பாலஸ்தீன சிறுவர்களின் நிலை…

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)…

தங்கள் மீதும் தங்களின் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக…ஆமின்.

சமீபத்தில் பாலஸ்தீன சிறுவர்களின் நிலை குறித்த ஒரு கட்டுரையை “உன்னதம்” இதழுக்காக மொழிப்பெயர்க்கும் வாய்ப்பு கிட்டியது. அல்ஹம்துலில்லாஹ். மனதில் பெரும் பாதிப்பை ஏற்ப்படுத்திய அந்த கட்டுரை உங்கள் முன் இங்கு பதியப்படுகிறது… 

சர்வதேச சிறுவர்கள் பாதுகாப்பு அமைப்பு (Defense for Children International – Palestine Section) – பாலஸ்தீன கிளை, ஆக்கிரமிப்பு பாலஸ்தீனத்தில் உள்ள சிறுவர்கள் மற்றும் பதினெட்டு வயதுக்குட்பட்டோரின் உரிமைகளை பாதுகாப்பதை தன் குறிக்கோளாக கொண்ட அமைப்பு.

ரிபத் கஸ்சிஸ் (Rifat Kassis) இதனுடைய தலைவராக 2005 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  தற்போது இரண்டாவது முறையாக பதவியில் உள்ளார். சமீபத்தில் “The Electronic Intifada” என்னும் இணையப்பத்திரிக்கையை சேர்ந்த அட்ரி நிவ்ஹோப் (Adri nieuwhof) இவரிடம் நேர்க்காணல் நடத்தினார். அப்போது ஆக்கிரமிப்பு பாலஸ்தீனத்தில் உள்ள சிறுவர்களின் நிலை குறித்து ரிபத் கஸ்சிஸ் விளக்கினார்.

அட்ரி நிவ்ஹோப்: உங்கள் அமைப்பை பற்றியும், நீங்கள் இங்கு செய்யக் கூடிய பணி பற்றியும் விளக்கவும்.
ரிபத் கஸ்சிஸ்: எங்கள் அமைப்பு பணியாற்ற தொடங்கி இது பத்தொன்பதாம் வருடம். இதை நான் மற்றவர்களுடன் சேர்ந்து தொடங்கினேன். சின்னதாக எளிமையாக தொடங்கப்பட்ட இந்த அமைப்பை இப்போது பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது. இங்குள்ள சிறுவர் உரிமை மீறல்களை கண்காணிப்பதும், குறிப்பெடுத்துக் கொள்வதும், அந்த சிறுவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதும் தான் எங்களின் முதன்மையான பணி.
அதுமட்டுமல்லாமல் உள்நாட்டு கலவரங்களில் சிறுவர்கள் பாதிக்கப்படாமல் காப்பதும் எங்கள் பொறுப்பு. உதாரணத்துக்கு இங்குள்ள (பாலஸ்தீனம்) கல்வி அமைச்சகத்துடன் இணைந்து, சிறுவர்கள் உடல் ரீதியாக தண்டிக்க படுவதையும், மற்ற சமூக தொண்டு நிருவனங்களுடன் சேர்ந்து சிறுவர்களின் உரிமைகளை காப்பதும், அவர்களை பணிகளில் சேர்ப்பது பற்றியும், சிறுவர்கள் தங்களுக்கான உரிமைகளை தெரிந்து கொள்ள முன்வர வேண்டும் என்று அழைப்பு விடும்படியும், அதன்மூலம் உள்நாட்டு கலவரங்களையும், சிறுவர்கள் உடல் ரீதியாக தண்டிக்கப்படுவதையும் முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் எண்ணுகிறோம்.
அ: இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பாலஸ்தீன சிறுவர்கள் மீதான முக்கிய குற்றச்சாட்டு என்ன?
ரி: எங்களிடம் உள்ள தகவலின் படி ஒவ்வொரு வருடமும் சுமார் 700 சிறுவர்கள் இஸ்ரேலிய நீதிமன்றங்களால் குற்றஞ்சாட்டபட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர், அதாவது சுமார் 26%, இஸ்ரேலிய ராணுவத்தின் மீது கல்லெறிந்ததால் பிடிக்கப்பட்டவர்கள்.
மற்ற காரணங்கள், தடை செய்யப்பட்ட அரசியல் பணிகளில், ஆர்ப்பாட்டங்களில் பங்குபெற்றது போன்றவை. இப்படி சிறையில் உள்ள சிறுவர்களில் பனிரெண்டு வயது சிறுவர்கள் கூட உண்டு.
அ: இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பாலஸ்தீன சிறுவர்களின் அனுபவங்கள் குறித்து கூற முடியுமா?
ரி: நாங்கள் இந்த சிறுவர்களிடமிருந்தும், அவர்களது பெற்றோர்களிடமிருந்தும், அவர்களது வழக்கறிஞர்களிடமிருந்தும், ஒரே விதமான தகவல்களையே பெறுகிறோம். அதாவது இஸ்ரேலிய வீரர்கள் இரவிலோ, விடியற்காலையிலோ, சிறுவர்களின் வீட்டிற்கு வருவார்கள். பெரும் இரைச்சல் போட்டுக்கொண்டு காட்டமான முறையில் வீட்டிற்குள் நுழைவார்கள். அந்த சிறுவர்களின் பெற்றோர்களிடம் எந்த ஒரு காரணமும் கூறாமல் சிறுவர்களை அழைத்து சென்று விடுவார்கள். சில சிறுவர்கள் சோதனைச் சாவடிகளில் வைத்து கைது செய்யப்படுவதும் உண்டு.
சிறுவர்கள் அவர்களது வீட்டிலிருந்து அழைத்து செல்லப்படும்போது அந்த வீரர்கள் கத்துவார்கள், “இங்கே யார் முஹம்மது”. அந்த முஹம்மது என்ற சிறுவனுக்கு 12-13 வயது இருந்தாலும் சரி, கண்டுக்கொள்ளமாட்டர்கள். அவனை உதைப்பார்கள், கண்ணை கட்டுவார்கள், அவன் கைகளை பிளாஸ்டிக் கயிறுகளால் அவன் வலியுனால் துடிக்குமளவு கட்டுவார்கள். பின்னர் அவர்களது வாகனத்திற்கு பின்னால் அவனை போட்டுக்கொண்டு சென்று விடுவார்கள். வாகனத்தில் வைத்தும் அடிப்பார்கள். இது அந்த சிறுவர்களுக்கு உளவியல் ரீதியாக மிகப்பெரிய பாதிப்பை ஏற்ப்படுத்தும்.
அந்த சிறுவர்கள் கொண்டு செல்லப்பட்ட இடத்தில், ஒன்று சிறையில் அடைக்கப்படுவார்கள் அல்லது கேள்வி கேட்க அழைத்து செல்லப்படுவார்கள். கேள்வி கேட்கப்படும்போதும் அவர்கள் உதைக்கப்படுவார்கள், அடிக்கப்படுவார்கள், தவறான வார்த்தைகளால் திட்டப்படுவார்கள். அவர்களது குடும்பங்களை அழித்து விடுவோம் என்றும், அவர்களுடைய தாய்மார்கள் கற்பழிக்கப்படுவார்கள் என்றும் மிரட்டப்படுவார்கள்.
பெரும்பாலான நேரங்களில் அந்த சிறுவர்கள் தாங்கள் குற்றம் செய்ததாக சுமார் இரண்டு அல்லது மூன்று மணி நேரங்களுக்குள்ளாக ஒப்புக்கொள்வார்கள், குற்றம் செய்திருந்தாலும் சரி, செய்யா விட்டாலும் சரி.
இது சர்வதேச சிறுவர் விதிமுறைகளுக்கு முற்றிலும் எதிரானது. சென்ற ஆண்டு இஸ்ரேலிய இராணுவச் சட்டம் ஒன்று சிறுவர்களுக்காக ஏற்படுத்தப்பட்டது. அது அக்டோபர் மாதம் முதல் நடைமுறைக்கு வந்தது. இதில் நாம் மேலே பார்த்த தவறுகள் திருத்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் என்னுடைய வழக்கறிஞர்களை கேட்டீர்களானால் அவர்கள் சொல்லுவார்கள் இன்னும் இதுபோன்ற விதிமுறை மீறல்கள் நடந்துக் கொண்டு தான் இருக்கின்றன என்று. பெரியவர்களுடன் இந்த சிறுவர்கள் நீதிமன்றங்களுக்கு கொண்டு வரப்படுகிறார்கள்.
சுருக்கமாகச் சொன்னால், இஸ்ரேலிய இராணுவ நீதிமன்றங்களில் சிறுவர்களுக்கான விதி முறைகளே கிடையாது. சிறுவர்களுக்கு அங்கு நியாயமும் கிடைக்காது.
அ: இஸ்ரேலிய ஆக்கிரமிப்பால் ஏற்ப்பட்ட கலவரங்களில் இதுவரை எத்தனை சிறுவர்கள் உயிரிழந்திருப்பார்கள்?

ரி: இரண்டாவது பாலஸ்தீன இன்டிபிடா (செப்டம்பர் 2000) தொடங்கி இன்றுவரை சுமார் ஆயிரம் சிறுவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது இஸ்ரேலிய ஆக்கிரமைப்பால் சென்று ஆண்டு குளிர்க்காலத்தில் காசா பகுதியில் கொல்லப்பட்ட 348 சிறுவர்களை சேர்க்காமல்.

எப்படி இவர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதற்கும் எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன. சிலர் நேரடியாக கொல்லப்பட்டிருக்கிறார்கள். வேறு சிலர் மற்றவர்களையோ அல்லது வீடுகளையோ சுடும்போது குறுக்கே வந்தவர்கள். மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியில் இறந்தவர்களையும் மறந்து விட வேண்டாம்.

இப்போது காசாவில் உள்ள தடை உத்தரவால் மனித உரிமை இயக்கங்களால் கணக்கெடுக்க முடிவதில்லை. உதாரணத்துக்கு பசியால் இறந்த ஒரு சிறுவனை எங்களால் கணக்கெடுக்க முடியவில்லை.

நிறைய சிறுவர்கள் அராஜகமாக இஸ்ரேலியர்களால் கொல்லப்படுகின்றனர்.  2008 இல் இஸ்ரேலிய ஆக்கிரமைப்பால் ஏற்ப்பட்ட கலவரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். சுமார் 20 சிறுவர்கள் காயப்பட்டும், சிலர் இறந்தும் உள்ளனர். இதனை நாங்கள் நவம்பர் 2008 இல் எழுதினோம்.

அ: மனித உரிமை நிறுவனங்களுக்கு ஆதரவாக இருக்கும் நாடுகளை இஸ்ரேல் தொடர்ந்து விமர்சித்து வருகிறதே. அதுப் பற்றி?

ரி: அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பின் கண்மூடித்தனமான ஆதரவு மற்றும் தன் இராணுவ பலத்தை நம்பியிருக்கும் நாடு இஸ்ரேல். மத்திய கிழக்கில் உள்ள ஒரே ஜனநாயக நாடு என்பதுதான் அது இன்றளவும் இருப்பதற்கு காரணம்.

மனித உரிமை மீறல்கள் குறித்து பாலஸ்தீன அமைப்புகள் குரல் கொடுத்தால், அரசியல் காரணங்களை காட்டி இஸ்ரேல் அவற்றை நிராகரித்து விடும். ஆனால் சர்வதேச அமைப்புகளிடம் அது முடியாது.

மேற்கு கரை மற்றும் கா

சா பகுதியில் தன் பலத்தை காட்ட இஸ்ரேல் நினைத்தால், செய்தியை வழங்க ராணுவத்திலிருந்து ஒரு ஊடகப்பிரிவை அமைத்துக்கொள்ளும். எந்த ஒரு சர்வதேச ஊடகங்களையும் உள்ளே அனுமதிக்காது.

இஸ்ரேலுக்கு அந்த சர்வதேச ஊடகங்கள் இங்கே தேவையில்லை. அதுபோல இஸ்ரேல், சர்வதேச அமைப்புகளை ஜெருசலத்தை விட்டு வெளியேற்றவே நினைக்கிறது. நாங்கள் பல முக்கியமான தகவல்களை சேகரிக்க, சர்வதேச மனித உரிமை அமைப்புகளும், மற்றும் எங்கள் அமைப்பை சேர்ந்த பல வெளிநாட்டினரும் உதவியிருக்கின்றனர்.

நான் இஸ்ரேலை குறை கூற விரும்பவில்லை. நான் கண்டிக்க நினைப்பது, இஸ்ரேலுக்கு பணிந்து போய்க்கொண்டு தன் கொள்கைகளுக்கு துரோகம் செய்யும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளைத்தான்.

ஆனால் சர்வதேச நாடுகள் இதற்க்கெல்லாம் பணியாமல் மனித உரிமை இயக்கங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.
—end of interview—

துவா செய்துக்கொண்டே இருப்போம், பாலஸ்தீன மக்களுக்கு அவர்களுடைய நிலம் திரும்ப கிடைக்கவேண்டுமென்று…

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்…

This Article was translated by Aashiq Ahamed for Unnatham magazine.

Pattinatthan

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)… தங்கள் மீதும் தங்களின் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக…ஆமின். சமீபத்தில் பாலஸ்தீன சிறுவர்களின் நிலை குறித்த ஒரு கட்டுரையை “உன்னதம்” இதழுக்காக மொழிப்பெயர்க்கும் வாய்ப்பு கிட்டியது. அல்ஹம்துலில்லாஹ். மனதில் பெரும் பாதிப்பை ஏற்ப்படுத்திய அந்த கட்டுரை உங்கள் முன் இங்கு பதியப்படுகிறது…  சர்வதேச சிறுவர்கள் பாதுகாப்பு அமைப்பு (Defense for Children International – Palestine Section) – பாலஸ்தீன கிளை, ஆக்கிரமிப்பு பாலஸ்தீனத்தில் உள்ள சிறுவர்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *