வாழ்வில் பிரதிபளிக்கவே செய்யும்.
தீயவை அனைத்திலிருந்தும் ஒதுங்கும் மாதம் இது. பார்க்கும் சுதந்திரம் இருந்தும், கேட்கும் சுதந்திரம் இருந்தும், பேசும் சுதந்திரம் இருந்தும், சுவைக்கும் சுதந்திரம் இருந்தும் தனக்குள்ள சுதந்திரத்தைக் கூட இறைவனுக்காக புறந்தள்ளி வைக்கும் பயிற்சி. இறை வணக்கங்களிலும், இறை நினைவிலும் திளைத்திருக்கும் பயிற்சி. இந்தப் பயிற்சிகளில் ஈடுபடுவோர் வெறும் சில நூறுகளோ, சில லட்சங்களோ, ஏன் சில கோடிகளோ அல்ல. உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தப் பயிற்சியை மேற்கொள்கிறார்கள். சிறுவர்களும் சிறுமிகளும் கூட இந்தப் பயிற்சியில் தன்னை விரும்பி இணைத்துக் கொண்டு குதூகளிக்கும் ஆனந்தம்.
நோன்பு விதிக்கப்பட்டுள்ளது. இறைநம்பிக்கையுள்ள மனிதன் தூய்மையடைய வேண்டும் என்பதற்காக.
எத்துனை நாட்கள்?
ரமளான் என்பது ஒரு மாதத்தின் பெயர் என்றாலும் சந்திர சுழற்சியை மையமாகக் கொண்ட மாதம் என்பதால் இறைவன் நோன்பிற்கான கால அளவை நாட்கள் என்றே குறிப்பிடுகிறான்.
எண்ணப்படும் நாட்களில் நோன்பு கடமையாகும். (அல்குர்ஆன் 2:184)
எண்ணப்படும் நாட்கள் என்பது 29 நாட்களாகவோ, 30 நாட்களாகவோ இருக்கலாம். துவக்கத்திற்கும் முடிவுக்கும் பிறைப் பார்த்தாக வேண்டும்.
பிறைப் பார்த்து நோன்பு வையுங்கள், பிறைப் பார்த்து நோன்பை விடுங்கள் என்று இறைத்தூதர் கூறியுள்ளார்கள். (அனைத்து நபிமொழி நூட்களிலும் இந்த செய்தி பதியப்பட்டுள்ளது).
பிறை வழிகாட்டல் பற்றியக் கட்டுரை தனியாக இடம் பெற்றுள்ளது
ஒரு பிறைதான் அறிவுப்பூர்வமானது (கட்டுரை)
தேதிக்கோடு சட்ட சிக்கலை உருவாக்குமா..? (கட்டுரை)
பிறைப்பார்ப்பதின் அறிவியல் அர்த்தம் (கட்டுரை)
சலுகையளிக்கப்பட்டவர்கள்.
மனித பலவீனங்களை கருத்தில் கொண்டு இறைவன் இஸ்லாமிய வரையறைகளில் பல்வேறு சலுகைகளை அளித்துள்ளான். நோன்பும் சிலருக்கு சலுகையளிக்கின்றது.
1)நோயாளிகள்.
நோன்பு நாட்களில் ஒருவர் நோய்வாய்படுகிறார். அது தலைவலியோ, காய்ச்சலோ, அல்லது வயிற்றுக் கோளாறுகளோ அல்லது இன்ன பிற எதோ ஒரு நோய். இந்த நோயின் தாக்கத்தால் அவதிப்படுபவர்கள் இந்த நோயால் நோன்பு வைக்க முடியாது அல்லது நோன்பு வைத்தால் நோயின் பாதிப்பு அதிகமாகும் என்று கருதுபவர்கள் நோயின் போது நோன்பு வைக்காமல் ரமளானுக்கு பிறகு நோயிலிருந்து குணமடைந்தவுடன் விடுபட்ட அனைத்து நோன்பையும் நோற்றுவிட வேண்டும்.
ஏமாறுவது நாமே!
இறைவன் பொதுவாக நோயாளி என்று தான் குறிப்பிடுகிறான். இன்ன இன்ன நோய்க்கு சலுகை என்று குர்ஆனிலோ சுன்னாவிலோ பட்டியல் எதுவும் இல்லை. எனவே தலைவலியிலிருந்து மரணப்படுக்கை வரையுள்ள அனைத்து நோயையும் இது உள்ளடக்கவே செய்யும். இந்த நோய், அந்த நோய் என்று வரையறைப் போடும் உரிமை எவருக்கும் இல்லை என்றாலும் முஸ்லிம்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
சாதாரணமாகவே நோன்பு வைக்கும் முதல் நாளில் சிலர் தலைவலிக்கு ஆட்படலாம். நோன்பு திறக்கும் பொழுதுகளில் அனைவருக்குமே ஒரு வித மயக்கம் ஏற்படும். பட்டினி இருக்கும் பொழுதுகளில் வயிற்றில் புரட்டல் போன்ற உணர்வுகள் ஏற்படவே செய்யும். இதையெல்லாம் நோய் என்ற பட்டியலில் கொண்டு வந்து ‘தான் நோயாளி‘ என்று தனக்கு தானே சமாதானம் சொல்லிக் கொண்டு நோன்பு வைக்காமல் இருப்பது அறிவுடமையாகாது. அப்படி செய்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செயலாகும். தலைவலி, மயக்கம் போன்ற நோய்கள் சில மணித் துளிகளில் மறைந்து விடக் கூடியதாகும். அதை காரணங்காட்டி நோன்பை முறித்துக் கொள்வது, அல்லது நோன்பு வைக்காமலிருப்பது நம்மீது நோன்பு என்ற கடனை அதிகப்படுத்தி விடும். தவிர்க்க முடியாத நிலை இருந்தால் மட்டுமே நோன்பை விட வேண்டும். பின் வரும் நாட்களில் நோற்கலாம்.
தொடர் நோய்.
முதுமை ஒரு தொடர் நோய். முதுமைக்கு ஆட்பட்டு விட்டவர்கள் மீண்டும் இளமைக்கு திரும்ப முடியாது என்பதால் நோன்பு வைப்பதை கடினமாக கருதும் முதுமையைப் பெற்றவர்கள் நோன்பு வைக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. நீண்ட நேரம் எதுவும் சாப்பிடாமல் இருப்பது அவர்களின் பலவீனத்தை அதிகப்படுத்தி விடும் என்பதால் இவர்கள் நோன்பிலிருந்து விலக்குப் பெறுகிறார்கள். முதுமையைப் பற்றி இறைவன் குறிப்பிடும் போது ‘அறிவு பெற்று வாழ்ந்தும் பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்மூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்‘ என்று குறிப்பிடுகிறான். (அல்குர்ஆன் 22:5) இத்தகையவர்கள் மீது நோன்பு கடமையில்லை.
தொடர் நோய்க்குட்பட்ட இன்னும் சிலர் இருக்கிறார்கள்.
எயிட்ஸ் நோயாளிகள், எயிட்ஸ் தாக்கப்பட்ட எவரும் மரணத்தின் நாட்களை எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டவர்கள். தனது தவறான போக்கால் இந்த நோயைப் பெற்றுக் கொண்டாலும் இவர்கள் நோன்பிலிருந்து விலக்கு பெற முடியாது. ஏனெனில் நோன்பு வைத்தால் என்ன பலவீனம் ஏற்படுமோ அந்த பலவீனம் எயிட்ஸ் நோயாளிகளுக்கு ஏற்படாது. எனவே எயிட்ஸ் என்பது ஒரு தொடர் நோய் என்ற பொதுவான நிலையை வைத்துக் கொண்டு இவர்கள் நோன்பு வைக்காமல் இருக்க முடியாது. இவர்கள் அவசியம் நோன்புவைத்தாக வேண்டும்.
கோமா நிலைக்குத் தள்ளப்பட்டவர்களும் தொடர் நோயாளியாகக் கருதப்படுவார்கள். அவர்கள் முழு அளவு நோன்பிலிருந்து விதிவிலக்கு பெறுபவர்களல்ல. மீண்டும் தன் நிலைக்கு திரும்பினால் அவர்கள் மீது பழைய நோன்பு கடமையாகும்.
அல்சர் நோயின் தாக்கத்தைப் பெற்றவர்கள் இறை நினைவு மிக்க ஒரு முஸ்லிம் மருத்தவரின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்வது நலம்.
பிரயாணிகளுக்கு சலுகை.
நோயாளிகளைப் போன்று பிரயாணிகளுக்கு உடல் நிலை பாதிப்பு இல்லை என்றாலும் பிரயாணிகள் வேறுபல பிரச்சனைகளை சந்திப்பதால் இஸ்லாம் பிரயாணிகள் குறித்து பல கருத்துக்களை முன் வைத்துள்ளது. அதிலொன்றுதான் பிரயாணிகள் நோன்பை விடலாம் என்ற சலுகை.
அன்றைய பிரயாணம் – இன்றைய பிரயாணம்.
பிரயாணத்தைப் பொருத்தவரை மனிதன் பெருமளவு முன்னேற்றத்தைப் பெற்று வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொண்டாலும் பிரயாணத்தில் ஏற்படும் களைப்பையும் வழியில் பல பிரச்சனைகளையும் சந்திக்கவே செய்கிறான். அன்றைக்கு ஒட்டகம், குதிரை, கழுதை போன்ற மிருகங்களை தங்கள் பிரயாண வாகனமாக அனைவரும் பயன்படுத்தினார்கள். இன்றைக்கும் அந்த மிருகங்கள் உலகில் பல நாடுகளில் பிரயாணத்திற்கு பயன்படவே செய்கின்றது.
பிரயாணம் செய்யும் வாகனங்களையெல்லாம் சிலர் கருத்தில் எடுத்துக் கொண்டு இன்றைய பிரயாணங்கள் பிரயாணங்களே அல்ல. மனிதன்; வீட்டில் இருக்கும் போது எப்படி இருக்கின்றானோ அதே நிலையை பிரயாணத்திலும் பெற்று விட்டான் என்றெல்லாம் விளக்கமளித்து இன்றைக்கு எந்த பிரயாணியும் நோன்பிலிருந்து சலுகைப் பெற முடியாது என்றெல்லாம் கூறுகிறார்கள். மேலைநாடுகளில் வசித்துக் கொண்டு ஏசி கார்களை கையில் வைத்துக் கொண்டு பிரயாணம் செய்பவர்களை பார்ப்பவர்கள் மட்டுமே இத்தகைய கருத்தை முன் வைக்க முடியும். (இருந்தாலும் அவர்களை பிரயாணி என்று சொல்லக் கூடாது என்ற கருத்து தவறாகும்).
இதில் பிரயாணம் செய்யும் வாகனங்களையெல்லாம் கருத்தில் எடுத்துக் கொண்டு பிரயாணியை தீர்மானிக்க வேண்டும் என்பதற்கு துணை ஆதாரங்கள் கூட ஒன்றும் கிடைக்கவில்லை. இன்றைக்கு விரைவு வாகனங்கள் இருப்பது போன்று அன்றைக்கு குதிரைகள் பயன்பட்டன. எனவே சொந்த ஊரிலிருந்து வெளியில் கிளம்பும் அனைவரும் பிரயாணியாகவே கருதப்படுவர்.
பிரயாணத்தில் இருப்பவர்கள் நோன்பு வைப்பது சிரமம் என்று கருதினால் அவர்கள் பிரயாணத்தின் போது நோன்பை விட்டு விட்டு பிரயாணம் இல்லாத மற்ற நாட்களில் கணக்கிட்டு நோற்று விட வேண்டும். சிலர் தினந்தோரும் பிரயாணம் செய்பவர்களாக இருப்பார்கள். உதாரணமாக வெளியூர் அலுவலகங்களில் வேலை செய்பவர்கள், தொழிலுக்காக வெளியூர் செல்பவர்கள் இவர்கள் தினந்தோரும் பிரயாணம் செய்பவர்களாக இருப்பதால் தொடர்;ச்சியாக நோன்பிலிருந்து விலக்கு பெறுவார்களா.. என்று சிலர் நினைக்கலாம். நிரந்தர நோயாளிகளைப் போன்று நிரந்தர பிரயாணி என்று எவருமில்லை. எனவே பிரயாணிகள் பிற நாட்களில் நோன்பை நோற்க வேண்டிய நிலையிலுள்ளவர்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தினந்தோரும் பிரயாணத்தை காரணங்காட்டி இவர்கள் நோன்பை விட்டால் வரும் நாட்களில் இவர்கள் நோன்பை நோற்க முடியாமல் போய்விடும் நிலை ஏற்படும். ஏனெனில் ரமளானுக்கு பிறகும் இவர்களின் தின பிரயாணம் தொடரவே செய்யும்.
நோன்பு காலங்களிலேயே நோன்பை வைத்து விடுவதுதான் இவர்களைப் போன்றவர்களுக்கு இலகுவாகும். ஏனெனில் கடமையான மாதம் என்ற எண்ணத்தில் பொழுது கழியும். பிற மதத்தவர்களும் இது முஸ்லிம்களுக்கு நோன்பு மாதம் என்று தெரிவதால் அலுவல்களில் முஸ்லிம்களுக்கு வேலையில் உதவி புரிவார்கள். தேவையான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவும் வாய்ப்புகள் கிடைக்கும். ரமளான் கழிந்து நோன்பு வைப்பவர்கள் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது என்பதால் அவர்கள் நோன்பு வைத்து விடுவதுதான் சிறந்தது.
நபி(ஸல்) பிரயாணத்தின் போது நோன்போடு இருந்தும், நோன்பை விட்டும் வழிகாட்டியுள்ளார்கள். எனினும் உலகில் உள்ள அனைவரையும் விட அவர்கள் இறைவனை அதிகம் அஞ்சியதால் விடுபட்ட நோன்புகளை நோற்க மிகுந்த கவனம் எடுத்துக் கொண்டு அந்தக் கடமையை நிறைவேற்றினார்கள். இன்றைக்கு நோன்பு என்ற சூழ்நிலை நிலவும் போதே நோன்பு வைப்பது சிரமம் என்று கருதுபவர்கள் பிற நாட்களில் அதை தவறவிட்டு விடும் அபாயம் உள்ளதால் அந்தக் கடமையை அதற்குரிய நாட்களில் நிறைவேற்றி விடுவதுதான் நல்லது.
நோன்பும் – பெண்களும்
நோயாளிகள் – பிரயாணிகள் என்ற பொது சலுகையில் அந்த நிலையைப் பெற்ற பெண்களும் அடங்குவார்கள் என்றாலும் பெண்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு இன்னும் சிலரும் சலுகைப் பெறுகிறார்கள்.
மாதவிலக்கு.
பெண்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பலவீனத்தை ஏற்படுத்தும் நாட்கள் மாவிலக்கு நாட்கள். எனவே அந்த சந்தர்பங்களில் அவர்கள் கூடுதல் பலவீனத்தை அடைந்து விடக் கூடாது என்பதால் மாதவிலக்கு நாட்களில் நோன்பு வைப்பதிலிருந்து இஸ்லாம் சலுகையளித்துள்ளது.
நாங்கள் மாதவிலக்கு நாட்களில் தொழுகையையும் நோன்பையும் விட்டுவிடுமாறும் பிற நாட்களில் நோன்பை மட்டும் நோற்குமாறும் நாங்கள் கட்டளையிடப்பட்டுள்ளோம் என நம்பிக்கையாளர்களின் தாயார் ஆய்ஷா(ரலி) அறிவிக்கிறார்கள். (அனைத்து ஹதீஸ் நூல்களிலும் இந்த செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது)
மாதவிலக்கிற்கான விளக்கங்கள்.
சாராசரியாக குறிப்பிட்ட நாட்களில் மாதவிடாய் ஏற்படும் பெண்கள் மாதவிடாய் ஏற்படும் நேரத்தை கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் அன்றைய தினம் முன் கூட்டியே நோன்பை விட்டு விடலாம். உதாரணமாக ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மாதவிலக்கு ஏற்படும் பெண் நோன்பு மாதத்திலும் அதே நாளில் இன்றைக்கு மாதவிலக்கு ஏற்படும் என்று தெளிவாக தெரிந்தால் நோன்பு வைக்கமால் இருந்து விடலாம். ஆனால் அன்றைய தினம் நோன்பு முடிந்த பிறகுதான் மாதவிலக்கு ஏற்படும் (உதாரணமாக இரவு 7மணிக்கு) என்று தெரிந்தால் அத்தகைய பெண்கள் அன்றைய தினம் நோன்பை வைத்து விட வேண்டும்.
மாதவிலக்கு நாட்களில் கோளாறு உள்ளப் பெண்கள் மாதவிடாய் ஏற்படும் வரை நோன்பை விடக் கூடாது. உதாரணமாக இன்றைக்கு அல்லது நாளைக்கு மாதவிடாய் ஏற்படலாம் என்று நம்பும் பெண்கள் அந்த சந்தேகத்திற்காக நோன்பை விட்டு விடக் கூடாது. இன்றைக்கு ஏற்படலாம் என்று எண்ணி நோன்பை விட்டு விட்டு அன்றைக்கு மாதவிலக்கு ஏற்படவில்லை என்றால் அந்த நோன்பு களாவாகி விடும். எனவே இத்தகைய பெண்கள் நோன்பை தொடர்ந்து விட வேண்டும். இத்தகைய நிலையில் உள்ள பெண் நோன்பு வைத்துள்ளார் அன்றைய பொழுது மாதவிலக்கு வந்து விடுகிறது என்றால் தானாகவே நோன்பு முறிந்து விடும். பிறகு அதை களா செய்ய வேண்டும். இந்த மாதவிலக்கு நோன்பு திறப்பதற்கு முன் எந்த நேரத்தில் ஏற்பட்டாலும் (நோன்பு முடிய 5 நிமிடங்களே உள்ள நிலையில் மாதவிலக்கு ஏற்பட்டாலும்) நோன்பு முறிந்து விடும். அதை களா செய்ய வேண்டும்.
தொடர் இரத்தப் போக்கு.
சிலர் அபூர்வமாக இந் நிலைக்கு ஆட்படுவார்கள். அதை மாவிடாய் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. தொடர் இரத்தப் போக்கு என்பது ஒரு நரம்பு நோயின் தன்மையாகும். இந்த நிலையை அடைந்தவர்கள் தொழுகையையோ, நோன்பையோ விட்டு விட அனுமதியில்லை.
தொடர் இரத்தப் போக்கு ஏற்பட்ட பாத்திமா பின்த் கைஸ் என்ற நபித்தோழிக்கு இறைவனின் தூதர் தொழுகையிலிருந்து விலக்கு அளிக்கவில்லை. குளித்து விட்டு தொழுமாறு வழிகாட்டியுள்ளார்கள். வழக்கமாக மாதவிடாய் ஏற்படும் நாட்களை கணக்கிட்டு அந்த நாட்களில் தொழுகையை விட்டு விடுமாறு பணிந்துள்ளார்கள்.
தொடர் உதிரப் போக்கு ஏற்படும் பெண்கள் அந்த நோயால் பலவீனம் அடையவில்லை என்றால் அவர்கள் நோன்பு நோற்க வேண்டும். இரத்தம் வெளியேறுவதை கருத்தில் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒருவேளை இந்த தொடர் உதிரப் போக்கு தாங்க முடியாத பலவீனத்தை கொடுக்கின்றதென்றால் அத்தகையப் பெண்கள் ‘தொடர் நோயாளி‘யாகக் கருதப்படுவார்கள். அவர்கள் பரிகாரம் செய்ய வேண்டும்.
கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்.
மாதவிடாய் ஏற்பட்டப் பெண்கள் நோன்பை விட்டு விட்டு பிறகு களா செய்ய வேண்டும் என்பதற்கு நேரடியாக ஹதீஸ் இருப்பதுப் போன்று கர்ப்பிணி – பாலூட்டும் பெண்கள் நோன்பை களா செய்யலாம் என்பதற்கு நாம் தேடி பார்த்த வரை எந்த ஒரு ஹதீஸூம் கிடைக்கவில்லை.
நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: இன்னல்லாஹ அஸ்ஸவஜல்ல வழஅ அனில் முஸாபிரி அஸ்ஸவ்ம வஷத்றஸ் ஸலாத்த வஅனில் ஹூப்லா வல்முர்ளிஇ அஸ்ஸவ்ம. அல்லாஹூ கர்பிணித் தாய்கும் பாலூட்டும் தாய்கும் நோன்பை அகற்றி விட்டான் என்று நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளார்கள்.
அல்லாஹ் விலக்களித்துள்ளான் என்பது நிரந்தரமானதா.. தற்காலிகமானதா.. என்பதில் கருத்து வேறுபாடு நிலவுகின்றது. கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களை பொருத்தவரை அவர்கள் சூழ்நிலையை அணுசரித்தே முடிவெடுக்க வேண்டும் என்பதே நமக்கு சரியாகப்படுகின்றது.
அல்லாஹ் நோயாளிகளுக்கும் பிரயாணிகளுக்கும் சலுகையளித்துள்ளான். கர்ப்பிணி பெண்களும் சலுகைப் பெருகிறார்கள் என்று நபி(ஸல்) விளக்கியுள்ளார்கள். நோயாளிகளிலும், பிரயாணிகளிலும் தற்காலிக சலுகையும் நிரந்தர சலுகையும் பெற்றவர்கள் இருக்கிறார்கள். இவர்களில் இந்த பெண்கள் யாரோடு ஒத்துப் போவர்கள் என்பதை பார்ப்போம்.
பிரயாணிகளின் நிலையும் கர்ப்பிணிப் பெண்களின் நிலையும் வெவ்வேறானவை என்று நாம் சிந்தித்தால் நோயாளிகளைப் பற்றி பேசும் வசனம் இவர்களுடன் ஒத்துத்தான் போகும்.
உங்களில் எவரேனும் பிரயாணத்திலோ அல்லது நோயாளியாகவோ இருந்தால் அவர் வேறு நாட்களில் நோற்றுவிடவும். (அல் குர்ஆன் 2:184,185)
நோயாளிகளும் – கர்ப்பிணிகளும்.
நோயளிகளுக்கு நோன்பு தேவையில்லை என்று சொல்வதற்கு நியாயம் இருந்தும் இறைவன் அவர்களுக்கு நிரந்தர விலக்களிக்கவில்லை. நோயிலிருந்து விடுபட்டவுடன் நோற்க வேண்டும் என்று கூறி விட்டான். நோயாளிகளுக்கே இதுதான் நிலவரம் என்றால் கற்பிணிகளுக்கோ – பாலூட்டுபவர்களுக்கோ முழுவதுமாக விலக்களித்திருக்க முடியாது. இன்னும் சொல்லப் போனால் கர்ப்பிணி – பாலூட்டுபவளை விட நோயாளிகளே அதிக சிரமத்திற்குள்ளாகுபவர்கள். நோன்பிலிருந்து முழுதும் விலக்களிக்க தகுதியுள்ளவர்கள் இவர்கள் தான். இவர்களையே இறைவன் பின் வரும் நாட்களில் நோன்பை பூர்த்தி செய்யுங்கள் என்று சொல்லியுள்ளதால் இந்த வசனத்திற்கு முரண்படாமல் அந்த ஹதீஸை விளங்குவதுதான் பொருத்தமானதாகும்.
தொடர் நோயாளிகளும் – தொடர் கர்ப்பிணிகளும்.
நோயாளிகள் பின்வரும் நாட்களில் நோன்பை நோற்கலாம் என்றால் அவர்கள் நோயிலிருந்து விடுதலைப் பெற வேண்டும். சுகம் பெற முடியாத அளவிற்கு தொடர் நோயால் தாக்கப்பட்டவர்கள் (உதாரணமாக முதுமை – வயிற்றுப் பிரச்சனைகள் போன்றவற்றை சொல்லலாம்) ஒவ்வொரு நோன்புக்கு பகரமாகவும் ஒரு ஏழைக்கு உணவளித்து விடவேண்டும். இதை 2:184 வசனத்திலிருந்து விளங்கலாம்.
இதே நிலை கர்ப்பிணிப் பெண்களுக்கும் ஒத்துதான் போகும். எப்படி என்றால், கர்ப்பம் தரித்ததிலிருந்து குழந்தைப் பெற்றெடுத்து பாலூட்டி முடியும் வரை மூன்று வருடத்துடைய, குறைந்த பட்சம் இரண்டு வருடத்துடைய நோன்பு அவளுக்கு விடுபட்டுப் போய் விடும். அதன் பிறகு அவள் தொண்ணூரு நாட்கள் – குறைந்த பட்சம் அறுபது நாட்கள் நோன்பு நோற்க வேண்டி வரும். இதுவே அவளுக்கு சுமை என்றாலும் அந்த சந்தர்பத்தில் அவள் அடுத்த கர்ப்பம் தரித்து விட்டால் மீண்டும் இரண்டு மூன்று மாத நோன்புகள் கணக்கில் வந்து நின்று விடும். அவள் காலம் முழுதும் நோன்பு நோற்கும் சூழ்நிலை ஏற்பட்டு விடும். இஸ்லாத்தில் உள்ள எந்த ஒரு வணக்கமும் மனிதர்களை இப்படி தொடர் சிரமத்திற்கு உள்ளாக்குவது போன்று கடமையாக்கப்படவில்லை என்பது நாம் அனைவரும் அறிந்த வெளிப்படையான விஷயம்.
தொடர் நோயாளிகளைப் போன்று தொடர் கர்ப்பம் பாலூட்டல் போன்ற கடமைகளால் சிரமப்படும் பெண்கள் நோன்பிற்கு பகரமாக ஒவ்வொரு நாளும் ஒரு ஏழைக்கு உணவளித்து விடலாம் என்பதே நமக்கு சரியாகப் படுகிறது. சிரமத்தை உணராத பெண்கள் – சிரமத்தை பொருட்படுத்தாத பெண்கள் நோன்பு நோற்பதைப் பற்றி ஆட்சேபனையில்லை.
2:185 வது வசனத்தில் வரும் ‘இறைவன் உங்களுக்கு இலகுவானதையே நாடுகிறான் அவன் உங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தவில்லை‘ என்ற சொற்சொடரை ஒன்றுக்கு பல முறை சிந்தித்தால் நம்முடைய கருத்து சரியானதுதான் என்பது தெளிவாகும்.
குழந்தைக்கு பாலூட்டக் கூடிய தாயிடம் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் ‘நீ நோன்பு நோற்கும் சக்தி இல்லாதவள்தான் அதனால் ஒவ்வொரு நாளும் ஒரு ஏழைக்கு உணவு கொடுத்து விடு‘ என்று கூறியுள்ளார்கள். (தாரகுத்னி – தப்ரி விரிவுரை)
எனவே கர்ப்பிணி – பாலூட்டும் பெண்கள் நோன்பை களா செய்து தான் ஆக வேண்டும் என்று வலியுறுத்த நம்மிடம் ஆதாரமில்லை (அல்லாஹ் மிக்க அறிந்தவன்)
முடியாதவர்களுக்குப் பரிகாரம் என்ன?
சில சட்டங்களில் இஸ்லாம் சிலருக்கு சலுகையளிக்கின்றது. சலுகையையும் பயன்படுத்த முடியாத அளவிற்கு பலவீனமானவர்கள் பரிகாரம் செய்யலாம் என்ற சட்டத்தையும் இஸ்லாம் முன் வைக்கின்றது.
மேற்கண்ட விளக்கங்களுக்கான ஆதார குர்ஆன் வசனத்தை இப்போது பார்ப்போம்.
எண்ணப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால், எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்து (நோன்பிருப்பதை சிரமமாகக் கருதினால் நோன்பை விட்டு விட்டு) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்;. (நோன்பு வைக்கமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டு) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக – ஃபித்யாவாக – ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும்;. எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது – (இருப்பினும்) நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும். (அல் குர்ஆன் 2:184).
1) நோன்பு கடமையாகும்
2) சில காரணங்களால் அந்த சந்தர்பங்களில் நோன்பிருக்க முடியாதவர்கள் அதை பின்னர் களா செய்ய வேண்டும்
3) நோன்பு வைக்கவே முடியாத நிலைக்கு தள்ளப்பட்டவர்கள் பரிகாரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும். (ஒரு நோன்புக்கு பரிகாரமாக ஒரு எழைக்கு உணவு)
4) பரிகாரம் செய்பவர்கள் விரும்பினால் அதிகமாகவும் செய்யலாம்.
5) என்னத்தான் பரிகாரத்திற்கு இறைவன் வழிகாட்டினாலும் அவன் நோன்பு வைப்பதையே விரும்புகிறான்.
இந்த ஐந்து சட்டங்களும் இந்த வசனத்தில் பொதிந்துள்ளன.
நோன்பு வைக்க முடியாத முதியவர்கள், தொடர் நோயாளிகள் தினமும் ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்பதை நாம் தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும். ‘உணவு‘ என்றவுடன் உணவு சமைத்து ஏழையை அழைத்து வந்து உண்ணவைக்க வேண்டும் என்று நாம் விளங்கிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் இவர்கள் எந்த ஏழையை அழைக்கின்றார்களோ அந்த ஏழைகளும் நோன்பு வைத்தவர்களாக இருக்கும் வாய்ப்புள்ளது. எனவே உணவு என்பதை சமைக்காத உணவுப் பொருள் (உதாரணமாக அரிசி, காய்கரி வகைகள், மாமிச வகைகள்) மற்றும் அதற்கான பொருளாதாரம் என்றுதான் புரிந்துக் கொள்ள வேண்டும். அல்லது இவர்களைப் போன்று நோன்பு வைக்க முடியாத நிலையில் உள்ள வசதி வாய்ப்பற்ற ஏழைகளுக்கு உணவளிக்கலாம்.
இறைவன், அவன் மார்க்கத்தை விளங்கிப் பின்பற்றி அவன் நேசத்தைப் பெற்றுக் கொண்டிருக்கும் கூட்டத்தில் நம்மையும் ஆக்கி வைப்பானாக.
வசந்தம் என்றாலே மனம் இனிக்கும். ஏனெனில் அது பூமி பூக்கும் காலம். ஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு வசந்தக் காலம் உண்டு. ஒட்டு மொத்த பூமிக்கும் சேர்த்து ஒரு வசந்தம் உண்டா… ஆம் உண்டு. ஆசியாவும், ஆப்ரிக்காவும், அமேரிக்காவும், ஐரோப்பாவும், உலகின் மேல் பகுதியும் கீழ் பகுதியும் ஒன்று சேர்ந்து எதிர்பார்கும் வசந்தம். அந்த வசந்தம் வருவதற்கு முன்பே அந்த வசந்தம் பற்றிய திருவிழாக்கள் ஒவ்வொருவரின் மனதிலும். இதோ நமக்கு எதிரில், அருகில் வந்து…
Recent Comments
Archives
- April 2023
- May 2022
- April 2022
- January 2022
- August 2019
- June 2019
- January 2019
- June 2018
- February 2018
- December 2017
- November 2017
- June 2017
- February 2017
- December 2016
- June 2016
- January 2016
- December 2015
- November 2015
- October 2015
- August 2015
- July 2015
- June 2015
- May 2015
- April 2015
- March 2015
- February 2015
- January 2015
- December 2014
- November 2014
- October 2014
- September 2014
- August 2014
- July 2014
- June 2014
- May 2014
- April 2014
- March 2014
- February 2014
- January 2014
- December 2013
- November 2013
- October 2013
- September 2013
- August 2013
- July 2013
- June 2013
- May 2013
- April 2013
- March 2013
- February 2013
- December 2012
- November 2012
- October 2012
- September 2012
- August 2012
- July 2012
- June 2012
- May 2012
- April 2012
- March 2012
- February 2012
- January 2012
- December 2011
- November 2011
- October 2011
- September 2011
- August 2011
- July 2011
- June 2011
- May 2011
- April 2011
- March 2011
- February 2011
- January 2011
- December 2010
- November 2010
- October 2010
- September 2010
- August 2010
- July 2010
- September 2009
- August 2009
- June 2009
- May 2009
- April 2009
- March 2009
- February 2009
- January 2009
- December 2008
- November 2008
- October 2008
- September 2008
- August 2008
- June 2008
- March 2008
- January 2008
- December 2007
- June 2007
- May 2007
- April 2007
- March 2007
- February 2007
- January 2007
- December 2006
- October 2006
- September 2006
- August 2006
- July 2006
- June 2006