நினைவலைகள் தாக்கிவிட்டால்…

நினைவலைகள் தாக்கிவிட்டால்…

(பல வருடங்கள் கழித்து கல்லூரிக்குள் சென்றபோது)


உரு இருந்த பொழுதும்

துரு பிடித்த வண்ணமாய்

சுவரோடு சுவாரஸ்யமாய் பேசிக்கொண்டிருந்த …

கல்லூரிவாசல் கம்பிக்  கதவுகளை

சற்று தள்ளிய வண்ணமாய் கால் பதித்தேன் …

சருகுகளின் சலங்கை ஒலியில் …

சல்லிக் கற்களின் மெட்டி சப்தத்தில் …

கல்லூரிப் பெண் பூப்பெய்தியிருந்தாள்

அங்கிருந்த அசோக மரங்கள்

காற்றுக் காதலியை கைகோர்த்து வந்து

சிரம் தாழ்த்தி வரவேற்றன…


பூமித்தாயோ கட்டிடங்களை கருவுற்றிருந்தாள்

மிதி வண்டியும்; ரிக்க்ஷா வண்டியையும்

விஞ்ஞானம் என்ற சோதனைக் குழாயின் மூலம்

“மோட்டார் சேய்” யாக இருந்தன …


வகுப்பறைத் தாழ்வாரங்களெல்லாம்

என்னைத் தொட்டுப் பெசிக்கொண்டன – எங்கள்

மேஜைகள் ; இருக்கைகளின் “கல்வெட்டுக்கள்”

புதிய மாணவர்களுக்கு ஒரு “புதைப் பொருள்”

ஆராட்சிப் பொக்கிஷம் போல் …


முகம் பார்த்து பார்த்து பிரிந்தது மட்டுமின்றி

இழந்து விட்ட  சோகத்தினால் என்னவோ!

கரும்பலகை துக்கவண்ணம் பூசியவாறு …

பேராசிரியர்களுக்கெல்லாம் பதவி உயர்வு

கொடுத்ததோ இல்லையோ

வயது “முதுமை” என்ற பதவி உயர்வை கொடுத்திருந்தது …


அன்று நாங்கள் அறிவைத் தேடிய புத்தகங்கள் – அவர் கையில்

கற்பிழந்த வண்ணமாய், முகவரி இல்லாமல் …

என்னை அறிமுகப்படுத்திய போது

ஞாபக ஏணியில் இறங்கிய வண்ணமாய் நினைவுகள் …

எனது பெயரை உதடுகள் வேலை நிறுத்தம் செய்தவாறு

உச்சரித்தன …


பெருமூச்சோடு ஒரு புன்னகை செய்தேன் – கற்களை

சிற்பங்களாய் செதுக்கியவர்களாயிற்றே …

இன்னும் …

எனது காலடிச்சுவடுகள் பதித்த இடங்களையெல்லாம்

புகைப்படம் எடுக்க காற்று வாங்கி நடந்தேன் …


என் பின்னால்…

என்னைத் தொடர்ந்த நிழல் மாய்ந்து போனது

ஒழி மொளனமாகிவிட்டது – எத்தனையோ …

நண்பர்களோடு மகிழ்ச்சியில் மிகுந்த அன்றைய நான் …

தனிமையில் இன்று கண்களைக் கசக்கியவாறு …


ஒரே ஒரு நண்பன் மட்டும் எனக்காக காத்திருந்தான் …

எனது பழைய நண்பன் …

பால்ய கால முதற்கொண்டு நெருங்கிய நண்பன்

என்னைவிட்டு பிரிய மனமில்லாமல் …

தூரத்தில் —————- புன்னகைத்தவாறு  “நூலகம்” !!

நினைவலைகள் தாக்கிவிட்டால்… (பல வருடங்கள் கழித்து கல்லூரிக்குள் சென்றபோது) உரு இருந்த பொழுதும் துரு பிடித்த வண்ணமாய் சுவரோடு சுவாரஸ்யமாய் பேசிக்கொண்டிருந்த … கல்லூரிவாசல் கம்பிக்  கதவுகளை சற்று தள்ளிய வண்ணமாய் கால் பதித்தேன் … சருகுகளின் சலங்கை ஒலியில் … சல்லிக் கற்களின் மெட்டி சப்தத்தில் … கல்லூரிப் பெண் பூப்பெய்தியிருந்தாள் அங்கிருந்த அசோக மரங்கள் காற்றுக் காதலியை கைகோர்த்து வந்து சிரம் தாழ்த்தி வரவேற்றன… பூமித்தாயோ கட்டிடங்களை கருவுற்றிருந்தாள் மிதி வண்டியும்; ரிக்க்ஷா வண்டியையும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *