நிலமெல்லாம் ரத்தம் – 27 & 28
by Abdul Rashid
27] சுல்தான் ஸலாஹுதீன்..
பாலஸ்தீன் என்னும் பெருநிலப்பரப்பின் மிக முக்கிய அடையாளமான ஜெருசலேம் என்கிற நகரைக் கைப்பற்றுவது என்னும் நோக்கமுடன் தொடங்கப்பட்டன, சிலுவைப்போர்கள்.
உண்மையில் நிலத்தைக் கைப்பற்றுவதல்ல இப்போர்களின் நோக்கம். அது மட்டுமே என்றால் வழக்கமான நாடு பிடிக்கும் யுத்தங்களுள் ஒன்றாக இதுவும் கருதப்பட்டிருக்கும். மாறாக, இஸ்லாத்தின் பரவலைத் தடுத்து, மத்திய ஆசியாவில் கிறிஸ்துவ சாம்ராஜ்ஜியம் ஒன்றை நிறுவுவதன் மூலம் நிரந்தரமாக கிறிஸ்துவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் ஓர் இரும்புத்திரை எழுப்புவதே சிலுவைப்போர்களின் ஆதார நோக்கமாக இருந்திருக்கிறது.
கிறிஸ்துவம் எத்தனையோ வழிகளில் பரவிக்கொண்டிருந்தது. பிரசாரம் அவற்றுள் ஒன்று. மக்கள் இயல்பான உணர்ச்சிப்பெருக்கால் கிறிஸ்துவத்துக்கு மாறிக்கொண்டிருந்தது இன்னொன்று. நாடுகளை வெற்றி கொள்வதன் மூலம் மதத்தைப் பரவலாக்குவது செயல்திட்டத்தின் மூன்றாவது அம்சம்தான்.
ஆயினும் ஜெருசலேம் விஷயத்தில் ஐரோப்பிய சிலுவைப்போர் வீரர்கள் நடந்துகொண்டவிதம் பற்றி சரித்திரம் அத்தனை நல்லவிதமாகக் குறிப்பிடுவதில்லை. யுத்த நெறிமுறைகளை அவர்கள் காற்றில் பறக்க விட்டார்கள் என்பது மிக மேலோட்டமான ஒரு குற்றச்சாட்டு.
வெற்றி கொள்ளும் பகுதிகளில் இருந்த மாற்று மதத்தவர்களை அவர்கள் காட்டுமிராண்டிகள் போல் வெட்டிச் சாய்த்ததுதான் இன்றளவும் சிலுவைப்போர்களின் முதல் அடையாளமாகச் சொல்லப்பட்டுவருகிறது.
மிஸாட் என்கிற சரித்திர ஆசிரியர், விட்டால் உலகிலுள்ள அத்தனை முஸ்லிம் மற்றும் யூத மதத்தவர்களையும் கொன்று புதைத்துவிட்டு, அவர்களைப் புதைத்த இடங்களிலெல்லாம் தேவாலயங்களை எழுப்பி அடையாளத்தை மறைத்துவிடும் வெறியில் அவர்கள் இருந்தார்கள் என்று சற்று மிகைப்படவே இதனைச் சித்திரிக்கிறார்.
அத்தனை மோசமாக மற்ற ஆசிரியர்கள் சொல்லாவிட்டாலும் அட்டூழியங்களைப் பற்றிக் கணக்கு வழக்கில்லாத புள்ளிவிவரங்கள் கிடைக்கவே செய்கின்றன.
அப்போது மத்திய ஆசியாவில் ஆட்சிப்பொறுப்பில் இருந்த கலீஃபாக்களின் திறமைக் குறைவும் இதற்கு ஓரெல்லை வரை காரணம். இதனை ஏற்கெனவே பார்த்திருக்கிறோம்.
முந்தைய நூற்றாண்டுகளில் எத்தனைக்கெத்தனை முஸ்லிம்களின் ஆட்சி வலு ஏறிக்கொண்டே இருந்ததோ, அத்தனைக்கத்தனை பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு பலமிழந்துகொண்டிருந்தார்கள். வாரிசு அரசியல் இதன் முக்கியக் காரணம். சுல்தானுக்குப் பிறகு அவர் மகன் என்கிற ஏற்பாடு ரேஷன் கார்டுக்குப் பொருந்தலாமே தவிர, மாபெரும் சாம்ராஜ்ஜிய நிர்வாகத்துக்கு எப்போதும் உகந்ததல்ல.
சுல்தான் திறமைசாலியாக இருந்தால் அவரது மகனும் அப்படியே இருப்பார் என்று கூறுவதற்கில்லை அல்லவா? தவிரவும் நெருக்கடி மிக்க நேரங்களில் இத்தகைய ஏற்பாடு, மிகுந்த அபத்தம் விளைவிப்பதாக மாறிவிடுவதையும் தவிர்க்க முடியாது.
இன்னொரு காரணம், சுயநலம். சொந்த தேசத்திலிருந்தே எத்தனை கொள்ளை அடிக்க முடியும் என்று ஆட்சியாளர்கள் கணக்கிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தது. வசூலிக்கப்படும் வரிகளைச் சில தனி நபர்களே பெரும்பாலும் பங்குபோட்டுக்கொள்ளும் வழக்கம் அன்றைய மத்திய ஆசியா முழுவதும் பரவலாக இருந்துவந்தது. இதனால் ராணுவம் போன்ற முக்கியத் துறைகளுக்கு உரிய பலம் சேர்ப்பதற்கான பணம் போய்ச் சேராமலேயே போய்விட்டது.
சுல்தான்களைச் சுற்றி இருந்த காக்கைக்கூட்டம் மூன்றாவது முக்கியக் காரணம். இவர்கள் பெரும்பாலும் அமைச்சர்களாகவோ, பிராந்திய கவர்னர்களாகவோ, முக்கியத் தளபதிகளாகவோ இருந்தார்கள். பெரும்பாலும் சுல்தானை தலைநகரிலிருந்து கிளப்பி எங்காவது கோடை வாசஸ்தலத்துக்கோ, குளிர்வாசஸ்தலங்களுக்கோ அழைத்துப்போய் நிரந்தர போதையில் ஆழ்த்தி வைத்திருப்பார்கள்.
கச்சேரி, மது, கேளிக்கை என்று வாழ்க்கையை உல்லாசமாக அனுபவித்துக்கொண்டிருந்த சுல்தான்கள் யுத்தம் என்று வரும்போது இயல்பாக அச்சம் ஏற்பட்டு, வேறு யாரிடமாவது சிந்திக்கும் பொறுப்பைக் கொடுத்துவிடுவார்கள்.போதாது?
சாம்ராஜ்ஜியம் அழியத் தொடங்கியது இதனால்தான். ஜெருசலேத்தைக் கைப்பற்றிய சிலுவைப்போர் வீரர்களை அடக்கி, அதன் ஆட்சியை மீண்டும் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின்கீழ் கொண்டுவர, முஹம்மத் என்கிற ஒரு சுல்தான் கிடைத்தார் என்றால், அந்த வெற்றிக்கு வயது அவரது ஆயுட்காலம் வரை மட்டுமேதான். முஹம்மதின் மரணத்துக்குப் பிறகு மீண்டும் பழைய குருடி கதவைத் திறந்துவைத்து கிறிஸ்துவர்களுக்கே ஜெருசலேத்தை வழங்கினாள்.
சிலுவைப்போராளிகளிடம் ஒரு திட்டம் இருந்தது. நகரம் தங்கள் வசம் இருக்கும் காலத்தில் கூடியவரை இஸ்லாமிய மற்றும் யூத அடையாளச் சின்னங்களை அழித்து ஒழித்துவிடுவது. வழிபாடு நடக்கிறதோ இல்லையோ, ஜெருசலேம் எங்கும் கிறிஸ்துவ தேவாலயங்களை எழுப்பி நிறுத்திவிடுவது.
காலத்தின் ஓட்டத்தில் நடந்தவையெல்லாம் மறந்துபோகக் கூடும். சாட்சிகளாக நிற்கும் தேவாலயங்கள் காலம் கடந்து நிற்கும். ஜெருசலேம், கிறிஸ்துவர்களின் பூமிதான் என்பதை அவையே எடுத்துச் சொல்லும்.
தேவாலயங்களின் அடியில் புதைந்த உயிர்களும் பிற மதங்களின் அடையாளச் சின்னங்களும் கூட அதற்கே மௌன சாட்சியாக வேண்டிய அவசியம் உண்டாகும்.
இந்தச் செயல்திட்டத்தின்படி அவர்கள் இயங்கினார்கள். ஒட்டுமொத்த ஐரோப்பாவும் திரண்டெழுந்து அவர்களுக்குப் பண உதவி செய்தது. எல்லாவற்றுக்கும் மேலாக போப்பாண்டவரின் ஆசீர்வாதம். வேறென்ன வேண்டும்? எப்படியும் ஒரு ஐம்பதாண்டு காலத்துக்குள் ஜெருசலேத்தை மையமாக வைத்து ஒரு பெரிய கிறிஸ்துவ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டி எழுப்பிவிடமுடியும் என்றே அவர்கள் நினைத்தார்கள். கி.பி. 1173 வரை இது தொடர்ந்தது.
அந்த வருடம் கலீஃபாவாக இருந்த நூருத்தின் மஹ்மூத் என்பவர் இறந்துபோனார். வழக்கப்படி அவரது வாரிசான மலீக்ஷா என்கிற சிறுவன் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியாக ஆக்கப்பட்டான். சிறுவன் என்று சொல்வது கொஞ்சம் அதிகப்படி. சிறுவனுக்கும் இளைஞனுக்கும் இடைப்பட்டதொரு பொடியன் என்று வைத்துக்கொள்ளலாம்.
வயதோ, அனுபவமோ ஏதுமற்றவன். குமுஷ்டஜின் (Gumushtagein) என்றொரு குறுநில மன்னன், இவனுக்கு வழிகாட்டியாக உடனிருந்தான். குறுநிலத்துக்கு அவன் மன்னனே ஒழிய, சாம்ராஜ்ஜியத்துக்கு தளபதி மாதிரி.
இளைஞனான கலீஃபாவை எப்போது ஒழித்துக்கட்டி, தான் சக்கரவர்த்தியாவது என்கிற கனவுடன் அதற்கான செயல்திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருந்தவன் அவன்.
அந்தச் சமயம் கலீஃபாவின் பிரதிநிதியாக எகிப்தை ஆண்டுகொண்டிருந்தவர் பெயர் சலாவுதீன். சரித்திரத்தில் எப்போதாவது உதிக்கும் சில நல்ல ஆத்மாக்களுள் ஒருவர். ஐயோ சாம்ராஜ்ஜியம் இப்படி நாசமாகிறதே என்கிற கவலை கொண்டவர். மத்திய அரசுக்கு விசுவாசமானவர். ஒரு முயற்சி செய்து பார்க்கலாம், தலைநகருக்குப் போய் கலீஃபாவைச் சந்தித்து நிலவரத்தை எடுத்துச் சொல்லி கிறிஸ்துவர்களுக்கு எதிரான யுத்தத்தை முடுக்கிவிடலாம் என்று நினைத்தார்.
சலாவுதீன் சுல்தானைச் சந்தித்துவிட்டால் தன்னுடைய அரிசி, பருப்புகள் வேகாமல் போய்விடுமே என்று அஞ்சிய குமுஷ்டஜின், அவர் புறப்பட்டு வரும் செய்தி கிடைத்ததும் சுல்தானைக் கிளப்பிக்கொண்டு வேறொரு இடத்துக்குப் போய்விட்டான்.
சலாவுதீன் விடாமல் சுல்தான் எங்கெல்லாம் அழைத்துப் போகப்படுகிறாரோ, அங்கெல்லாம் பயணம் மேற்கொண்டார்.
ஒரு கட்டத்தில் குமுஷ்டஜின்னுக்கு எதிராக யுத்தம் செய்யவும் தயாராகி, வெறுப்பில் தனியொரு மன்னனாகவே தாம் முடிசூட்டிக்கொண்டுவிடலாமா என்று யோசிக்கிற அளவுக்கே போனார் சலாவுதீன்.
இதற்கொரு காரணம் கூட இருந்தது. இந்த சலாவுதீன் ஒரு பெரிய வீரர். கலீஃபாவின் பிரதிநிதியாக எகிப்தை ஆண்டுகொண்டிருந்தவர் என்றபோதும், தமது சுயபலத்தால் லிபியாவின் ஒரு பகுதி, ஏமன், ஹிஹாஸ் போன்ற இடங்களை கிறிஸ்துவர்களிடமிருந்து வென்று இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தில் இணைத்திருந்தவர் அவர். பலவீனமான நான்கைந்து பகுதிகளை வெற்றி கொள்ள முடிந்த தன்னால், கவனம் குவித்தால் பலம் பொருந்திய ஜெருசலேத்தையும் வெல்லமுடியும் என்று நினைத்தார். ஜெருசலேம் கிறிஸ்துவர்கள் பிடியில் இருந்தது அவருக்குச் சகிக்க முடியாததாக இருந்தது.
ஒரு மரியாதை கருதியே அவர் இதற்காக சக்கரவர்த்தியின் உத்தரவு கேட்டுப் போயிருந்தார்.
ஆனால் சக்கரவர்த்தி, இன்னொருவரின் கைப்பாவையாக இருந்ததால் வேறு வழியின்றி யுத்தத்துக்குத் தயாராகவேண்டியிருக்கும் என்று அறிவித்தார்.
நல்லவேளையாக அப்படியரு யுத்தம் ஏற்படவில்லை. பயந்துபோன கலீஃபா, உடனடியாக சலாவுதீனைத் தனியொரு சுல்தானாக அங்கீகரித்து (அதாவது, குறுநில மன்னர்) அவர் அப்போது ஆண்டுகொண்டிருந்த பகுதிகளை அவரே ஆளலாம், சக்கரவர்த்தியின் குறுக்கீடுகள் இருக்காது என்று சொல்லிவிட்டார். (இப்படியும் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் சிதறுண்டது வேறு விஷயம்!)
கி.பி. 1182-ம் ஆண்டு தமது பத்தொன்பதாவது வயதில் கலீஃபா மலீக்க்ஷா மரணமடைந்தார். அதுவரை சலாவுதீன் பொறுமை காத்திருந்தார். மலீக்ஷா மரணமடைந்துவிட்ட செய்தி கிடைத்ததுமே தமது படைகளைத் திரட்டிக்கொண்டு புறப்பட்டுவிட்டார். கிட்டத்தட்ட மத்திய ஆசியா முழுவதையும் கபளீகரம் செய்யத் தொடங்கியது அவரது ராணுவம்.
இன்னும் ஓரிரண்டு இடங்களைப் பிடித்துவிட்டால் அவர்தான் கலீஃபா என்கிற நிலை. ஏராளமான சிற்றரசர்களும் பிராந்திய கவர்னர்களும் சலாவுதீனுடன் போர் செய்ய விரும்பாமல், தாமே முன்வந்து அவருக்கு அடிபணிவதாக எழுதிக்கொடுத்துவிட்டுப் போனார்கள்.
சலாவுதீன் வீரர்தான். அதில் சந்தேகமில்லை. ஒட்டுமொத்த மத்திய ஆசியாவையும் கைப்பற்றுவதென்பதும் சாதாரண விஷயமில்லை. ஆனால் நமக்குத் தெரிந்த அலெக்சாண்டர் போலவோ, ஒளரங்கசீப் போலவோ மாவீரனாக இவரை சரித்திரம் ஓரிடத்திலும் சொல்லுவதில்லை.
ஆனால், அன்றைய மத்திய ஆசியாவெங்கும் ஆண்டுகொண்டிருந்த மன்னர்களிடையே ‘சலாவுதீன் அச்சம்’ என்பது ஒரு தவிர்க்கமுடியாத நோயாகப் பரவியிருந்தது இதன் அடிப்படைக் காரணமாகிறது.
இதனடிப்படையில்தான் அவர் போகிற இடங்களெல்லாம் அவருக்கு அடிபணிந்தன.
சிரியா அப்போது கிறிஸ்துவர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. மிகவும் கவனமாக சலாவுதீனின் வழியில் குறுக்கிடாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் ஓர் அசந்தர்ப்பமான சூழலில் அந்நாட்டு வழியே போன ஒரு முஸ்லிம் வர்த்தகக் குழுவை சிரிய ராணுவம் தாக்கிக் கொன்றுவிட, சலாவுதீன் சிரியா மீது படையெடுக்க முடிவு செய்தார்.
1187-ம் ஆண்டு அந்த யுத்தம் ஆரம்பமானது. டைபிரியஸ் (Tiberious) என்கிற இடத்தில் நடந்த யுத்தம். சிலுவைப்போர்களின் வரிசையில் மிகக் கொடூரமாக நடந்த யுத்தங்கள் என்று சில சொல்லப்படுவதுண்டு. அவற்றுள் ஒன்று இது. கிட்டத்தட்ட பத்தாயிரம் கிறிஸ்துவ வீரர்கள் இந்தப்போரில் இறந்துபோனார்கள்.
சலாவுதீனின் படை அதுவரை அடக்கிவைத்திருந்த ஆத்திரம் முழுவதையும் இந்த யுத்தத்தில் வெளிப்படுத்தியது. அவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும். சிரியாவுடன் தொடங்கும் இந்த யுத்தம் கண்டிப்பாக ஜெருசலேத்தில் போய்த்தான் முடியும்.
அப்படித்தான் ஆனது.
டால்மெய்ஸ், நப்லஸ், ரமல்லா, சீசர்லா, பெய்ரூத், ஜாஃபா உள்ளிட்ட அன்றைய சிரியாவின் பல நகரங்களைக் கைப்பற்றி முன்னேறிய முஸ்லிம்களின் படை, சரியாக ஜெருசலேத்தின் வாசலில் வந்து நின்றது.
அன்றைக்கு ஜெருசலேத்தில் மொத்தம் அறுபதாயிரம் கிறிஸ்துவ ராணுவ வீரர்கள் இருந்தார்கள். பல்வேறு தேசங்களிலிருந்து ஜெருசலேம் வந்து வசிக்கத் தொடங்கியிருந்த கிறிஸ்துவர்களின் எண்ணிக்கையோ கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம். தவிர, சில பத்தாயிரம் உள்ளூர்வாசிகள். ஒரு யுத்தம் என்று ஆரம்பமானால் எப்படியும் லட்சக்கணக்கில்தான் உயிரிழப்பு இருக்கும் என்று திட்டவட்டமாகத் தெரிந்தது.
ஒட்டுமொத்த முஸ்லிம் ராணுவமும் யுத்த உத்தரவுக்காகத் தினவெடுத்துக் காத்துக்கிடந்த அந்தக் கடைசிக்கணத்தில் சுல்தான் சலாவுதீன், யாருமே எதிர்பாராவிதமாக ஒரு காரியம் செய்தார்.
ஜெருசலேம் மக்களுக்கு அவர் ஓர் அறிவிப்பு வெளியிட்டார்.
“அன்புக்குரிய ஜெருசலேம் நகரின் பெருமக்களே! ஜெருசலேம் ஒரு புனிதபூமி என்பதை உங்களைப் போலவே நானும் அறிவேன். ஒரு யுத்தத்தின் மூலம் அந்த மண்ணில் ரத்தம் சிந்தப்படுவதை நான் விரும்பவில்லை. நீங்களாக விரும்பி கோட்டையை ஒப்படைத்துவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.
அப்படிச் செய்வீர்களானால், என் மொத்த சொத்தில் ஒரு பகுதியையும் நீங்கள் சாகுபடி செய்வதற்குத் தேவையான நிலத்தையும் நான் உங்களுக்கு அளித்துவிட்டு வந்த வழியே போய்விடுவேன். யுத்தம்தான் தீர்வு என்று நீங்கள் முடிவு செய்வீர்களானால், விளைவுகளுக்கான பொறுப்பு என்னுடையதல்ல என்பதை இப்போதே தெரிவித்துவிடுகிறேன்.’’
மிரட்டல் அல்ல. திமிரும் அல்ல.
உண்மையிலேயே சலாவுதீன் ஜெருசலேத்தில் ரத்தம் சிந்தக்கூடாது என்று விரும்பியிருக்கிறார்! அதே சமயம், ஜெருசலேத்தைக் கைப்பற்றியே தீருவது என்பதிலும் உறுதியாக இருந்திருக்கிறார். அதனால்தான் அப்படியரு அறிவிப்பைச் செய்தார்.
ஜெருசலேம் மக்கள் யோசிக்கத் தொடங்கினார்கள். அவர்களது யோசனைப்பாதைக்கு நேரெதிரான பாதையில் சிலுவைப்போர் வீரர்களும் யோசிக்க ஆரம்பித்தார்கள்.
28] கிறிஸ்தவர்களிடம் கரிசனம்.
நம்பமுடியாத அளவுக்கு இரக்க சுபாவம், அன்பு, கனிவு, பொறுமை, போரில் நாட்டமின்மை போன்ற குணங்களைக் கொண்ட மன்னர்கள் மிகவும் அபூர்வம். இத்தகையவர்களைச் சரித்திரத்துக்குள் நுழைந்து தேடினால் இரு கை விரல்களுக்குள் அடங்கிவிடும் எண்ணிக்கை.
குறிப்பாக, மத்திய ஆசிய சுல்தான்களுள் இத்தகைய குணம் படைத்தவர்கள் மிக மிக சொற்பம். அந்தச் சொற்ப எண்ணிக்கைக்குள் அடங்குபவர்களில் சுல்தான் சலாவுதீன் முதன்மையானவர் மட்டுமல்ல; சற்று வித்தியாசமானவரும் கூட.
ஜெருசலேம் நகரை சலாவுதீனின் படைகள் சூழ்ந்து நின்றதும் பொதுமக்களுக்கு அவர் விடுத்த வேண்டுகோள் எத்தனை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதே அளவு முக்கியத்துவம் கொண்டது, அந்த அறிவிப்புக்குப் பின்னால் நடந்த சம்பவங்களும்.
உண்மையில் ஜெருசலேம் மக்கள் பெரும்பாலும் அப்போது கிறிஸ்துவர்கள்; ஒரு முழுநீள யுத்தத்துக்கு மனத்தளவில் தயாராக இல்லை. சலாவுதீனின் தொடர் வெற்றிகள் ஏற்படுத்தியிருந்த பயம் அதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். இத்தனை தூரம் இறங்கிவந்து அன்பாகப் பேசுகிற சுல்தானைப் பொருட்படுத்தாமல் விட்டால் பின்விளைவு வேறு விதமாக இருக்குமோ என்கிற யோசனையும் காரணமாயிருக்கலாம். பேச்சுவார்த்தை மூலம் ஒரு சமாதானத் தீர்வு சாத்தியமா என்று கண்டறியவே அவர்கள் விரும்பினார்கள்.
ஆனால் ஜெருசலேத்தை அப்போது ஆண்டுகொண்டிருந்த கிறிஸ்துவ ஆட்சியாளர்கள் வேறு மாதிரி சிந்தித்தார்கள். முஸ்லிம்படை நகருக்கு வெளியே முற்றுகையிட்டிருக்கிறது. சரி. எத்தனை காலம் அவர்களால் தாக்குப்பிடிக்க முடியும்?
நகருக்குள் போதுமான உணவு, மருத்துவ வசதிகள் அப்போது இருந்தன. பல மாதங்கள் வரையிலும் கூடச் சமாளித்துவிட முடியும். கோட்டைக் கதவுகளைத் திறக்காமலேயே ஆனவரை முஸ்லிம் வீரர்களைச் சோர்வு கொள்ளச் செய்வது. அதையும் மீறி யுத்தம் தொடங்குமானால் அப்போது பார்த்துக்கொள்ளலாம். தவிர, அதற்குள் ஐரோப்பாவிலிருந்து மேலும் சில படை உதவிகள் வந்து சேரலாம்.
ஆட்சியாளர்களின் இந்தத் திட்டம் சிலுவைப்போர் வீரர்களுக்கே பிடிக்கவில்லை என்பதுதான் இதில் முக்கியமானது. அவர்கள் தொடர் யுத்தங்களால் அப்போது மிகவும் சோர்ந்திருந்தார்கள். தவிர, கோட்டைக்குள் சிறைப்பட்டிருப்பது போல அடைந்து கிடப்பதிலும் அவர்களுக்கு விருப்பம் இல்லை. நிச்சயமாகத் தாங்களே கதவுகளைத் திறந்து யுத்தத்தைத் தொடங்கினால், தோல்வியை மட்டுமே சந்திக்க நேரிடும் என்பதையும் அவர்கள் அறிந்திருந்தார்கள்.
ஆகவே, தங்கள் நிலையை அவர்கள் ஆட்சியாளர்களிடம் வெளிப்படையாகச் சொல்லிவிட்டார்கள். யுத்தம் தொடங்கினால் வெற்றி கிடைப்பது இம்முறை கஷ்டம். வீம்புக்காக முற்றுகையை அனுமதித்துக்கொண்டிருந்த அப்போதைய ஜெருசலேம் ஆட்சிமன்றத்துக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.
மாதங்கள் கடந்தும் முற்றுகை முற்றுப்பெறாததை எண்ணிக் கொஞ்சம் கவலைப்படத் தொடங்கினார்கள். இப்படியே தாக்குப்பிடிப்பது சிரமம் என்று எப்போது புரிந்ததோ, அப்போது சுல்தான் சலாவுதீனுக்கு அமைதித் தூது அனுப்பினார்கள்.
சுல்தான் புன்னகை செய்தார். யுத்தம் வேண்டாம். அவ்வளவுதானே?
அவர் முதலில் முன்வைத்த கோரிக்கையும் அதுதான். ஆகவே தம் சம்மதத்தைத் தெரிவித்ததோடு அல்லாமல் இன்னும் சில படிகள் இறங்கிவந்து ஜெருசலேம்வாசிகளுக்குச் சில சலுகைகளையும் அறிவித்தார்.
அந்த விநாடியிலிருந்து பாலஸ்தீன் முழுமையாக இஸ்லாமியப் பேரரசின் கட்டுப்பாட்டின்கீழ் வந்துவிடும். அதன்பின் ஜெருசலேத்தில் உள்ள மக்கள் அனைவரும் பேரரசின் குடிமக்களாக அங்கீகரிக்கப்படுவார்கள். உள்ளூர் கிறிஸ்துவர்கள், பல ஐரோப்பிய தேசங்களிலிருந்து வந்து நிரந்தரமாகத் தங்கியிருக்கும் கிறிஸ்துவர்கள் அனைவருக்குமே இது பொருந்தும்.
மத வித்தியாசம் பார்க்கப்பட மாட்டாது. யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுடன் அவர்கள் சமமாக அங்கே வாழலாம். ஆனால், இந்தச் சலுகை ராணுவ வீரர்களுக்குப் பொருந்தாது. (அதாவது சிலுவைப்போர் வீரர்களுக்குப் பொருந்தாது.)
அவர்கள் மட்டும் தம் குடும்பத்தினருடன் நாற்பது தினங்களுக்குள் ஜெருசலேத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும். உயிருக்கு உத்தரவாதம் உண்டு. நகரை விட்டு வெளியேறும் சிலுவைப்போர் வீரர்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட மாட்டாது. ஆனால் அப்படி வெளியேறுவதற்குப் பிணையத் தொகையாக அவர்கள் தலைக்குப் பத்து தினார்கள் (இந்த தினார் என்பது அந்நாளைய சிரிய நாணயத்தைக் குறிக்கும்.) கட்ட வேண்டும். வீரர்களின் குடும்பப் பெண்கள் தலைக்கு ஐந்து சிரிய தினார் செலுத்தினால் போதும். குழந்தைகள் என்றால் ஒரு தினார்.
இந்தப் பிணையத் தொகையைச் செலுத்தாதவர்கள் சுல்தானின் அடிமைகளாகத் தொடர்ந்து இருக்க வேண்டியிருக்கும் என்றும் உத்தரவிடப்பட்டது.
இதன்பிறகுதான் வியப்பூட்டும் நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின.
சுல்தான் சலாவுதீன், அரசாங்க ரீதியில் எடுக்கவேண்டிய நடவடிக்கையாக மேற்சொன்ன உத்தரவைப் பிறப்பித்துவிட்டார். ஆனால் உடனே அவருக்கு சிலுவைப்போர் வீரர்களின் மீது சற்றே இரக்கம் உண்டானது. உயிருக்குப் பயந்திருக்கும் வீரர்களிடம் கப்பம் வசூலிப்பது பாவமல்லவா என்று அவருக்குத் தோன்றிவிட்டது.
ஆகவே, பிணையக் கைதிகள்தான் என்றாலும் தமது சாம்ராஜ்ஜிய எல்லைக்குள் வசிப்பவர்கள் அல்லவா? ஆகவே அவர்களும் தம் குடிமக்கள்தான்.
அவர்களது கஷ்டத்தைப் போக்குவதும் தன்னுடைய கடமையே என்று நினைத்தவர், கோட்டைக்குள் இருந்த அறுபதாயிரம் சிலுவைப்போர் வீரர்களுள் பத்தாயிரம் பேருக்கான பிணையத் தொகையைத் தானே தன் சொந்தப் பணத்திலிருந்து கட்டிவிடுவதாக அறிவித்தார்! அத்துடன் இன்னும் ஏழாயிரம் வீரர்களுக்கான தொகையைத் தன் சகோதரர் சைபுத்தீன் என்பவர் அளிப்பார் என்றும் சொல்லிவிட்டார்.
சுல்தானே இப்படியரு நடவடிக்கை மேற்கொள்வதைப் பார்த்துவிட்டு அவரது அமைச்சர் பெருமக்கள், தளபதிகள் சும்மா இருக்க முடியுமா?
ஒவ்வொருவரும் ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டு முடிந்தவரை சிலுவைப்போர் வீரர்களுக்கான பிணையத் தொகையைக் கட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.
மிகப்பெரிய குற்றவாளிகள் என்று தனித்தனியே அடையாளம் காணப்பட்ட சிலுவைப்போர் வீரர்கள் சிலரைத் தவிர, பெரும்பான்மையான கிறிஸ்துவ வீரர்கள் சுல்தான் சலாவுதீனின் இத்தகைய நடவடிக்கையால் ஒரு பைசா செலவில்லாமல் சுதந்திரமாக திரிபோலிக்கும் டைர் நகருக்கும் செல்ல முடிந்தது.
நூற்றுக்கணக்கான கிறிஸ்துவ வீரர்கள் தங்களது வயது முதிர்ந்த பெற்றோர்களைத் தலையில் தூக்கிக்கொண்டு நடந்து செல்வதைப் பார்த்த சலாவுதீன், அவர்களுக்கு அரசாங்கச் செலவில் கழுதைகள் வாங்கிக்கொடுக்கவும் உத்தரவிட்டார்!
ஜெருசலேத்தின் அரசியாக அப்போது இருந்தவர் பெயர் சிபில்லா. அவரது கணவரும் ஜெருசலேத்தின் மன்னருமாக இருந்தவரின் பெயர் காட்ஃபிர்டி பொயிலான். அன்றைய தேதியில் ஒட்டுமொத்த மத்திய ஆசிய முஸ்லிம்களுக்கும் இந்த பொயிலான்தான் சரியான வில்லன்.
செய்த அட்டூழியங்களும் படுகொலைகளும் கொஞ்ச நஞ்சமல்ல. வாழ்நாளெல்லாம் அன்பையும் இரக்கத்தையும் கருணையையும் மட்டுமே போதித்த இயேசுநாதரின் பெயரைச் சொல்லிக்கொண்டு, ரத்தத்தால் ஒரு சாம்ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்பப் பாடுபட்டுக்கொண்டிருந்தவர் அவர்.
அத்தகைய மன்னனின் பட்டத்து ராணியான சிபில்லா, நகரை விட்டு வெளியேறியபோது ஒரு முஸ்லிம் வீரர்கூட அவமரியாதையாக நடந்துகொண்டுவிடக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தார் சலாவுதீன்.
ராணிக்கு உரிய மரியாதைகள் செய்து, அவருடன் வந்த பல்லாயிரக்கணக்கான பெண்களுக்கு வேண்டிய பண உதவிகள், ஆடைகள், உணவுப்பொருள்கள் போன்றவற்றை அளித்து, கௌரவமாகவே வழியனுப்பிவைத்தார்!
என்ன பிரச்னையாகிவிட்டதென்றால், இப்படி பாலஸ்தீனிலிருந்து புறப்பட்டு வெளியேபோன கிறிஸ்துவ சிலுவைப்போர் வீரர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் அண்டை நாடுகளில் அடைக்கலம் கிடைக்கவில்லை.
அவர்கள் எகிப்துக்குப் போனபோது எந்த நகரமும் அவர்களைச் சேர்த்துக்கொள்ளவில்லை. ஒரு மைல் தூரத்தில் வருகிறார்கள் என்பது தெரிந்ததுமே நகர மக்கள் கோட்டைக்கதவுகளைச் சாத்திக் கொண்டுவிடுவார்கள். ஆச்சர்யம், அப்போது அங்கிருந்தவர்களும் கிறிஸ்துவர்களே!
ஆகவே, குடிமக்களாக வாழ வழியற்று அவர்கள் அகதிகளாக சிரியாவுக்கு வந்து சேர்ந்தார்கள்.
அன்று சிரியாவில் அகதிகளுக்கான நிவாரணத் திட்டங்கள் என்று ஏதும் கிடையாது. ஊரில் சுற்றித்திரியலாம். அதற்குத் தடையில்லை. ஆனால் உதவிகள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை.
அகதிகள் நல்வாழ்வு, மறுவாழ்வு குறித்தெல்லாம் அன்றைய சிரிய அரசு சிந்தித்திருக்கவில்லை.
ஆகவே பல்லாயிரக்கணக்கான ஜெருசலேம் அகதிகள் அன்றைக்குச் சிரியாவில் பட்டினியிலும் குளிரிலும் மடிந்துபோனார்கள். ஊர்களுக்கு ஒதுக்குப்புறமாக, பெரும்பாலும் ஆற்றங்கரைகளில், மணல்வெளி ஓரங்களில் கூடாரம் அடித்துத் தங்கியிருந்த இந்த சிலுவைப்போர் வீரர்களின் குடியிருப்புப் பகுதிகளை கொடுமையான நோய்கள் தாக்கின. சரியான சுகாதார வசதிகள் இல்லாததாலும் பலர் இறந்தார்கள்.
திரிபோலியில் கோட்டைக்கதவுகள் அடைக்கப்பட்டு ஆண்களும் பெண்களும் நாள் கணக்கில் கவனிப்பாரின்றி வெளியே கிடந்தபோது, பசியால் துடித்த தன் குழந்தையொன்றுக்கு உணவிட முடியவில்லை ஒரு தாயால். வேறு வழியே இல்லாமல் கதறியபடி அக்குழந்தையைக் கடலில் வீசிக் கொன்றாள். பிறகு திரிபோலி நகரின் கோட்டையை நோக்கித் திரும்பி நின்று அந்தத் தாய் சபித்ததை சிலிர்ப்புடன் அத்தனை சரித்திர ஆசிரியர்களும் பதிவு செய்திருக்கிறார்கள்.
கோட்டைக்கு உள்ளே இருந்தவர்களும் கிறிஸ்துவர்கள். வெளியே அல்லாடிக்கொண்டு, அகதிகளாக நின்றவர்களும் கிறிஸ்துவர்கள். சொந்த சமூகத்து மக்களுக்கே உதவ மறுத்த கோட்டைக் கிறிஸ்துவர்கள் நாசமாகப் போகட்டும்.
அவர்களது பெருங்கனவான மத்திய ஆசியாவில் கிறிஸ்துவ சாம்ராஜ்ஜியம் என்கிற எண்ணம் நசிந்து போகட்டும். ஒட்டுமொத்த அரபு மண்ணிலிருந்தும் கிறிஸ்துவர்கள் வேரோடு பெயர்த்து வீசப்படட்டும்.
ஒரு தாயின் சாபம்!
இதனால்தான் என்று சொல்லிவிட முடியாதென்றாலும் அப்படித்தான் பின்னால் ஆகிப்போனது.
எத்தனைக்கெத்தனை ஐரோப்பாவில் கிறிஸ்துவம் வலுவாக வேரூன்றிக்கொண்டதோ, அத்தனைக்கு அத்தனை அரேபியாவில் அதன் செல்வாக்கு நாளுக்கு நாள் தேய்ந்து மறையத் தொடங்கிவிட்டது.
இவையெல்லாம் ஒரு புறமிருக்க, ஜெருசலேத்தை முற்றுகையிட்டு, வெற்றியும் பெற்றுவிட்டிருந்த சுல்தான் சலாவுதீன் இன்னும் கோட்டைக்கு வெளியேதான் இருக்கிறார். வெற்றி வீரராக, நகருக்குள் அவர் காலெடுத்து வைக்கவில்லை. ஏன் அப்படி?
விசாரித்த அவரது மந்திரி பிரதானிகளுக்கு அவர் அளித்த பதில் இன்னும் வினோதமானது. “மொத்த சிலுவைப்போர் வீரர்களும் நகரை விட்டு வெளியேறிவிட்டார்களா என்று தெரியவில்லை.
இன்னும் ஒரு சிலர் நகரில் இருக்கலாம். அவர்கள் இருக்கும்போதே நாம் வெற்றி விழா ஊர்வலமாக உள்ளே போனால் அவர்கள் மனம் மிகவும் வருத்தப்படும். என்னதான் இருந்தாலும் அவர்களும் குறிப்பிட்ட காலம் இந்நகரை ஆட்சிபுரிந்தவர்கள் அல்லவா? அவர்களை நாம் அவமானப்படுத்தக்கூடாது!’’
இப்படியும் ஒரு மன்னர் இருந்திருக்கிறார் என்றால் நம்புவது கொஞ்சம் சிரமம்தான். ஆனால் சலாவுதீன் இப்படித்தான் இருந்திருக்கிறார்! அதற்கு என்ன செய்வது?
சலாவுதீன் ஜெருசலேம் நகரை முறைப்படி கையகப்படுத்தி, தமது அதிகாரத்தை அங்கே நிலைநாட்டிவிட்டு, சாவகாசமாக அரசுப்பணிகளில் ஈடுபடத் தொடங்கியபோது, நகரிலிருந்து வெளியேறிய கிறிஸ்துவர்கள் அண்டை நாடுகளில் பல கஷ்டங்கள் அனுபவிக்கிற செய்தி வந்து சேர்ந்தது.
அடடாவென்று உடனே மீண்டும் பரிதாபப்பட்டவர், அவர்கள் அத்தனை பேரும் தமது ஆளுகைக்கு உட்பட்ட டைர் (Tyre) நகரில் குடியேறி வசிக்கலாம் என்று அனுமதியளித்தார்.
சிலுவைப்போர் வீரர்கள் எகிப்திலிருந்தும் சிரியாவிலிருந்தும் இன்னும் பல இடங்களிலிருந்தும் டைருக்கு வந்து சேர்ந்தார்கள். சுல்தான் சலாவுதீன் இத்தனை கருணையுள்ளவராக இருப்பார் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஆகவே ஏதாவது செய்து அந்தக் கருணைக்கு ‘நன்றி’ சொல்லவேண்டாமா?
டைருக்கு வந்த சிலுவைப்போர் வீரர்கள் உடனே அங்கிருந்த கிறிஸ்துவ சமூகத்தினர் அத்தனை பேரையும் ஒன்று திரட்டினார்கள்.
ஜெருசலேத்திலிருந்து சலாவுதீனையும் முஸ்லிம் படையினரையும் என்ன செய்து ஓட ஓட விரட்டலாம் என்று உட்கார்ந்து ஆலோசிக்க ஆரம்பித்தார்கள்!
27] சுல்தான் ஸலாஹுதீன்.. பாலஸ்தீன் என்னும் பெருநிலப்பரப்பின் மிக முக்கிய அடையாளமான ஜெருசலேம் என்கிற நகரைக் கைப்பற்றுவது என்னும் நோக்கமுடன் தொடங்கப்பட்டன, சிலுவைப்போர்கள். உண்மையில் நிலத்தைக் கைப்பற்றுவதல்ல இப்போர்களின் நோக்கம். அது மட்டுமே என்றால் வழக்கமான நாடு பிடிக்கும் யுத்தங்களுள் ஒன்றாக இதுவும் கருதப்பட்டிருக்கும். மாறாக, இஸ்லாத்தின் பரவலைத் தடுத்து, மத்திய ஆசியாவில் கிறிஸ்துவ சாம்ராஜ்ஜியம் ஒன்றை நிறுவுவதன் மூலம் நிரந்தரமாக கிறிஸ்துவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் ஓர் இரும்புத்திரை எழுப்புவதே சிலுவைப்போர்களின் ஆதார நோக்கமாக இருந்திருக்கிறது. கிறிஸ்துவம்…
0 Comments
Leave a Reply Cancel reply
Recent Comments
Archives
- April 2023
- May 2022
- April 2022
- January 2022
- August 2019
- June 2019
- January 2019
- June 2018
- February 2018
- December 2017
- November 2017
- June 2017
- February 2017
- December 2016
- June 2016
- January 2016
- December 2015
- November 2015
- October 2015
- August 2015
- July 2015
- June 2015
- May 2015
- April 2015
- March 2015
- February 2015
- January 2015
- December 2014
- November 2014
- October 2014
- September 2014
- August 2014
- July 2014
- June 2014
- May 2014
- April 2014
- March 2014
- February 2014
- January 2014
- December 2013
- November 2013
- October 2013
- September 2013
- August 2013
- July 2013
- June 2013
- May 2013
- April 2013
- March 2013
- February 2013
- December 2012
- November 2012
- October 2012
- September 2012
- August 2012
- July 2012
- June 2012
- May 2012
- April 2012
- March 2012
- February 2012
- January 2012
- December 2011
- November 2011
- October 2011
- September 2011
- August 2011
- July 2011
- June 2011
- May 2011
- April 2011
- March 2011
- February 2011
- January 2011
- December 2010
- November 2010
- October 2010
- September 2010
- August 2010
- July 2010
- September 2009
- August 2009
- June 2009
- May 2009
- April 2009
- March 2009
- February 2009
- January 2009
- December 2008
- November 2008
- October 2008
- September 2008
- August 2008
- June 2008
- March 2008
- January 2008
- December 2007
- June 2007
- May 2007
- April 2007
- March 2007
- February 2007
- January 2007
- December 2006
- October 2006
- September 2006
- August 2006
- July 2006
- June 2006
mr. suhaib…
it is very useful…
trhere is some parts in 10 – 20 are missing… (not all parts… but some…)
please add those too