ஒரு விழியில் இரு வழிகள்

Written by Thengai Priyan on . Posted in poems

இது கதையல்ல நிஜம். கால வெள்ளத்தில் கரைந்துபோன

ஒரு உறவின் நெருடல். அன்று ஏட்டின் வாசலில் எழுதத்  

தயங்கிய என் தூரிகை இன்று என் வான்மதிக்காய்- அவள்

நினைவுச் சிதறல்களை வரிகளாய் வடிக்கிறது.

வான்மதி என் பள்ளித்தோழி, கூடவே என் களித்தோழி

அரயத்திப் பெண்ணானாலும் அவழுக்கு அழகிய வதனம்.

பதினோராம் வகுப்புவரை என்னோடு பயின்றவள் .கணக்குப்

பாடத்தில் நல்ல கைதேர்ந்தவள்.ஆனால் ஆங்கிலப் பாடம்

அதிகம் ஒடாது. ஆறாம் வகுப்பிலிருந்து ஆங்கிலப் பாடத்தை நான்

சரளமாய் வாசிப்பவன்.வார்த்தையின் அர்தங்கள் புரியாவிட்டாலும்

அழகிய உச்சரிப்பால் அன்றே மொழிபவன். எங்கள் ஆங்கில ஆசிரியை

உமாவதி டீச்சர் சக மாணாக்களுக்கு வாசித்துக் காட்ட என்னையே பணித்திடுவார்.

அன்று என் அழகான கைஎழுத்தும், ஆங்கில உச்சரிப்பும் எல்லோருக்கும் பிடித்தது.

கூடவே வான்மதியையும் அது கவர்ந்தது.கணக்குப் பாடத்தை அவளிலிருந்து காப்பியடிப்பேன்

பதிலுக்காய் ஆங்கில ஹோம் ஒர்கை அவளுக்காய் எழுதிடுவேன்.மனதில் எந்த மையலும் இல்லை, கபடமுமில்லை, களங்கமில்லா உள்ளத்தோடு நாளாக பழகிவந்தோம்.தினந்தோறும் அவளுக்காய் தெருமுனையில் காத்திருந்து ஒன்றாகவே எங்கள் பள்ளிக்கூடம் வருவோம்.

ஒரு அந்தியில் பள்ளி விட்டு வீட்டுக்குப் போகாமல்  கடர்க்கரையின் மணர்ப்பரப்பில் மண்வீடு

கட்டி அதன் வாசலில் எங்கள் பெயர்களை எழுதி விளையாடினோம்.பேரலை ஒன்று அம்மண் வீட்டை அடித்துச் சென்றது. ஆசையுடன் பணிந்த வீட்டை அலை வந்து அடித்துப் போய்விட்டதே என்று  விதும்பிய விம்மலுடன் வீடு திரும்பினோம். தாமதமாய் வந்ததனால் தர்ம அடி தந்தார்கள் என் தந்தை,அவளுக்கும் அதுபோன்று கிடைத்தாக மறுநாள் அழுது சொன்னாள்.

ஒருநாள் ஆசிரியர் வரவில்லை.ஒருபாடலை முணுமுணுத்தேன்.வகுப்பறையில் ஒழுகி வந்த என் பாடல் சக மாணாக்கர்களின் செவிகளை எட்ட என்னை அதை தொடர்ந்து பாட நச்சரித்தனர். பாடினேன், இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவில் தொட்டிலைக் கட்டி வைத்தேன்,அதில் பட்டுத்துகிலுடன் அன்னச் சிறகினை மெல்லென இட்டு வைத்தேன்.நான் ஆராரொ என்று தாலாட்ட இன்னும் யாராரோ வந்து பாராட்ட.எல்லோருக்கும் அப்பாட்டு பிடித்தது, வான்மதிக்கும் பிடித்தது.

பருவம் வந்தது,அதை புரியும் வயதில்லை அன்று.ஒரு ஞாயறு காலை வலியாறில் நீராட வந்தாள்.வகுப்பறையில் நான் பாடிய பாடலை முணு முணுத்தவாறே வந்தாள்.ஆற்றோர தென்னை

மரத்தில் சாய்ந்து நின்று அவளுக்காய் மறுபடியும் அதை பாடினேன்.சாய்ந்து நின்ற மரத்திலிருந்து ஒரு குயிலின் இனிய ராகம் சன்னமாய் வீசிய தென்றலினூடே ஒழுகி வந்தபோது அதோடு என்

பாட்டும் கலந்ததாய் ஒரு உணர்வு.ஆற்றில் குளிக்கும் சிறார்களோடு கோரக்கோரே செங்கோரே விளையாட்டு அதில் அவள் குரல் மட்டும் எனக்கு ஏனோ அது இசைபாட்டு! நீராடி திரும்பும் போது அருகில் வந்து அமைதியாய் சொன்னாள்.மணாளா உன் பாட்டு எனக்கு நல்லா பிடிச்சிருக்கு. மறுநாள் பள்ளிக்கு வந்தபோது நன்றிசொன்னேன்.மனதில் மொவ்னமாய் உதிர்ந்தது அவளின் நினைவுப் பூக்கள். மையலில்லாத ஒரு உறவு. பள்ளி இறுதி ஆண்டு,ஆறாண்டுகள் ஒன்றாய் ஒருகூட்ட்டில் உறவாடிய பாசப் பறவைகளின் பிரிவின் துடக்கம்.1977 பள்ளி ஆண்டுவிழா வந்தது.

பாட்டுப்போட்டியில் கலந்து கொண்டேன்.வான்மதியும் கலந்து கொண்டாள்.பல மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.பல்வேறு போட்டிகள் நடந்தன.உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல… உன்னை எண்ணாத நெஞசும் நெஞ்சல்ல…என்ற பாடலை அவள் மிக அருமையாக பாடினாள்.இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவில் தொட்டிலைக் கட்டிவைத்தேன் என்ற பாடலை நான் பாடினேன். முதல் பரிசு அவளுக்கும்,இரண்டாம் பரிசு எனக்கும் கிடைத்தது.இவ்வளவு அருமையாக பாடுவாய் என்று இதுநாள் வரை சொல்லவே இல்லையே என்று ஆச்சரியத்தோடு கேட்டேன்.அதெல்லாம் உன் பாட்டின் பிரதிபலிப்புதான் என்று சாதாரணமாக சொன்னாள். பள்ளி இறுதித் தேர்வை எழுதினோம்.கடைசித் தேர்வு உயிரியல் பாடத்துக்கானது.இதயத்தை படம் வரைந்து விவரி என்று ஒரு கேள்வி வந்திருந்தது.படம் வரையத் தெரிந்தாலும் அதை விட்டுவிட்டேன்.பிரிவின் துயரில் வாடும் இதயத்தை காகித்தில் வடித்து மதிப் பெண் பெற மனம் ஏனோ அன்று இசயவில்லை.தேர்வு எழுதி முடித்து வெளியே வந்தேன்.ஏர்கனவே எழுதி முடித்து வெளியே எனக்காய் காத்திருந்தாள். கண்கள் நிரம்பி இருந்தன.

இருவரின் விழிகளும் துளும்பியதால் வார்த்தைகள் எங்கள்  உதடுகளின் வாசல்களில் வராமல் போனது. இறுதியாக மலரோடு ஒரு மடல் தந்தாள். வழியில் படிக்காமல் வீட்டில் போய் படி என்றாள்.கடைசியாய் உதிர்ந்தது அவள் உதட்டிலிருந்து ஒரு மலர். தேங்கை மணாளா போய்வருகிறேன் என்று. அவள் நினைவால் எனக்குள் சூட்டிக் கொண்ட மலர்தான் தேங்கை மணாளன். வீட்டுக்குப் போய் ஆர்வத்தோடு மலர்படித்தேன். பள்ளித்தோழா கூடவே என் களித்தோழா, கடர்கரை கிராமத்தில் இருவேறு ஊர்களில் பிறந்தோம்.ஆறிலிருந்து பதினொன்று வரை ஒன்றாய் படித்தோம், கள்ளமில்லா உள்ளத்தோடு பழகிக் களித்தோம்.அன்றொரு நாள் கடர்கரையின் மணர்பரப்பில் ஒன்றாய் மண்வீடு கட்டினோம்,ஆழி அலை ஒன்று அதை அள்ளிச் சென்றது உனக்கு ஞாபகம் வருகிறதா? நம் பள்ளி வாழ்வும் இப்படித்தான்.நம் மனதின் மணர்பரப்பில் நாம் பணியும் வீடுகளும் பிரிவெனும் ஆழி அலை வந்து அதை பெயர்த்துவிடும்.

ஒரு செடியில் பூக்கும் மலர்கள் செடியை தனிமையாக்கிவிட்டு உதிர்ந்து விடுவது போல் நமது பள்ளி வாழ்வும் இப்படித்தான். பள்ளிக்கூட உறவு என்கிற செடியிலிருந்து உதிர்ந்து விடும் மலர்களைப் போன்றுதான் நாமும்.என்றாவது எங்காவது ஒருநாள் உடலில் உயிர் இருப்பின் சந்திப்போம். நம் விழிகள் ஒன்றாய் இருந்தாலும் நாம் இருவழிகள் என்பதை நினைவில் வைப்போம். உன் பாடல் என்றும் என் இதயத்தில் முணுமுணுக்கும்.

அன்புடன் வான்மதி.

பாடித் திரிந்த பறைவைகளே,பழகிக் களித்த தோழர்களே பறந்து செல்கின்றோம், நாம் பிரிந்து செல்கின்றோம் என்ற பாட்டு எங்கிருந்தோ ஒலிப்பெருக்கியிலிருந்து ஒழுகிவந்தது. விழியில் ததும்பிய துளியை துடைத்தவாறு பிரியா விடை கொடுத்தேன். ஆம் வான்மதி நாம் ஒரு விழியில் இரு வழிகள்.

 

 

Add comment

தனி நபர் பற்றிய விமர்சனம் கூடாது.


Security code
Refresh

We have 27 guests and no members online