நிலமெல்லாம் ரத்தம் 13 & 14
by Abdul Rashid
13 நபியாக நியமிக்கப்படல்
நிலமெல்லாம் ரத்தம் – 13
முகம்மதுக்கு முன்பு இறைத் தூதர்களாக இவ்வுலகில் அறியப்பட்டவர்கள் மொத்தம் இருபத்தைந்து பேர். அவர்களுள், முதல் மனிதர் ஆதம் தொடங்கி, இயேசு வரையிலான பதினேழு பேரைப் பற்றிய விரிவான அறிமுகங்கள் இன்று நமக்குக் கிடைக்கின்றன.
இறைவனுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசியவர்கள், இறைவனாலேயே நல்வழி காட்டப்பட்டவர்கள் ஒருவகை. இறைவனிடமிருந்து மக்களுக்கு வேதத்தைப் பெற்று அளித்தவர்கள் இன்னொரு வகை.முகம்மதுக்கு முன்னர் இப்படி வேதம் அருளப்பட்ட சம்பவம் மட்டும் மூன்றுமுறை நடந்திருக்கிறது.
முதலாவது, மோஸஸுக்கு அருளப்பட்ட “தோரா” (குர்ஆன் இதனை “தவ்ராத்“ என்று அழைக்கிறது. யூதர்களின் வேதமாக இருப்பது.)
அடுத்தது, தாவீத் என்கிற டேவிடுக்கு அருளப்பட்ட சங்கீதம். (Psalm என்று ஆங்கிலத்திலும் ஸபூர் என்று குர்ஆனிலும் குறிக்கப்படுவது.
பைபிளின் பழைய ஏற்பாட்டில் இதனைப் பார்க்கமுடியும்.)
மூன்றாவதாக, இயேசுவுக்கு அருளப்பட்ட “இன்ஜீல்” எனப்படும் Gospel).
இயேசுவுக்குச் சுமார் அறுநூறு ஆண்டுகளுக்குப் பிறகு “இறைத்தூதர்” (நபி) என்று அடையாளம் காட்டப்பட்டவர்,
முகம்மது:
முகம்மதுக்கும் மற்ற இறைத்தூதர்களுக்குமான வித்தியாசங்கள் பல.
வேதம் அருளப்பட்ட விதத்தால் மட்டுமல்ல.
தாம் ஓர் இறைத்தூதர் என்பதை உணர்ந்த வகையிலேயே முகம்மது மிகவும் வித்தியாசமானவர்.
மற்ற தூதர்கள் அனைவரும் எதிர்பாராத ஒரு கணத்தில் ஆசீர்வதிக்கப்பட்டதன் பேரில் தம்மைத்தாமே இனம் கண்டு கொண்டுவிட்டார்கள்.
முகம்மது மட்டும், வருடக்கணக்கில் போராடி, உள்ளும் புறமும் ஏராளமான வேதனைகளை அனுபவித்து, ஆன்மிகச் சாதனை முயற்சிகளின் விளைவாக எத்தனையோ உடல் மற்றும் மன உபாதைகளை அனுபவித்து, போராடிப் போராடி, இறுதியில்தான் தாம் “அனுப்பப்பட்டிருப்பதன்” காரணத்தைக் கண்டறிந்தார்.
இந்த ஆன்மிகக் காரணங்கள் மட்டுமல்ல; மற்ற இறைத்தூதர்கள் அனைவரும் ஆன்மிகவாதிகளாக மட்டுமே அடையாளம் காணப்பட்ட நிலையில், முகம்மது ஒருவர்தாம் மக்கள் தலைவராகவும், மத்திய ஆசியாவின் தன்னிகரற்ற அரசியல் வடிவமைப்பாளராகவும் இருந்திருக்கிறார்.
அரேபியர்களின் வாழ்வில் சுபிட்சம் என்பது முதல்முதலாக எட்டிப்பார்க்கத் தொடங்கியதே முகம்மதுவும் அவரது தோழர்களும் வரிசையாக ஆட்சிப் பீடத்தில் அமர்ந்து (அவர்கள் கலீஃபாக்கள் எனப்படுவார்கள்.) ஆளத் தொடங்கிய பிறகுதான்.
அரேபியர்களின் சரித்திரத்தில் முகம்மது ஓர் அத்தியாயம் அல்ல. மாறாக, அவர்களது சரித்திரத்தின் மையப்புள்ளியே அவர்தான்.
முகம்மதை மையமாக வைத்துத்தான் அவருக்கு முன், பின் என்று நம்மால் அரபுகளின் சரித்திரத்தை ஆய்வு செய்ய முடியும்..
இருபத்தைந்து வயதில் முகம்மதுக்குத் திருமணமானது. அவரைக் காட்டிலும் வயதில் மிகுந்த, அவரைக் காட்டிலும் பொருளாதார அந்தஸ்தில் உயர்ந்த, கதீஜா என்கிற விதவைப் பெண்மணி அவரை விரும்பி மணந்துகொண்டார்.
முகம்மதின் நேர்மையும் கண்ணியமும் அவரைக் கவர்ந்து, அப்படியரு முடிவுக்கு வரத் தூண்டியது.திருமணத்துக்குப் பின், ஒரு கணவராகத் தம் கடமைகள் எதிலிருந்தும் விலகாமல், அதே சமயம், ஆன்மிகச் சாதனைகளில் நாட்டம் மிகுந்தவராக அடிக்கடி தனிமை நாடிப் போகக்கூடியவராகவும் இருந்திருக்கிறார் முகம்மது.
மெக்கா நகரிலிருந்து சிறிது தொலைவில் இருந்த ஹிரா என்கிற குன்றுப் பகுதிக்குத்தான் அவர் தியானத்தின் பொருட்டு அடிக்கடி செல்வது வழக்கம்.
ஒருநாள், இருநாளல்ல… வாரக்கணக்கில், மாதக்கணக்கில்கூட அவர் அங்கே தன்னிலை மறந்து தியானத்தில் இருப்பது வழக்கம்.
கிளம்பும்போது கொஞ்சம் உணவுப் பொருள்களை மட்டும் எடுத்துச் செல்வார். குடிக்கக் கொஞ்சம் தண்ணீர். அவருக்கு உடைமை என்று வேறு ஏதும் கிடையாது.
தியானத்தில் உட்கார்ந்தால், எப்போது எழுவார், எப்போது எடுத்துச் சென்ற உணவைச் சாப்பிடுவார் என்பதற்கெல்லாமும்கூட உத்தரவாதமில்லை. சில சமயம் சாப்பிடுவார். சாப்பிடாமலேயே வாரக்கணக்கில் கண்மூடிக் கிடந்ததும் உண்டு.
பல சமயங்களில் வெளியே போன கணவர் நாள் கணக்கில் திரும்பி வராததைக் கண்டு கதீஜா ஆட்களை அனுப்பித் தேடி அழைத்து வரச் சொன்னதும் உண்டு.ஆனால், முகம்மதின் ஆன்மிகச் சாதகங்களுக்கு கதீஜாவின் பூரண ஒத்துழைப்பு இருந்திருக்கிறது.
செல்வக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, வசதியான வாழ்க்கை படைத்தவராக இருந்தபோதிலும் தம் கணவரின் ஆன்மிக நாட்டத்தைப் புரிந்து கொள்ளக்கூடியவராக அவர் இருந்திருக்கிறார். அவரைத் தொந்தரவு செய்யக்கூடாது என்கிற எண்ணம் அவருக்கு இருந்திருக்கிறது.
முகம்மதின் வாழ்க்கையில் இது மிக முக்கியமானதொரு கட்டம். எப்போதும் ஹிரா மலைப்பகுதிக் குகைகளின் இருளுக்குள் கரைந்து, தியானத்தில் லயித்திருக்கும் முகம்மதுக்கு, எபப்போதாவது ஒரு பிரமாண்டமான ஆகிருதி படைத்த ஒளியுருவம் கண்ணெதிரே தோன்றும். யாரென்று அடையாளம் தெரியாது. பார்த்த கணத்தில் உடல் தூக்கிப் போட்டு, பதற்றம் மிகுந்து, பேச்சற்றுச் சமைந்துவிடுவார்.
அந்த உருவம் யார் என்று அவரால் அடையாளம் கண்டுகொள்ள முடிந்ததில்லை. அது தன்னை ஏன் நெருங்கி வருகிறது என்றும் புரிந்ததில்லை.
முதலில் கொஞ்சம் பயந்தார். இன்னார் என்று இனம் காண முடியாததால் ஏற்பட்ட பயம்.பலநாள்கள் இந்தப் போராட்டம் அவருக்குத் தொடர்ந்தது. உடலும் மனமும் மிகவும் களைப்புற்று, பதற்றம் மேலோங்கியவராக இருந்தவரை, அவரது மனைவியான கதீஜாதான் அவ்வப்போது தேற்றி, தியானத்தில் உற்சாகம் கொள்ளச் செய்து வந்திருக்கிறார்.
மிக நீண்ட போராட்டத்துக்குப் பிறகுதான், தன்னை நோக்கி வந்த அந்த ஒளியுருவத்தை முகம்மதால் இனம்கண்டுகொள்ள முடிந்திருக்கிறது.அந்த மாபெரும் உருவம், ஒரு வானவருடையது. வானவர் என்றால் தேவர் என்று கொள்ளலாம்.
இறைவனின் தலைமைத் தளபதி என்று வைத்துக்கொள்ளலாமா? தவறில்லை. அவரது பெயர் ஜிப்ரீல்.முந்தைய “இறைத் தூதர்கள்” அனைவருக்குமேகூட இந்த ஜிப்ரீலின் மூலம்தான் தன் செய்தியை இறைவன் சொல்லி அனுப்பினான் என்பது இஸ்லாமியரின் நம்பிக்கை.
தன்னை வருத்தி, தியானத்தில் தோய்ந்து, ஆன்மிகச் சாதனைகளின் உச்சத்தை முகம்மது தொட்டுவிட்டிருந்த நேரம் அது. அதுவரை தூர இருந்து அவருக்கு அச்சமூட்டிக்கொண்டிருந்த ஜிப்ரீல், அப்போது நெருங்கிவந்து ஆரத் தழுவினார்.”ஓதுவீராக!” என்று முதல்முதலாக ஓர் இறைக்கட்டளையை வெளிப்படுத்தினார்.
ஆனால் முகம்மதுக்கு என்ன பதில் சொல்லுவது என்று விளங்கவில்லை. அவர் எழுதப்படிக்கத் தெரியாதவர். பள்ளிக்கூடங்களுக்குச் சென்றவரல்லர். நல்லவர், நேர்மையாளர், ஏழைகளுக்காக மனமிரங்குபவர், ஒட்டுமொத்த மெக்கா நகரவாசிகளின் நல்லபிப்பிராயத்துக்குப் பாத்திரமானவர் என்றாலும், படித்தவரல்லர்.
அரபியில் ஓர் அட்சரம்கூட அவருக்குத் தெரியாது. சுயமாக அல்ல; எதையும் படித்துக்கூட அவரால் ஓதமுடியாது!ஆனால் ஜிப்ரீல் தொடர்ந்து வற்புறுத்தினார்.
“ஓதுவீராக.””நான் எப்படி ஓதுவேன்?” என்று திரும்பவும் கேட்டார் முகம்மது. மூன்றாவது முறையாக “ஓதுவீராக” என்று உத்தரவிட்ட ஜிப்ரீல், முகம்மதை இறுகக் கட்டிப்பிடித்து,
விடுவித்துப் பிறகு சொன்னார்:
“உம்மைப் படைத்த இறைவனின் திருநாமத்தால் ஓதுவீராக. அவனே மனிதனை ரத்தக் கட்டியிலிருந்து படைத்தான். ஓதுவீராக. இறைவன் மாபெரும் கொடையாளி. அவனே எழுதுகோலைக் கொண்டு வந்து கற்றுக்கொடுத்தான். மனிதன் அறியாதவற்றைக் கற்றுத்தருபவனும் அவனே.” “
ஜிப்ரீல் சொல்லச்சொல்ல, தன் வசமிழந்த முகம்மது இவ்வசனங்களைக் கேட்டு கூடவே சொல்லிக்கொண்டு வந்தார்.
பின்னாளில் இச்சம்பவத்தை நினைவுகூர்ந்தவர், “அந்தச் சொற்கள் உச்சரிக்கப்பட்டதாக அல்ல; என் இதயத்தின்மீது எழுதப்பட்டதாக உணர்ந்தேன்” என்று அவர் சொல்லியிருக்கிறார்.
விடைபெறும் தருணத்தில்தான் ஜிப்ரீல் தன் வருகையின் நோக்கத்தை அவருக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். “ஓ, முகம்மது! நீர் அல்லாவின் தூதராவீர். நானே ஜிப்ரீல்.”
“இப்படியரு சம்பவம் நடந்தது என்று சொன்னால் யார் நம்புவார்கள்? அதுவும் “காட்டரபிகளின்“ சமூகத்தில்!ஆனால், முகம்மதுவின் அனுபவத்தை அவரது மனைவி கதீஜா முழுமையாக நம்பினார்.
நம்பமுடியாத அளவுக்கு வியப்பூட்டும் பெண்மணியாகத் திகழ்ந்தவர் அவர். தமது கணவர் ஓர் இறைத்தூதர் என்பதை நம்புவதில் அவருக்குச் சிறு தயக்கம் கூட இருக்கவில்லை. அவரது அந்த ஆழமான நம்பிக்கை, இன்னும் ஆழமாக வேரூன்றும் விதத்தில் ஒரு சம்பவம் நடந்தது.கதீஜாவின் ஒன்றுவிட்ட சகோதரர் ஒருவர் இருந்தார். மிகவும் வயதான அவரது பெயர் வரகாஹ் (Waragah) என்பது.
ஹிரா குகையில் தியானத்தில் இருந்த தம் கணவருக்கு ஜிப்ரீல் தரிசனமாகி, அவரை ஓர் இறைத்தூதர் என்று அறிவித்துப் போனதை வரகாஹ்விடம் கதீஜா சொன்னபோது, “சந்தேகமே வேண்டாம். முகம்மது ஒரு நபிதான். அவருடன் வந்து பேசியது ஜிப்ரீல் என்கிற வானவர்தாம்” என்று கூடுதல் நம்பிக்கை அளித்தார் அவர்.
கண் தெரியாத, பல வேதங்களில் பாண்டித்தியம் பெற்ற ஒரு கிறிஸ்துவர் அவர்.
ஜிப்ரீல் என்கிற வானவரின் வழியாக முகம்மதுக்கு இறைவன் அளித்த குர்ஆன் ஒரே நாளில், ஒரே பொழுதில் மொத்தமாக அளிக்கப்பட்ட வேதமல்ல. கிட்டத்தட்ட இருபத்துமூன்று ஆண்டுகால இடைவெளியில் பகுதி பகுதியாக, வரிசைகள் அற்று முன்னும் பின்னுமாக, வேறு வேறு சூழ்நிலைகளில், அந்தந்தக் காலகட்டத்தின் தேவையை அது எல்லா காலங்களுக்கும் பொருந்துமா என்கிற பார்வையை உள்ளடக்கி அருளப்பட்டது.
வேதவரிகள் தமக்குள் இறங்குவது பற்றி முகம்மது சில நுணுக்கமான விவரங்களைத் தந்திருக்கிறார்.”மணி ஓசையின் அதிர்வைப் போல் சமயத்தில் அவை என்னுள்ளே இறங்கும்.
மிகுந்த சிரமம் தரத்தக்க அனுபவம் அது. இறங்கிய வரிகளை நான் உணர்ந்து, புரிந்து கொள்ளத்தொடங்கும்போது அதிர்வின் வீச்சு குறைய ஆரம்பிக்கும். முற்றிலும் புரிந்துவிட்டவுடன் அதிர்வு நின்றுவிடும். சில சமயங்களில் ஜிப்ரீல் நேரடியாக வந்து உரையாடுவார். அவரது சொற்கள், அப்படியே உணர்வுகளாக என் மனத்தில் இறங்கித் தங்கும்.”
“ஒற்றுமையற்று, ஒழுக்கம் குலைந்து, இறைத்தன்மை உணராமல், தறிகெட்டு வாழும் அரபுக்களின் வாழ்க்கை நிலையை மாற்றி உயர்த்த இறைவனால் நியமிக்கப்பட்ட ஓர் ஊழியராகவே அவர் தம்மை உணர்ந்தார்.
துளி அகங்காரம் கிடையாது. பெருமையோ, வானவர் வந்து “இறைத்தூதர்” என்று அறிவித்துப்போன பெருமிதமோ, கர்வமோ கிடையாது. ஊழியன். வெறும் ஊழியன். இப்படித்தான் முகம்மது தம்மை இறுதிவரை கருதினார். தமது வாழ்நாளுக்குள் ஒட்டுமொத்த அரேபிய நிலப்பரப்பையும் இஸ்லாம் என்கிற மார்க்கத்தின் பக்கம் அழைத்துவந்து, நெறிப்படுத்தி, தன்னிகரற்ற கலீஃபாவாக ஆண்டு மறைந்தவர் அவர்.
ஆனால் இறுதிவரை கிழிந்த ஆடைகளை உடுத்தி, வறண்ட ரொட்டிகளை உண்டு, இளமையில் இருந்த மாதிரியேதான் இருந்தார்.
மனைவி கதீஜா, ஒரு செல்வப் பெண்மணிதான் என்றாலும், மனைவியுடன் இணைந்து மகிழ்ச்சியாக அந்தச் செல்வங்களை அள்ளி அள்ளி ஏழைகளுக்குத் தரத் தயாராக இருந்தாரே தவிர, தமக்கென்று ஒரு திர்ஹம் (வெள்ளிக்காசு) கூட அவர் எடுத்துக்கொண்டதில்லை.
பாசாங்கற்ற இந்த எளிமைதான் முகம்மதின் மிகப்பெரிய பலமாக இருந்தது.
முகம்மது, தாமொரு நபி என்று கண்டுகொண்டதும், முதல்முதலில் அதைத் தம் மனைவியிடம் தெரிவித்தார். அடுத்தபடியாக அவர் இதுகுறித்துப் பேசியது, வரகாஹ்விடம்.இருவருமே அதை நம்புவதில் எந்தத் தயக்கமும் காட்டவில்லை.
ஆனால் வரகாஹ் மட்டும் ஒரு விஷயம் சொன்னார்:”நான் நம்புகிறேன். ஆனால் நீங்கள் இம்மக்களால் பொய்யன் என்று தூற்றப்படுவீர்கள். கஷ்டப்படுத்தப்படுவீர்கள்.
ஏன், ஊரைவிட்டே துரத்தப்படுவீர்கள். அவர்கள் உங்களுடன் போரிடவும் வருவார்கள்..””வரகாஹ் சொன்னது சத்தியவாக்கு. அட்சரம் பிசகாமல் அப்படியேதான் நடந்தது.
14 ஒட்டகத்தின் தாடை எலும்பு
நிலமெல்லாம் ரத்தம் – 14
இஸ்லாம் என்றொரு மார்க்கம் முகம்மது நபியினால் அறிமுகம் செய்யப்பட்டபோது, அதனை மனமுவந்து ஏற்றவர்களுக்கும் ஏற்க மறுத்தவர்களுக்கும் இடையில் உருவான முதல் மோதலில் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்ட பொருள், ஒட்டகத்தின் தாடை எலும்பு.
இத்தனைக்கும் பகிரங்கமாக இஸ்லாம் குறித்த பிரசாரங்கள் எதுவுமே அப்போது ஆரம்பமாகியிருக்கவில்லை. ஏராளமானவர்கள் இஸ்லாத்தில் இணைந்திருந்தார்களா என்றால் அதுவுமில்லை.
மிஞ்சிப்போனால் பத்துப் பதினைந்துபேர் இருப்பார்கள். முகம்மதின் உறவினர்களும் நண்பர்களும். அந்தச் சிறு வட்டத்தில் இரண்டு பேர்தான் பெண்கள். ஒருவர், முகம்மதின் மனைவியான கதீஜா. அவருக்குப் பிறகு இஸ்லாத்தைத் தழுவிய இரண்டாவது பெண்மணியின் பெயர் உம்முல் பத்ல். இவர் முகம்மதுக்கு சித்தி முறை.
இறைவன் ஒருவனே என்கிற தத்துவத்தை ஏற்றுக்கொண்ட இந்தச் சிறு குழுவினர் அப்போதெல்லாம் தொழுகைக்காக நகருக்கு வெளியே சென்று ஒரு பள்ளத்தாக்கில் யாருமறியாமல் கூடுவார்கள். முகம்மது நபி வாயிலாகத் தாம் கற்றுக்கொண்ட வேத வரிகளை ஓதி வணங்குவார்கள். தமது நம்பிக்கை ஒரு கேலிப்பொருளாக ஆகிவிடக்கூடாது என்பதால்தான் அப்படி யாருமறியாத இடம் தேடிப் போனார்கள்.அப்படியும் அவர்களால் நிம்மதியாகத் தொழுதுவிட்டு வர இயலவில்லை.
மெக்கா நகரின் குறைஷிகள், அவர்கள் தொழுவதற்குப் போகிற வழியில் நின்றுகொண்டு கிண்டல் செய்வார்கள். அவர்களது நம்பிக்கையான இஸ்லாத்தை, அவர்களது தொழுகை முறையை, அவர்களையேகூட கிண்டல் செய்தால் சகித்துக்கொள்ள அவர்கள் தயாராகத்தான் இருந்தார்கள்.
ஆனால் முகம்மதை, அவர் ஓர் இறைத்தூதர் என்கிற அவர்களது ஆதார நம்பிக்கையை குறைஷிகள் கிண்டல் செய்ததைத்தான் அவர்களால் சகிக்கமுடியாமல் இருந்தது. ஏனெனில் முகம்மது ஓர் இறைத்தூதர் என்பதையும், குர்ஆன் அவர் வாயிலாக அருளப்பட்டுக்கொண்டிருக்கிற வேதம் என்பதையும் அவர்கள் வாய்வார்த்தையால் அல்ல; தம் அந்தராத்மாவால் உணர்ந்திருந்தார்கள்.
இதைப் புரிந்துகொள்ளக்கூடியவர்களாக மெக்கா நகரத்துக் குறைஷிகள் இல்லையே என்பதுதான் அவர்களது வருத்தம்.தம்மை அணுகிக் கிண்டல் செய்பவர்களிடம் கூடியவரை அவர்கள் தாம் உணர்ந்ததை எடுத்துச் சொல்லக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள்.
“உங்கள் வழியில் நாங்கள் குறுக்கே வரவில்லை; எங்களை நிம்மதியாகத் தொழ அனுமதியுங்கள்” என்று வேண்டிக் கேட்டுக் கொள்ளக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள்.
ஆனால், குறைஷிகளுக்கு முஸ்லிம்களை அவமானப்படுத்துவதில் ஓர் ஆனந்தம் இருந்திருக்கிறது. எத்தனை சிறியதொரு கூட்டம்! தனியரு மதத்தை, தனியரு இறைவனை, தனியரு நம்பிக்கையை இவர்கள்தான் வளர்த்து, பரப்பப்போகிறார்களோ? என்கிற எகத்தாளம்.
அந்த எகத்தாளம்தான் நாளடைவில் மிரட்டலாகவும் தீராத தொந்தரவாகவும் ஆகிப்போனது. தொழுவதற்கு எந்தத் தனியிடத்தைத் தேடிப்போனாலும் யாராவது நான்குபேர் வம்பு செய்வதற்கென்று பின்னாலேயே வந்துவிடுவது வழக்கமானது.
ஒரு குறிப்பிட்ட தினத்தில் அத்தகைய வம்பு எல்லை மீறிப்போனது. அதுகாறும் வெறும் கிண்டலுடன் தமது பணியை வரையறுத்துக் கொண்டிருந்தவர்கள், அன்றைக்குத் தொழ வருபவர்களைத் தாக்கலாம் என்று முடிவு செய்தார்கள்.கிண்டலில்தான் ஆரம்பித்தார்கள்.
பேச்சில் சூடேறி, கைகலப்பு வரை போனது. சிறு குழுவினரான முஸ்லிம்களுக்கு, தம்மைப் பாதுகாத்துக்கொள்ளத் தற்காப்பு யுத்தம் செய்தே ஆகவேண்டும் என்கிற சூழ்நிலை ஏற்பட்டது.
குறைஷிகளின் கூட்டத்தில் சுமார் முப்பதுபேர் வரை இருந்தார்கள். முஸ்லிம்கள் அதிகபட்சம் பத்துப் பன்னிரண்டு பேர்.குறைஷிகள் அவர்களைத் தொழக்கூடாது என்று முதலில் எச்சரித்தார்கள்.
குர்ஆன் ஓதினால் விபரீதம் நடக்கும் என்று அறிவித்துவிட்டு, ஆயுதங்களைக் காட்டினார்கள். ஆனால், தொழுவதற்கு என்று புறப்பட்டு வந்த முஸ்லிம்கள், உரிய நேரத்தில் தொழுதே தீரவேண்டும் என்கிற உறுதி கொண்டவர்கள்.
ஆகவே, என்ன ஆனாலும் சரி என்று தம் வழக்கமான தொழுகையைத் தொடங்கினார்கள்.காத்திருந்த குறைஷிகள் அவர்களைத் தாக்கத் தொடங்கினார்கள். நிம்மதியாகத் தொழக்கூட முடியவில்லையே என்கிற துக்கம் கோபமாக உருக்கொண்டது, அவர்களில் ஒரே ஒருவருக்குத்தான். அவர் பெயர் ஸஅத். இயற்கையிலேயே போர்க்குணம் மிக்க ஸ§ஹ்ரா என்கிற வம்சத்தில் வந்தவர் அவர். தமது மூர்க்க சுபாவங்களை விட்டொழித்து,
முகம்மதின் வழிகாட்டுதல்களை ஏற்று அமைதியாகத் தம் கடமைகளில் ஈடுபட்டுவந்த ஸஅத், அன்றைக்குச் சகிக்கமுடியாத கோபம் மேலோங்க, ஆயுதம் ஏந்தினார்.ஒட்டகத்தின் தாடை எலும்பு.உருட்டுக் கட்டைகளுடனும் தடிகளுடனும் வந்திருந்த குறைஷிகள் ஸஅத்திடமிருந்து அப்படியோர் ஆயுதத்தை எதிர்பார்க்கவில்லை.
அவர்களால், அந்த எலும்புத் தாக்குதலைச் சமாளிக்கவும் முடியவில்லை.
இஸ்லாத்தின் சரித்திரத்தில் சிந்தப்பட்ட முதல் ரத்தம் அது. குறைஷிகளின் ரத்தம்.
ஸஅத்தின் கோபத்தின் விளைவாக உதிர்ந்த ரத்தம்.ஆனால் சம்பவத்தைக் கேள்விப்பட்ட முகம்மது, தற்காப்புக்காகக் கூட இனி யாரையும் தாக்கக்கூடாது என்று அவர்களை எச்சரித்துவிட்டார்.
தோதாக, அச்சம்பவம் நடைபெற்றதற்குச் சற்றேறக்குறைய சமமான காலத்தில் அவருக்கு அருளப்பட்ட இறை வசனங்களும் முகம்மதின் கருத்தையே பிரதிபலிப்பதாக இருந்ததைக் கவனிக்கவேண்டும்.
ஓர் உதாரணம் : “நபியே, நிச்சயமாக அவர்கள் சூழ்ச்சி செய்கிறார்கள். அவர்கள் கூறுவதையெல்லாம் சகித்துக்கொண்டு கண்ணியமான முறையில் அவர்களை விட்டு விலகி இருங்கள். இந்நிராகரிப்போருக்கு அவகாசம் அளியுங்கள். அதிகமல்ல; சொற்ப அவகாசம் போதும்.” (குர்ஆனின் இறுதி அத்தியாயங்களில் ஒன்றான அத்தாரிக் (உதய தாரகை) என்னும் பகுதியில் வருவது இது. (86:17.)
ஆனால் முகம்மதுக்கு மிகத் தொடக்க காலத்திலேயே இது அருளப்பட்டுவிட்டது.)கண்ணியமாக விலகியிருங்கள் என்கிற உத்தரவுக்கு, திரும்பத் தாக்காதீர்கள் என்று அர்த்தம்.
ஒரு சௌகரியம், இஸ்லாத்தை நம்பி ஏற்றுக்கொண்ட அந்தச் சிறு குழுவினருக்கு ஆரம்பத்திலிருந்தே முகம்மது மீதும், அவர் மூலமாக வழங்கப்படும் வேதத்தின் வரிகள் மீதும் ஒரு சந்தேகமும் ஒருக்காலும் ஏற்பட்டதில்லை.
வழங்கப்படும் ஒவ்வொரு வரியையும் அதன் முழு அர்த்தத்துடன் வாழ்க்கையில் கடைப்பிடிப்பது என்கிற முடிவில் இருந்தார்கள். ஆகையால், அடுத்தடுத்த சந்தர்ப்பங்களில் குறைஷிகளால் எத்தனை துன்பங்களுக்கு உள்ளானபோதும் கையையும் வாயையும் கட்டிக்கொண்டு சும்மாவே இருக்கப் பழகிக்கொண்டார்கள்.
என்னதான் இருக்கிறது உங்கள் இஸ்லாத்தில் என்று விரும்பிக் கேட்டவர்களிடம் மட்டுமே முகம்மது விளக்கம் அளித்தார்.
குர்ஆனிலிருந்து சில வரிகளை ஓதிக் காண்பித்தார். நாலு வார்த்தை பேசி அவமானப்படுத்தலாம் என்று வந்தவர்கள், முகம்மது ஓதிக்காண்பித்ததும் பேச்சிழந்து இஸ்லாத்தில் இணைந்துவிடுவார்கள். இது மிகையல்ல.
ஆரம்பகாலங்களில் ஏராளமான முறை இத்தகைய சம்பவங்கள் நடந்திருக்கின்றன.
முகம்மதே இப்படி இருக்கையில் அவரது தோழர்கள் (முகம்மது தொண்டர்கள் வைத்துக்கொண்டதில்லை. எல்லாருமே அவருக்குத் தோழர்கள்தாம்.) வேறு எப்படி இருப்பார்கள்?
ஆயினும் இஸ்லாம் பரவத்தொடங்கி மூன்றாண்டுகள் நிறைவடைந்தபோது, அம்மதத்தில் இருந்தோரின் மொத்த எண்ணிக்கை வெறும் நாற்பது பேர் மட்டுமே.
நான்காவது ஆண்டின் தொடக்கத்தில்தான் பகிரங்கமாகப் பிரசாரம் செய்யலாம் என்கிற இறை உத்தரவு முகம்மதுக்கு வந்தது. அதுவுமே கூட “உங்கள் உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்து அழைப்பு விடுங்கள்“ என்கிற உத்தரவுதான்.
முதல்முதலாக இஸ்லாம் என்றொரு மார்க்கம் குறித்த வெளிப்படையான அறிவிப்பும் அதில் இணைய வரும்படியான அழைப்பும் அந்த நான்காவது ஆண்டில்தான் முகம்மது நபியால் செய்யப்பட்டது.
இஸ்லாம் என்கிற பதம் முதல் முதலில் பாலஸ்தீனைச் சென்றடைந்ததும் அப்போதுதான்.
13 நபியாக நியமிக்கப்படல் நிலமெல்லாம் ரத்தம் – 13 முகம்மதுக்கு முன்பு இறைத் தூதர்களாக இவ்வுலகில் அறியப்பட்டவர்கள் மொத்தம் இருபத்தைந்து பேர். அவர்களுள், முதல் மனிதர் ஆதம் தொடங்கி, இயேசு வரையிலான பதினேழு பேரைப் பற்றிய விரிவான அறிமுகங்கள் இன்று நமக்குக் கிடைக்கின்றன. இறைவனுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசியவர்கள், இறைவனாலேயே நல்வழி காட்டப்பட்டவர்கள் ஒருவகை. இறைவனிடமிருந்து மக்களுக்கு வேதத்தைப் பெற்று அளித்தவர்கள் இன்னொரு வகை.முகம்மதுக்கு முன்னர் இப்படி வேதம் அருளப்பட்ட சம்பவம் மட்டும் மூன்றுமுறை நடந்திருக்கிறது.…
Recent Comments
Archives
- April 2023
- May 2022
- April 2022
- January 2022
- August 2019
- June 2019
- January 2019
- June 2018
- February 2018
- December 2017
- November 2017
- June 2017
- February 2017
- December 2016
- June 2016
- January 2016
- December 2015
- November 2015
- October 2015
- August 2015
- July 2015
- June 2015
- May 2015
- April 2015
- March 2015
- February 2015
- January 2015
- December 2014
- November 2014
- October 2014
- September 2014
- August 2014
- July 2014
- June 2014
- May 2014
- April 2014
- March 2014
- February 2014
- January 2014
- December 2013
- November 2013
- October 2013
- September 2013
- August 2013
- July 2013
- June 2013
- May 2013
- April 2013
- March 2013
- February 2013
- December 2012
- November 2012
- October 2012
- September 2012
- August 2012
- July 2012
- June 2012
- May 2012
- April 2012
- March 2012
- February 2012
- January 2012
- December 2011
- November 2011
- October 2011
- September 2011
- August 2011
- July 2011
- June 2011
- May 2011
- April 2011
- March 2011
- February 2011
- January 2011
- December 2010
- November 2010
- October 2010
- September 2010
- August 2010
- July 2010
- September 2009
- August 2009
- June 2009
- May 2009
- April 2009
- March 2009
- February 2009
- January 2009
- December 2008
- November 2008
- October 2008
- September 2008
- August 2008
- June 2008
- March 2008
- January 2008
- December 2007
- June 2007
- May 2007
- April 2007
- March 2007
- February 2007
- January 2007
- December 2006
- October 2006
- September 2006
- August 2006
- July 2006
- June 2006