கடந்து போன என் பள்ளிக்காலம்!!

அன்று எனக்கு வயது

இருபத்தி ஐந்து…

என் பால்ய காலத்தின்

பகுதி வயதை பங்கு வைத்து

என்னை வார்த்தெடுத்த

என் பள்ளிக் கூரையின்

படிக்கட்டுகளை நோக்கியவாறு

காலடி வைத்தேன்…

அழகான மரங்கள் நிறைந்து

பச்சை பசேல் என்றிருந்தது அது…

ஆயிரமாயிரம் நினைவுகளோடு

என் பள்ளிக்கதவுகளை

முன் தள்ளியவாறு

படிக்கட்டுகளைத் தாண்டி

பாதம் பதித்தேன்.

உயரம் நிறைந்த

இரும்புத் தூண்களில் அது

அழகாக கம்பீரமாய்

காட்சியளித்தது.

மரங்கள் அனைத்தும்

காற்றோடு அசைந்து

என்னை வருக! வருக!

உன் வரவு நல்வரவாகுக!!

என்று அழைத்தற்போல்

இருந்தது.

நீண்டு நிமிர்ந்த

வகுப்பறையின்

வராந்தைகளின் மேல்

காலடிப்பதித்து சிறிது தூரம் நடந்தேன்.

என் கண்களில் கண்ட காட்சிகள் என்னை

பால்ய காலத்திற்கே கொண்டு சென்றன…

கருங்கற்களால் கட்டப்பட்டு

கூரைகளால் பின்னப்பட்ட

இருக்கைகள் இல்லாத

என் ஐந்தாம் வகுப்பு

வகுப்பறை…

சிலேட்டும் குச்சிகளும்

தீராத விளையாட்டும் நிறைந்திருந்த

அந்த வகுப்பறை…

நாபக ஆற்றில் அதிகமாக

மூழ்கிப் போனதால்தனோ என்னவோ!

அன்று என் வகுப்பறையில்

சில மணித்துளிகளை

சுவரோடு சுவராஸ்யமாய்

ஒட்டியிருந்த கரும்பலகையில்

கண்பதித்தவாறே

பார்த்துக்கொண்டிருந்தேன்…

ஆங்கிலத்தில் அழகாக

பாடம் கற்பிக்கும்

செல்வி டீச்சரும்

அறிவியல் வகுப்பெடுத்த

யேசுதாஸ் ஆசிரியரும்

என் கண்ணின்முன்னால்

நிறைந்து நின்றார்கள்…

தமிழில் அன்பாக

பாடம் கற்பிக்கும்

வள்ளியம்மை டீச்சரும்…

அதிரும் சப்தத்தோடு

கணக்குப் பாடம் நடத்தும்

மீசை சாரும்

என் மதிப்புக்குரிய ஆசான்கள்.

நீண்ட நேர நினவுகளுக்குப் பின்

பிரிய மனமின்றி

என் வகுப்பறையின்

வாயில்களைக் கடந்தேன்.

வெளியில்

சத்துணவு

சாப்பிட்டு கை கழுவும்

தண்ணீர்த் தொட்டி….

வரிசையில் நிற்க

சண்டைப்போடும் நண்பர்கள்…

ஆரவாரமாய் ஆடி ஓடும்

பள்ளிச் சிறார்கள்…

சிதறி விழும்

மீதி உணவைத் தின்பதற்க்காய்

ஆங்காங்கே பறந்துத் திரியும்

காகக் கூட்டங்கள்…

கூடவே காற்றில் கலந்து வரும்

ஆசிரியர்களின் மதிய நேர மீன் வாசம்…

இன்று அது உரு இழந்த வண்ணமாய்

யாரும் கேட்பாரற்ற நிலையில்…

பல கடந்து போன

கதைகளை சுமந்தவாறு…

என் சட்டைப்பைக்குள்

வைத்திருந்த…

தொலைதூரப் பேசியின் சப்தம்

என் மௌனத்தை கலைத்தது…

காதில் வைத்துக்கொண்டே

மீண்டும் நடந்தேன்

என் வசந்த காலத்தை நோக்கியவாறே…

அதோ என் பத்தாம் வகுப்பு!

என் வாழ்கையின் முதல் திருப்பம்

என் ஆரம்பங்கள்

அரங்கேற்ற மேடை…

புத்தகங்கள் அடுக்கி வைக்கும்

பலகைப் பெட்டி

பத்திரமாய் பூட்டி இருந்தது.

மேஜை மீது வைக்கப்பட்ட

பாதி தீர்ந்த சாக்குக் கட்டி…

சுவரோடு சேர்த்து வைத்திருக்கும்

மீதி ஒடிந்த கம்புத்துண்டு…

கரும்பலகையின் கீழ்

முற்றத்துக் கோலம்போல்

பரவிக்கிடக்கும் வண்ண வண்ண

சாக்குப் பொடிகள்…

சில நிமிடங்கள் என்னையே

மறக்க வைத்தன…

அமைதியின் முழு உருவமாய்

இருக்கைகள் நிறைந்த

வகுப்பறை…

தமிழோடு தவழ்ந்து வந்து

தமிழ் பாடம் நடத்தும்

‘தமிழையா வாத்தியார்.

ஆங்கிலமும்,

கணக்கும் நடத்தி

கண்டிப்பும், ஒழுக்கமும்

நிறைத்த மனோகர் வாத்தியார்.

கதைகளோடு பாடம் துடங்கும்

இவரின் வகுப்புகள் சுவாரஸ்யம்

மிகுந்தவை.

சாக்குக் கட்டியால் தரையில்

வட்டமிட்டு தோலுரிக்கும்

இவரின் கலை சொல்லித் தீராது.

அரசுத்தேர்வுகள் துடங்கும்

சிலநாட்களுக்கு முன்னால்

நடந்த கடைசி வகுப்பில்

மாணவர்களிடம் மன்னிப்புக் கேட்ட

இவரின் கண்ணீர் துணிகளை

நினைக்கும்போது

பிரம்புகள் ஓடிந்ததுபோல்

மனசும் உடைகிறது…

என் பால்ய காலத்தின்

பல பொக்கிஷங்களை சுமந்தவாறு

நின்ற என் பள்ளிக் கூட

நினைவுகளைத் திரும்பி நின்று

பார்த்துவிட்டு

அங்கிருந்து விடைபெற்றேன்…

author: Shuhaib

அன்று எனக்கு வயது இருபத்தி ஐந்து… என் பால்ய காலத்தின் பகுதி வயதை பங்கு வைத்து என்னை வார்த்தெடுத்த என் பள்ளிக் கூரையின் படிக்கட்டுகளை நோக்கியவாறு காலடி வைத்தேன்… அழகான மரங்கள் நிறைந்து பச்சை பசேல் என்றிருந்தது அது… ஆயிரமாயிரம் நினைவுகளோடு என் பள்ளிக்கதவுகளை முன் தள்ளியவாறு படிக்கட்டுகளைத் தாண்டி பாதம் பதித்தேன். உயரம் நிறைந்த இரும்புத் தூண்களில் அது அழகாக கம்பீரமாய்… காட்சியளித்தது. மரங்கள் அனைத்தும் காற்றோடு அசைந்து என்னை வருக! வருக! உன் வரவு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *