நிலமெல்லாம் ரத்தம் 11 & 12
by Abdul Rashid
11] கிருஸ்துவத்தின் வளர்ச்சி.
நிலமெல்லாம் ரத்தம் – 11
11 கி.பி. நான்காம் நூற்றாண்டைப் பிரதிநிதித்துவப் படுத்தும் விதமாக ஒரே ஒரு விஷயத்தைக் குறிப்பிடவேண்டும் என்றால், ஒட்டு மொத்த சரித்திர ஆசிரியர்களும் சுட்டிக்காட்டுவது, கிறிஸ்துவத்தின் பரவலைத்தான்.
இயேசுவின் மரணத்தை அடுத்து ஆரம்பமான இயக்கம் அது. இன்றுவரையிலும் தொடர்ந்துகொண்டிருக்கும் ஒரு நடவடிக்கையே என்றபோதும், நான்காம் நூற்றாண்டில் அதன் வீச்சு, கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது.
மத்தியக் கிழக்கிலும் ஐரோப்பாவிலும் நன்கு பரவி, வேரூன்ற ஆரம்பித்துவிட்டிருந்தது அது. கான்ஸ்டன்டைனை அடுத்து வந்த ரோமானிய ஆட்சியாளர்களும் கிறிஸ்துவத்தின் வளர்ச்சிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருந்ததால், கிறிஸ்துவர்கள் ஒரு பொற்காலத்துக்குள் நுழைகிற உணர்வில் திளைத்திருந்தார்கள்.
இந்நிலையில் பாலஸ்தீன நிலப்பரப்பில் வாழ்ந்துகொண்டிருந்த கிறிஸ்துவர்கள், ஜெருசலேமையும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளையும் முழுவதுமாக கிறிஸ்துவ பூமியாகக் காட்டும் முடிவில், கண்ணில் பட்ட இடங்களிலெல்லாம் தங்கள் தேவாலயங்களை எழுப்ப ஆரம்பித்தார்கள்.
இதனால், ஒருபக்கம் ரோமானியச் சக்கரவர்த்தியையும் சந்தோஷப்படுத்திய மாதிரி ஆகும்; இன்னொரு பக்கம், புனித பூமியான ஜெருசலேமும் கிறிஸ்துவர்களின் நகரமாகவே காலப்போக்கில் அங்கீகரிக்கப்பட்டுவிடும்.
பெரும்பாலான யூதர்கள் ஜெருசலேமின் சுற்றுப்புறங்களிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில் இதற்குப் பெரிய தடைகளும் வராது என்று அவர்கள் கருதினார்கள்.இப்படி ஜெருசலேமிலும் சுற்றுப்புற நகரங்களிலும் பெரிய பெரிய தேவாலயங்களை எழுப்பிய கிறிஸ்துவர்கள், அப்போது கிறிஸ்துவம் நன்கு பரவியிருந்த ஐரோப்பிய நாடுகளிலிருந்து குறிப்பாக கிரீஸ், இத்தாலி, பால்கன் தீபகற்பம் யாத்ரீகர்கள் பலரை ஜெருசலேமுக்கு வரவழைக்கவும் ஏற்பாடுகள் செய்தார்கள்.
மேலை நாட்டு யாத்ரீகர்கள், இயேசுவின் பூமிக்கு வந்து தரிசித்துவிட்டு, திரும்பிச்சென்று தங்கள் நாட்டில் கிறிஸ்துவத்தை மேலும் பரப்ப வேண்டுமென்பதே அவர்களின் விருப்பமாக இருந்தது. அப்படி வருகிற மேலை யாத்ரீகர்களுள் சிலரை நிரந்தரமாகவே ஜெருசலேமில் தங்கவைத்து, அவர்களைக் கொண்டும் உள்ளூரில் கிறிஸ்துவத்தைப் பரப்ப முடிவு செய்தார்கள்.
அதாவது, “நமது மண்ணின் பெருமையை, அயல்நாட்டுக்காரர்களே உணர்ந்திருக்கிறார்கள் பார், நீ இன்னும் உணரவில்லையா?” என்று பாலஸ்தீனத்து யூதர்களையும் அரேபியர்களையும் பார்த்து மறைமுகமாகக் கேட்பது.இந்த முயற்சியில், பாலஸ்தீனக் கிறிஸ்துவர்களுக்குக் கணிசமான வெற்றி கிடைத்தது என்றே சொல்லவேண்டும்.
ஏராளமான அரேபியர்களையும் அதிகபட்சம் சுமார் ஆயிரம் யூதர்களையும் அவர்கள் அப்போது கிறிஸ்துவர்களாக மாற்றிக்காட்டினார்கள்.
நான்காம் நூற்றாண்டின் இறுதியில் (கி.பி. 375-395) ரோமை ஆண்ட மன்னன் தியோடோசியஸ் (Theodosius 1) ஒரு சட்டமே பிறப்பித்தான். ரோமானிய சாம்ராஜ்ஜியத்தில் கிறிஸ்துவத்தைத் தவிர, வேறு எந்த மதத்துக்கும் அனுமதியே கிடையாது!
இதன் தொடர்ச்சியாக, அடுத்து வந்த புதிய நூற்றாண்டின் தொடக்கத்தில் சில கிறிஸ்துவத் துறவிகள் பாலஸ்தீனில் இருந்த யூத தேவாலயங்களை (யூதக் கோயில்களுக்கு Synagogues என்று பெயர்.) இடிக்க ஆரம்பித்தார்கள்.
சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வந்த பார் ஸெளமா (Bar Sauma)
என்கிற ஒரு கிறிஸ்துவப் பாதிரியார் ஜெருசலேமின் சுற்றுப்புறங்களிலிருந்த ஏராளமான யூத தேவாலயங்களை இடித்ததாக யூத சரித்திர ஆசிரியர்கள் பலர் குறிப்பிடுகிறார்கள்.இடிக்கப்பட்ட தேவாலயங்களை மீண்டும் கட்டுவது, மீண்டும் அவை இடிக்கப்படுவது என்று இது ஒரு தொடர் நடவடிக்கையாக இருந்து வந்திருக்கிறது.
கி.பி. 614-ல் யூதர்கள் சற்று நிம்மதிப் பெருமூச்சு விடும் விதமாக ஒரு சம்பவம் நடந்தது.அப்போது ரோமானியர்களுக்கு எதிராக யுத்தம் செய்ய பெர்சிய ராணுவமொன்று கிளம்பி, ஜெருசலேமை நோக்கி வந்துகொண்டிருந்தது. பாலஸ்தீன யூதர்கள், இதனை ஒரு வாய்ப்பாகக் கருதி அவர்களுடன் பேசினார்கள். ஒப்பந்தம் என்னவென்றால், ஜெருசலேமை பெர்சிய ராணுவம் வெற்றி கொள்ள, பாலஸ்தீன யூதர்கள் உதவுவார்கள்.
பதிலாக, ஜெருசலேமில் பெர்சியாவுக்குக் கட்டுப்பட்டதொரு யூத அரசு அமைய அவர்கள் உதவவேண்டும்.இந்தத் திட்டம் வெற்றிகரமாக நடந்தேறியது. கி.பி. 614-ல் நடந்த யுத்தத்தில் பெர்சிய ராணுவத்துடன் பாலஸ்தீன யூதர்களும் இணைந்து, ரோமானிய ஆட்சியாளரை எதிர்த்துப் போரிட்டார்கள். இறுதி வெற்றியும் யூதர்களுக்கே கிடைத்தது. பெர்சியத் தளபதி கொடுத்த வாக்குப்படி நெஹேமியா பென் ஹுஸெய்ல் (Nehemiah ben Husheil) என்கிற யூத இனத் தலைவர் ஒருவரை ஜெருசலேமின் மன்னனாக அமர்த்திவிட்டு ஊர் போய்ச் சேர்ந்தார்.
நீண்ட நெடுநாட்களுக்குப் பிறகு சுதந்திர யூத அரசு!
யூதர்களால் முதலில் நம்பவே முடியவில்லை. சந்தோஷத்தில் என்ன செய்வதென்றே புரியாமல், நாட்டில் இருந்த அத்தனை கிறிஸ்துவர்களையும் அவர்கள் துரத்தித் துரத்தி விரட்ட ஆரம்பித்தார்கள். பாலஸ்தீனின் எல்லை வரை ஓடஓட விரட்டிவிட்டே திரும்பி வந்தார்கள். அங்கிருந்த அத்தனை கிறிஸ்துவ தேவாலயங்களும் உடனடியாக இழுத்துப் பூட்டப்பட்டன. இஸ்ரேலில் ஒரு கிறிஸ்துவரும் இருக்கக்கூடாது என்று கோஷம் செய்தார்கள். கொண்டாடினார்கள். குதித்துக் கும்மாளமிட்டார்கள்.இதெல்லாம் மூன்றாண்டுகள் வரைதான்.
யூதர்களுக்காக கிறிஸ்துவர்களைப் பகைத்துக்கொள்வது எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்று பெர்சிய மன்னர் முடிவு செய்துவிட்டார். மேலும், இஸ்ரேல் விஷயத்தில் மட்டும் தலையிடாமல் இருந்தால் ரோமானியப் பேரரசால் எந்தப் பெரிய தொல்லையும் எக்காலத்திலும் வராது என்றும் அவர்களுக்குத் தோன்றியது. ஆகவே, அரசியல் ராஜதந்திரம் என்கிற ரீதியில், பாலஸ்தீன யூதர்களுக்குத் தாங்கள் அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொண்டுவிடுவது என்று முடிவு செய்துவிட்டார்கள்.
இதெல்லாம் ஒரு பெரிய காரியமா? மீண்டும் ஒரு படையெடுப்பு. ஒரு யுத்தம். தாங்கள் பதவியில் அமர்த்திவிட்டு வந்த அதே யூத மன்னன் நெஹேமியா பென் ஹுஸெய்லைக் கொன்றுவிட்டு, கிறிஸ்துவர்களுக்கே தங்கள் ஆதரவு என்று சொல்லிவிட்டு வந்துவிட்டது பெர்சிய ராணுவம்.
அடுத்த ஐந்தாண்டு காலத்துக்கு பாலஸ்தீன மண், பெர்சியர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. யூதர்கள் மீண்டும் தங்கள் பழைய கஷ்டங்களை அனுபவிக்கப் பணிக்கப்பட்டார்கள்.
வழிபடக்கூடாது; மதப்பள்ளிக்கூடங்களை நடத்தக்கூடாது; மத போதனைகள் கூடாது; கிறிஸ்துவத்துக்கு எதிரான நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளக்கூடாது. இஷ்டமிருந்தால் பாலஸ்தீனில் வாழலாம்; இல்லாவிட்டால் வேறெங்காவது கிளம்பிப் போக எந்த ஆட்சேபணையும் இல்லை.
இந்தச் சமயத்திலும் பல யூதர்கள் தேசத்தை விட்டு வெளியேறினார்கள்.
ஒழுங்காக ரோமானியச் சக்ரவர்த்தியிடமே கோரிக்கை வைத்து, தமது மதக்கடமைகளை நிறைவேற்றிக்கொள்ள அனுமதி கோரியிருக்கலாம். தாமதமானாலும் நிச்சயம் கிடைத்திருக்கும். இப்படி அவர்களையும் பகைத்துக் கொண்டுவிட்டோமே என்று வருந்தினார்கள்.
கிறிஸ்துவர்களுடனேயே கூட சமரசமாக நடந்துகொண்டிருக்க முடியும். சம்பந்தமில்லாமல் ஒரு மூன்றாம் தரப்பினரை நம்பி மோசம் போய்விட்ட வருத்தம் அவர்களுக்குப் பல்லாண்டு காலம் தொடர்ந்து இருந்து வந்தது.ஆனால், வருந்திப் பயனில்லை. ஹெராக்ளிடஸ் (Heraclitus) என்கிற ரோமானிய மன்னன் பாலஸ்தீன் மீது மீண்டும் படையெடுத்து வந்தான். மிகக் கடுமையான யுத்தம். இறுதியில் மீண்டும் பாலஸ்தீன் ரோமானிய ஆட்சிக்குள் வந்தது.
அங்கு மிச்சமிருந்த கொஞ்ச நஞ்ச யூதர்களையும் துடைத்து நாடு கடத்தினார்கள். மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, கிறிஸ்துவத்தை ஏற்கச் சம்மதித்த சில யூதர்கள் மட்டுமே இஸ்ரேலில் வாழ அனுமதிக்கப்பட்டார்கள்.
அப்படி அனுமதி பெற்று, பிறகு முரண்டு பிடித்தவர்களையெல்லாம் கணக்கு வழக்கில்லாமல் கழுவில் ஏற்றினார்கள். (நூற்றுக்கணக்கானோரை வலுக்கட்டாயமாக கிறிஸ்துவத்துக்கு மாற்றியதாகவும் சில குறிப்புகள் இருக்கின்றன.)
தொடர்ந்து அவல வாழ்வைத்தான் வாழவேண்டும் என்று இருந்த தம் விதியை நினைத்து யூதர்கள் வருந்தினார்கள். அதுவும் இம்முறை ரோமானியப் படையெடுப்புக்குப் பிறகு சிவில் அரசல்ல; ஒரு ராணுவ அரசாகவே அங்கே ஆட்சி அமைக்கப்பட்டது. கிறிஸ்துவ ராணுவம். ரோமானியச் சக்ரவர்த்தியின் பிரதிநிதியாக பாலஸ்தீனை ஆள நியமிக்கப்பட்டவர்,
சக்ரவர்த்தியின் மந்திரிப் பிரதானிகளுள் ஒருவரல்லர். ராணுவத் தளபதிகளுள் ஒருவர். இன்னும் எத்தனை காலம் இந்தப் போராட்டமோ என்று ஒவ்வொரு இஸ்ரேலிய யூதரும் மனத்துக்குள் அழுதார்கள்.
உண்மையில், யூதர்கள் அப்போது ரோமானிய ஆட்சியை நினைத்துக் கலங்கியிருக்கவே வேண்டாம். கிறிஸ்துவர்களுடனான அவர்களது உரசல்கள் எல்லாமும் கூட அர்த்தமே இல்லாதவையாக ஆகிப்போகும் காலம் வெகு சீக்கிரம் வரவிருப்பதை அப்போது அவர்கள் உணரவில்லை.
யூதர்களாகவும் இல்லாமல், கிறிஸ்துவர்களாகவும் இல்லாமல் பாலஸ்தீனமண்ணின் பழங்குடி இனத்தவர்கள் என்கிற ஒரே அடையாளமுடன் எவ்வித கலாசார வளர்ச்சியும் அற்று, வெறும் மனிதர்களாக வாழ்ந்துகொண்டிருந்த அரேபியர்களின் வாழ்க்கையில் அப்போதுதான் முதல்முறையாக ஒரு மலர்ச்சி ஏற்பட்டது.
ரோமானியர்கள் ஆண்டாலும், கிரேக்கர்கள் ஆண்டாலும், வேறு யார் ஆண்டாலும் அதுவரை அவர்கள் வெறும் சுண்டைக்காயாகவே இருந்தார்கள்.
ஆள்பவர்கள் அவர்களைப் பொருட்படுத்தமாட்டார்கள். யூதர்கள் அவர்களைக் கண்டுகொள்ளமாட்டார்கள்.
கிறிஸ்துவர்களோ, மதம் மாற்றமுடியுமா என்கிற நோக்கில் மட்டுமே அவர்களைப் பார்ப்பார்கள்.
இத்தனைக்கும் அவர்கள்தாம் அங்கே பெரும்பான்மை மக்கள்!யூதமதமும் கிறிஸ்துவ மதமும் பண்பட்ட மதங்கள் என்றும், சிறு தெய்வ வழிபாடுகளில் மூழ்கியிருந்த அரேபியர்களின் நம்பிக்கைகள் எதுவுமே பொருட்படுத்தத்தக்கவையல்ல என்றும் ஒரு கருத்து அங்கே ஆழமாக வேரூன்றியிருந்தது.
அரேபிய மண்ணின் ஆதிவாசிகளான அவர்களுக்குக் கல்வி கூடக் கிடையாது. உழைப்பது, சாப்பிடுவது, சந்ததி பெருக்குவது என்கிற மூன்று காரியங்கள் தவிர, வேறு எதற்குமே லாயக்கற்றவர்கள் என்று கருதப்பட்டார்கள்.
அப்படிப்பட்ட இனத்தில் முதல் முதலாக ஓர் எழுச்சி கி.பி. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்டது.எழுச்சி என்றால், வெறும் சொல்லில் அடங்கிவிடக்கூடிய எழுச்சியல்ல
அது. உலக சரித்திரத்தில் வேறு எங்கும், எப்போதும், எந்தக் காலத்திலும் இன்றுவரையிலும் கூட அதற்கு நிகரான எழுச்சி நடந்ததில்லை.
ஒட்டுமொத்த அரேபியர்களின் வாழ்க்கையையும் புரட்டிப்போட்ட எழுச்சி அது.
அது கி.பி. 622-ம் வருடம், செப்டம்பர் மாதம் 27-ம் தேதி, திங்கட்கிழமை. ஒரு மனிதர், ஓர் ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு இடம் பெயர்ந்தார்.
அவ்வளவுதான். ஒட்டுமொத்த அரேபியர்களும் மதம் பெயர்வதற்குத் தயாராகிவிட்டார்கள்.அவர் பெயர் முகம்மது.
இயேசுவுக்குப் பிறகு இறைவன் அனுப்பியதாக நம்பப்படும் இறைத்தூதர் (நபி) இறுதித் தூதரும் அவரேதான்.
12] இறைதூதர் முகம்மது.
நிலமெல்லாம் ரத்தம் – 12
முகம்மது என்கிற மனிதரின் பிறப்பு, அவர் ஓர் இறைத்தூதர் என்று அறியப்பட்ட தருணம் – இந்த இரண்டுமே அரேபியர்களின் சரித்திரத்தில் மிக முக்கியமான அம்சங்கள்.
ஒரு மனிதரின் பிறப்பே எப்படி முக்கியத் தருணமாகும்? என்கிற கேள்வி எழலாம்.
மற்ற இறைத்தூதர்களைப் பற்றிய தகவல்களுக்கு நாம் புராணக் கதைகளையே ஆதாரங்களாகக் கொள்ள வேண்டியிருக்கிற நிலையில், இவர் ஒருவரைக் குறித்த விவரங்களை மட்டும்தான் கதைகளிலிருந்து அல்லாமல், சரித்திரத்தின் பக்கங்களிலிருந்தே நாம் பெற முடிகிறது.
காலத்தால் நமக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது மட்டுமே இதற்குக் காரணமல்ல. அவரது காலத்தில் வாழ்ந்தவர்கள், அவருடன் நேரில் பழகியவர்கள், அவரது பிரசங்கங்களை, போதனைகளைக் கேட்டவர்கள் எழுதிவைத்த குறிப்புகள் ஏராளமாக இருக்கின்னறன.
முகம்மது குறித்த ஒவ்வொரு தகவலும் பல்வேறு நிலைகளில் சரிபார்க்கப்பட்டு, ஒப்புநோக்கப்பட்டு, அவருடன் நேரடியாகப் பழகியவர்கள் விவரித்துள்ளவற்றுடன் பொருந்தினால் மட்டுமே அச்சேறின.
இதனால், முகம்மது குறித்த விவரங்களின் நம்பகத்தன்மை பற்றிய அத்தனை கேள்விகளும் அடிபட்டுப் போய்விடுகின்றன.
ஆதாரம் இல்லாத ஒரு குட்டிக்கதை, கதையின் ஒருவரி… ஒரு சொல் கூடக் கிடையாது.
இதன் அடிப்படையில்தான் இப்படியொரு முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது.
முகம்மது பிறக்கும் முன்னரே அவரது தந்தை இறந்துவிட்டார். பிறந்த சிலகாலத்துக்குள்ளாகவே தாயையும் இழந்தவர் அவர். ஏழை வியாபாரியான அபூதாலிப் என்கிற தமது பெரியப்பாவின் அரவணைப்பில்தான் அவர் வளர்ந்தார்.இந்தப் பின்னணியை ஒரு காரணமாகக் கருதிவிட முடியாது என்றாலும், மிக இளம் வயதிலேயே கேளிக்கைகளையும் விளையாட்டுப் பேச்சுகளையும் அறவே தவிர்க்கக் கூடியவராக இருந்திருக்கிறார்.
இளம் வயதென்றால் பத்துப் பன்னிரண்டு வயதுகளிலேயே. அபூதாலிப்பால் முகம்மதுவுக்குச் சரியான பள்ளிப்படிப்பைத் தர இயலவில்லை. அவரது ஏழைமை அதற்குப் பெரும் தடையாக இருந்தது. அன்றைய தினம் அரேபியாவின் பெரும்பான்மை மக்களின் நிலைமை இதுதான்.
வளமை என்பது மிகச்சிலருகக்கே உரிய விஷயமாக இருந்திருக்கிறது. கல்வியும் அத்தகையவர்களுக்கே உரித்தானதாக இருந்திருக்கிறது. படிப்பில் ஈடுபடாத அரபுக் குழந்தைகள், இளம் வயதிலேயே முரட்டு விளையாட்டுகளில் ஈடுபடுவதும், வாலிப வயதில் வாளேந்துவதும் சர்வ சாதாரணமாக இருந்திருக்கிறது.
முகம்மதுவின் வயதில் இருந்த அத்தனை பிள்ளைகளும் வீதியில் ஆடிப்பாடி, அடித்துப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்த காலத்தில், முகம்மது மட்டும் தனியே எதையோ சிந்தித்தபடி அமர்ந்திருப்பவராக இருந்திருக்கிறார்.
அதைப் பார்த்து கேலி செய்யும் பிள்ளைகளிடம் “பிறவி எடுத்ததன் நோக்கம் இந்தக் கேளிக்கைகளில் இருப்பதாக நான் கருதவில்லை” என்று சொல்லக்கூடியவராக இருந்திருக்கிறார்.
அவரது தனிமை விரும்பும் சுபாவத்தையும், எப்போதும் சிந்தித்தபடி இருக்கும் இயல்பையும் மிகச்சிறிய வயதிலிருந்தே மற்றவர்கள் கவனித்து வந்திருந்தாலும், அதை ஆன்மிகத்துடன் தொடர்புபடுத்தி அப்போதே யாரும் யோசித்ததில்லை.
அன்றைய அரேபியர்களின் இயல்புக்குச் சற்றும் நெருக்கமில்லாதது அது. அவர்கள் பக்திமான்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். இப்ராஹிம் (ஆபிரஹாம்) நபி கட்டுவித்த “கஃபா” என்கிற பல நூற்றாண்டுகள் புராதனமான வணக்கஸ்தலத்தை பயபக்தியுடன் வலம் வந்து வணங்குபவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்.
எங்கெங்கிருந்தோ முந்நூற்று அறுபது இறை உருவங்களை எடுத்துவந்து அங்கே பிரதிஷ்டை செய்து தினமொரு கடவுளை பிரார்த்திப்பவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.
ஆனால், இந்த பக்திப்பாதை, முகம்மதுவின் ஆன்மிகப் பாதைக்குச் சற்றும் சம்பந்தமில்லாததாக இருந்தது. துளியும் படிப்பறிவில்லாதவராக இருந்த முகம்மது, தமக்குள் ஒடுங்கி, அதன்மூலம் பெற்றிருந்த ஆன்மிகத் தேர்ச்சியை அநேகமாக யாராலுமே உணர இயலவில்லை.
ஆனால், அவர் மீது அனைவருக்குமே ஒரு மரியாதை இருந்தது. பண்பான இளைஞர், பக்தி மிக்க இளைஞர் என்கிற அளவில் ஏற்பட்டிருந்த மரியாதை. ஏழைகளுக்கு வலிந்து போய் உதவக்கூடியவராக இருக்கும் இளைஞர் என்பதால் உண்டாகியிருந்த மரியாதை.
தாம் ஓர் இறைத்தூதர் என்பதை அவர் அறிவதற்கெல்லாம் பல்லாண்டுகளுக்கு முன்பே உருவாகியிருந்த மரியாதை அது.
என்ன வித்தியாசம் என்றால், அரேபியர்களிடம் அன்று பக்தி உண்டே தவிர, “ஆன்மிகம்” என்பது அவர்களுக்கு அந்நியமானதொன்று.
தமது குழுச் சண்டைகளுக்கும் இனப்போர்களுக்கும் கடவுளர்களைத் துணை நிற்கச் சொல்லி வேண்டுவார்களே தவிர, உள்ளார்ந்த அன்பை விதைத்து, சகோதரத்துவம் பயிரிடும் உத்தேசம் யாருக்கும் கிடையாது.
இந்தக் காரணத்தினால்தான் அரேபியர்களிடையே சுலபமாக கிறிஸ்தவம் ஊடுருவ முடிந்தது. இதே காரணத்தினால்தான் யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் அடுத்தபடியாகவே அவர்கள் பொருட்படுத்தப்பட்டார்கள். இதனாலேயேதான் “காட்டரபிகள்” என்றும் அவர்கள் அன்று வருணிக்கப்பட்டார்கள்.
இப்படிப்பட்டதொரு இனத்தில்தான் முகம்மது பிறக்கிறார். ஒன்றல்ல; இரண்டல்ல; முந்நூற்று அறுபது கடவுள்களை சிலைகளாகச் செய்துவைத்து வணங்கும் இனம். உழைத்துச் சாப்பிட்டு, சந்ததி பெருக்கி, மாண்டுபோய்க்கொண்டிருந்த இனம். பெண்கள் படைக்கப்பட்டதே, சந்ததி பெருக்குவதற்குத்தான் என்று உறுதிபட நம்பியதோர் இனம்.
ஏராளமான மூட நம்பிக்கைகளுடன் முட்டிமோதிக்கொண்டிருந்த இனம். படிப்பறிவில்லாத இனம். முரட்டு இனம். யுத்தவெறி பிடித்த இனம். தமது பெருமை என்னவென்றே உணராமல் காலம் காலமாக வீணடித்துவிட்ட இனம்.
ஒரு சம்பவம் நடந்தது. கடும் மழை. பெரிய வெள்ளம். மெக்கா நகரின் மத்தியில் இருந்த “கஃபா” ஆலயத்தின் புராதனமான சுவர்கள் வெள்ளத்தில் இடிந்து விழுந்துவிட்டன. ஏற்கெனவே மிகவும் பழுதாகியிருந்த ஆலயம் அது. இடித்துவிட்டுப் புதுப்பிக்கலாம் என்று நினைத்த அரேபியர்களுக்குக் கொஞ்சம் பயம் இருந்தது. இறைவனின் ஆலயத்தை இடிப்பதன்மூலம் ஏதாவது அபவாதம் நேருமோ என்கிற பயம்.
ஆனால், அந்த வெள்ளத்தில், ஆலயத்தின் சுவர்கள் தாமாகவே இடிந்ததில் மிகவும் நிம்மதியடைந்தார்கள்.இனி பிரச்னையில்லை. இறைவனே உத்தரவு கொடுத்துவிட்டான்; ஆலயத்தை மீண்டும் திருத்தமாக எழுப்பிவிடலாம் என்று முடிவு செய்தார்களள்.
பல்வேறு இனக்குழுவினராகப் பிரிந்து இருந்த அரேபியர்கள் இந்த ஒரு விஷயத்தில் ஒன்றுசேர்ந்து, நிதி சேர்த்து, ஆலயப் புனரமைப்புப் பணியில் ஈடுபடத் தொடங்கினார்கள்.ஆரம்பத்தில் எல்லாமே சிறப்பாகத்தான் இருந்தது. கட்டுமானப்பணி வேகமாகத்தான் நடைபெற்று வந்தது. ஆனால், ஒரு குறிப்பிட்ட கட்டம் வந்தபோது, அவர்களின் இயல்பான முரட்டு சுபாவம் மேலோங்கி, அடித்துக்கொள்ளத் தயாராகிவிட்டார்கள்.
விஷயம் இதுதான். “கஃபா”வின் இடிக்கப்பட்டதொரு சுவரிலிருந்து, “ஹஜ்ருல் அஸ்வத்” என்ற கல் ஒன்றை எடுத்து பத்திரப்படுத்தி வைத்திருந்தார்கள். கொஞ்சம் விசேஷமான கல் போலிருக்கிறது. அதைத் திரும்பப் பதித்தாகவேண்டும். ஆனால் யார் பதிப்பது?
எத்தனையோ இனக்குழுவினர் (கோத்திரத்தார் என்று அவர்களைக் குறிப்பிடுவது இஸ்லாமியர் வழக்கம்.) சேர்ந்துதான் கோயிலைக் கட்டிக்கொண்டிருந்தார்கள். கோயிலைச் சேர்ந்து கட்டுவதும் ஹஜ்ருல் அஸ்வத்தைத் திரும்பப் பதிக்கும் பணியை மேற்கொள்வதும் ஒன்றல்ல.
இது பெருமை சம்பந்தப்பட்டது. கௌரவம் தொடர்பானது.ஆகவே, நீயா நானா போட்டி எழுந்துவிட்டது.
எந்தக் கணமும் மோதல் யுத்தமாகி, ரத்தம் பெருகலாம் என்கிற நிலைமை. முன்னதாக, இதேபோல் எத்தனையோ பல உப்புப் பெறாத காரணங்களுக்காக வாளேந்தித் தலைசீவியவர்களே அவர்கள். சமாதானமல்ல; சண்டையே அவர்களின் அடையாளமாக இருந்தது. ஒரு சிறு வாய்ப்புக்கிடைத்தாலும் அடித்துக்கொண்டு மடிவதற்கு அத்தனை பேருமே தயாராக இருந்தார்கள்.
இவர்களின் இத்தகைய இயல்பையும், “கஃபா” மறுகட்டுமானம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்னையையும் நன்கறிந்த மெக்கா நகரப் பெரியவர்களுக்கு மிகவும் அச்சம் ஏற்பட்டது. எப்படியாவது ரத்த நதி பெருகுவதைத் தடுத்தாகவேண்டும் என்று நினைத்தார்கள். எத்தனையோ விதமாகக் குரைஷிகளிடம் (மெக்காவில் வசித்துவந்த அரேபியர்கள் இவர்கள்தாம்.) பேசிப்பார்த்தார்கள்.ஆனால் எதற்கும் பலனில்லை. யாரும் உரிமையை விட்டுத்தரத் தயாராக இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.
யுத்தம் செய்வோம். வெற்றி பெறுபவர்கள் அந்தப் புனிதக் கல்லைத் திரும்பப் பதிக்கும் பரிசினைப் பெறுவார்கள் என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்கள்.
கட்டக்கடைசி முயற்சியாக ஒரு முதியவர், தன் பங்குக்கு ஒரு யோசனையை முன்வைத்தார். யுத்தத்தை ஒருநாள் ஒத்திப்போடலாம். யாராவது ஒருவர் சொல்லும் யோசனைக்காவது கொஞ்சம் செவிசாய்க்கலாம்.
ஆனால், யார் அந்த ஒருவர்?அன்றைய பொழுது மறைந்து, மறுநாள் காலை விடியும்போது யார் முதலில் “கஃபா”வுக்குள் வணங்குவதற்காகச் செல்கிறாரோ, அவர்தான். யாராயிருந்தாலும் சரி. அந்த முதல் வணக்கம் செலுத்தப் போகிறவரிடம் பிரச்னையைக் கொண்டுசெல்வது. அவர் சொல்லும் யோசனை எதுவானாலும் கேட்டு, அதன்படி செயல்படுவது.அதுசரி. அவர் என்ன யோசனை சொல்லவேண்டும்? சண்டைக்குத் தயாராக இருக்கும் இனக்குழுவினரிடையே, யார் அந்தக் கல்லைப் பதிக்கலாம் என்று மட்டுமே அவர் சொல்லலாம். அவர் குறிப்பிடும் குழுவினர் கல்லைப் பதிப்பார்கள். மற்றவர்கள் ஒத்துழைக்கவேண்டும்.ஆர்வமுடனும் எதிர்பார்ப்புடனும் இரு தரப்பினருமே அன்றைய இரவு முழுவதும் “கஃபா”வின் வெளியே காத்திருந்தார்கள்.
மறுநாள் பொழுது இன்னும் விடியக்கூட இல்லை. இருள் பிரியாத அந்நேரத்தில் ஓர் உருவம் அமைதியாக “கஃபா”வுக்குத் தொழச் சென்றது. அவர்தான், அவர்தான் என்று அனைவரின் உதடுகளும் முணுமுணுத்தன.
தொழுது முடித்து அவர் திரும்பியபோது அத்தனை பேரும் மொத்தமாக எதிரே வந்து நின்று யாரென்று உற்றுப்பார்த்தார்கள்.முகம்மதுதான் அவர். அப்போது அவருக்கு இருபத்துமூன்று வயது. ஆணழகராகவும் அறிவில் சிறந்தவராகவும் அமைதிவிரும்பியாகவும் ஒட்டுமொத்த மெக்காவுக்கும் அவர் அப்போது நன்கு அறிமுகமாகியிருந்தார்.
முன்பே சொன்னதுபோல், அவரிடம் அனைவருக்குமே அன்பும் மரியாதையும் மேலோங்கியிருந்தது.ஆகவே, ஒரு சரியான நபர்தான் ஆலயத்துள் முதல் நபராகச் சென்றிருக்கிறார், இவரிடம் நமது பிரச்னையைச் சொல்லித் தீர்வு கேட்கலாம் என்று நம்பிக்கையுடன் அவரை அணுகிப் பேசத் தொடங்கினார்கள்.
முகம்மது பொறுமையாகக் கேட்டார். இப்போது நான் என்ன செய்யவேண்டும்?இரு தரப்பினர் இருக்கிறோம். “ஹஜ்ருல் அஸ்வத்” என்கிற கல்லை யார் “கஃபா”வின் சுவரில் பதிக்கவேண்டும்? முகம்மதுதான் சொல்லவேண்டும்.முகம்மது புன்னகை செய்தார்.
இரண்டடி நகர்ந்து, தன் தோளில் போட்டிருந்த துண்டை எடுத்துத் தரையில் விரித்தார். அந்தக் கல்லைக் கொண்டு வாருங்கள் என்று உத்தரவிட்டார்.கல் வந்தது. அதைத் துண்டின் நடுவே வைக்கச் சொன்னார். வைத்தார்கள். அவ்வளவுதான். இனி ஆளுக்கொரு புறம் துண்டின் நுனியைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றார். பிடித்துக்கொண்டார்கள். அப்படியே எடுத்துப் போய்ப் பொருத்தி, பூசிவிடுங்கள் என்றார்.
நன்கு கவனிக்கவேண்டிய இடம் இது. முகம்மது மூலம் உலகுக்கு வழங்கப்பட்ட இஸ்லாம் என்கிற மார்க்கத்தின் ஆதாரப்புள்ளி இந்தச் சம்பவத்துக்குள்தான் புதைந்திருக்கிறது.
அரேபியர்களிடையே ஒற்றுமை என்கிற அவரது பெருங்கனவின் தொடக்கப்புள்ளியும் இதுதான்.
அவர் ஒரு நபி என்று அறியப்படுவதற்கெல்லாம் பல்லாண்டுகளுக்கு முன்னதாகவே நடந்த சம்பவம் இது.நாற்பது, நானூறல்ல; நாலாயிரம் துண்டுகளாகச் சிதறிக்கிடந்த அரேபியர்களை ஒரு மேல்துண்டின் நான்கு முனைகளை ஒற்றுமையுடன் பிடிக்க வைத்ததன்மூலம் மாபெரும் யுத்தமொன்றைத் தவிர்த்தாரே, அது. அதுதான் ஆரம்பம்.முகம்மது என்றொருவர் உதிக்காமலே போயிருந்தால் அரேபியர்களுக்கு சரித்திரம் என்று ஒன்று இருந்திருக்குமா என்பதே சந்தேகம்தான்.
இன்ஷா அல்லாஹ் தொடர்வேன்…
11] கிருஸ்துவத்தின் வளர்ச்சி. நிலமெல்லாம் ரத்தம் – 11 11 கி.பி. நான்காம் நூற்றாண்டைப் பிரதிநிதித்துவப் படுத்தும் விதமாக ஒரே ஒரு விஷயத்தைக் குறிப்பிடவேண்டும் என்றால், ஒட்டு மொத்த சரித்திர ஆசிரியர்களும் சுட்டிக்காட்டுவது, கிறிஸ்துவத்தின் பரவலைத்தான். இயேசுவின் மரணத்தை அடுத்து ஆரம்பமான இயக்கம் அது. இன்றுவரையிலும் தொடர்ந்துகொண்டிருக்கும் ஒரு நடவடிக்கையே என்றபோதும், நான்காம் நூற்றாண்டில் அதன் வீச்சு, கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. மத்தியக் கிழக்கிலும் ஐரோப்பாவிலும் நன்கு பரவி, வேரூன்ற ஆரம்பித்துவிட்டிருந்தது அது. கான்ஸ்டன்டைனை அடுத்து வந்த…
Recent Comments
Archives
- April 2023
- May 2022
- April 2022
- January 2022
- August 2019
- June 2019
- January 2019
- June 2018
- February 2018
- December 2017
- November 2017
- June 2017
- February 2017
- December 2016
- June 2016
- January 2016
- December 2015
- November 2015
- October 2015
- August 2015
- July 2015
- June 2015
- May 2015
- April 2015
- March 2015
- February 2015
- January 2015
- December 2014
- November 2014
- October 2014
- September 2014
- August 2014
- July 2014
- June 2014
- May 2014
- April 2014
- March 2014
- February 2014
- January 2014
- December 2013
- November 2013
- October 2013
- September 2013
- August 2013
- July 2013
- June 2013
- May 2013
- April 2013
- March 2013
- February 2013
- December 2012
- November 2012
- October 2012
- September 2012
- August 2012
- July 2012
- June 2012
- May 2012
- April 2012
- March 2012
- February 2012
- January 2012
- December 2011
- November 2011
- October 2011
- September 2011
- August 2011
- July 2011
- June 2011
- May 2011
- April 2011
- March 2011
- February 2011
- January 2011
- December 2010
- November 2010
- October 2010
- September 2010
- August 2010
- July 2010
- September 2009
- August 2009
- June 2009
- May 2009
- April 2009
- March 2009
- February 2009
- January 2009
- December 2008
- November 2008
- October 2008
- September 2008
- August 2008
- June 2008
- March 2008
- January 2008
- December 2007
- June 2007
- May 2007
- April 2007
- March 2007
- February 2007
- January 2007
- December 2006
- October 2006
- September 2006
- August 2006
- July 2006
- June 2006