Old News About Thengapattanam Fishing Harbour

24 மாதத்தில் மீன்பிடி துறைமுக பணி நிறைவடையும்

September 22nd.2010

புதுக்கடை: தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக பணி 24 மாதங்களில் நிறைவுபெறும் என மாநில மீன்வளத்துறை செயலாளர் நிர்மலா துறைமுக பணியை ஆய்வு செய்த போது கூறினார்.
தமிழகத்தின் மேற்கு கடற்கரையான அரபிக்கடல் எல்லையோரத்தில் குமரியின் தென்மேற்கு பகுதியில் தேங்காப்பட்டணம், முள்ளூர்துறை, ராமன்துறை, இனையம், மிடாலம், மேற்கு பகுதியில் இரயுமன்துறை, தூத்தூர், பூத்துறை, இரவிபுத்தன்துறை, கொல்லங்கோடு, நீரோடிகாலனி உள்ளிட்ட கடற்கரை கிராமங்கள் உள்ளன.

இந்த கடற்கரை கிராமங்களில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவ மக்கள் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர். வழக்கமாக மேற்குறிப்பிட்ட கடற்பகுதிகளில் மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கடலில் ராட்சஸ அலைகள் எழும்பி மீன்பிடி படகுகளையும், வீடுகளையும் துவம்சம் செய்யும்.சாதாரணமாக இதனால் இந்த மாதங்களில் கடலில் சென்று மீனவர்களால் மீன்பிடிக்க முடியாது.

ஆகவே இந்த காலங்களில் இக்கடற்கரை கிராமங்களில் உள்ள மீனவர்கள் கொச்சி, விழிஞ்ஞம், குஜராத், மும்பை போன்ற இடங்களுக்கு சென்று மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர்.இவ்வாறு இப்பகுதி மக்கள் நாட்டின் வேறு பகுதிகளுக்கு சென்று மீன்பிடிக்கும் போது அப்பகுதி மக்களுக்கும், இவர்களுக்கும் இடையே பிரச்னைகள் ஏற்படுகிறது. இதனால் குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் பெரிதும் பாதிப்படைந்து வந்தனர். இந்த காலங்களில் இவர்களுக்கு வறுமை தலைவிரித்தாடும்.இதனால் இவர்கள் தேங்காப்பட்டணத்தில் மீன்பிடித்துறைமுகம் அமைக்க வேண்டும் என கடந்த 40 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த கோரிக்கையை அரசு ஏற்று தேங்காப்பட்டணத்தில் மீன்பிடித்துறைமுகம் அமைக்க 40 கோடி ரூபாய் ஒதுக்கிறது.இந்த மீன்பிடித்துறைமுகத்தில் 12 மீட்டர் நீளத்தில் 300 மீன்பிடிக்கலன்களும், 16 மீட்டர் நீளத்தில் 450 மீன்பிடிக்கலன்களும் சேர்த்து மொத்தம் 750 மீன்பிடிக்கலன்கள் நிறுத்தும் விதத்தில் மதிப்பீடு செய்யப்பட்டது. மேலும் இந்த திட்டத்தில் மீன் ஏலக்கடை, வலைபின்னும் கூடம் அமைக்கப்பட உள்ளது.இந்த மீன்பிடித்துறைமுகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த டிசம்பர் மாதம் 2ம் தேதி துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாகர்கோவிலில் நடந்தது. துறைமுக கட்டுமான பணி துவங்கும் விழா கடந்த ஏப்ரல் மாதம் 5ம் தேதி சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் தலைமையில் தேங்காப்பட்டணத்தில் நடந்தது.

தற்போது பிரதான அலை தடுப்புச்சுவர் 240 மீட்டர் தூரத்தில் போடப்பட்டுள்ளது. இன்னும் 340 மீட்டர் தூரம் தடுப்புச்சுவர் போடும் பணி நடக்க உள்ளது. அணுகுசாலை 340 மீட்டர் தூரம் போடப்பட்டுள்ளது. இந்த பணிகளை மாநில மீன்வளத்துறை செயலாளர் நிர்மலா, மீன்வளத்துறை இயக்குனர் செல்லமுத்து, தலைமை இன்ஜினியர் ஜெகநாத் பார்வையிட்டனர்.

ராட்சஸ கல்போடும் பணியை பார்வையிட்டு கொண்டிருக்கும் போது திடீரென கடலில் எழுத்த ராட்சஸ அலைகள் அதிகாரிகளை பீதியடைய வைத்தது. மீன்வளத்துறை செயலாளர் நிர்மலா அதிகாரிகளிடம், “அலைகள் பயங்கரமாக இருப்பதால் தடுப்புச்சுவர் எப்படி போடுகிறீர்கள்? கற்கள் இப்படி போட்டால் பாதுகாப்பாக இருக்குமா? பிரதான அலை தடுப்புச்சுவர் வளைந்து போனால் சரியாக இருக்குமா’ போன்ற சந்தேகங்களை கேட்டு விளக்கம் பெற்றார்.மீன்பிடித்துறைமுக நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜோர்தான் மீன்வளத்துறை செயலாளரிடம், பிரதான அலை தடுப்புச்சுவரின் உயரம் குறைவாக உள்ளது.

அதனால் கூடுதல் உயரத்துடன் அகலமாக தடுப்புச்சுவரை போட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.பின் நிருபர்களிடம் மாநில மீன்வளத்துறை செயலாளர் நிர்மலா கூறியதாவது:தேங்காப்பட்டணத்தில் 40 கோடி ரூபாய் மதிப்பில் மீன்பிடித்துறைமுகம் கட்டப்பட்டு வருகிறது. பணிகள் விரைவாக நடக்கிறது. 24 மாதங்களில் இந்த துறைமுக பணி நிறைவுபெறும். இப்பகுதி மீனவர்கள் ஏராளமான கோரிக்கைகள் விடுத்துள்ளனர்.

அது குறித்தும், மீன்பிடி துறைமுக பணி குறித்தும், தற்போது செய்து வரும் பணியில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமா என்பது குறித்தும் வரும் 24ம் தேதி உயர்மட்ட குழுவில் ஆலோசித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு மீன்வளத்துறை செயலாளர் நிர்மலா கூறினார்.ஆய்வின் போது இணை இயக்குநர்கள் மோகனசுந்தரம், ஜூடு ஆம்ஸ்ட்ரங், ரங்கராஜன், இன்ஜினியர் தர்மராஜ், மீன்பிடி துறைமுக நடவடிக்கைக்குழு ஒருக்கிணைப்பாளர் ஜோர்தான், முள்ளூர்துறை பங்குத்தந்தை பெலிக்ஸ், இந்திய மீன் தொழிலாளர் சங்க செயாளர் ஜாண் அலோசியஸ், ஆழ்கடல் மீன்பிடி தொழிலாளர் சங்க செயலாளர் என்சிலோம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Thanks to: http://kanyakumari.com/news/?p=1501

24 மாதத்தில் மீன்பிடி துறைமுக பணி நிறைவடையும் September 22nd.2010 புதுக்கடை: தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக பணி 24 மாதங்களில் நிறைவுபெறும் என மாநில மீன்வளத்துறை செயலாளர் நிர்மலா துறைமுக பணியை ஆய்வு செய்த போது கூறினார். தமிழகத்தின் மேற்கு கடற்கரையான அரபிக்கடல் எல்லையோரத்தில் குமரியின் தென்மேற்கு பகுதியில் தேங்காப்பட்டணம், முள்ளூர்துறை, ராமன்துறை, இனையம், மிடாலம், மேற்கு பகுதியில் இரயுமன்துறை, தூத்தூர், பூத்துறை, இரவிபுத்தன்துறை, கொல்லங்கோடு, நீரோடிகாலனி உள்ளிட்ட கடற்கரை கிராமங்கள் உள்ளன. இந்த கடற்கரை கிராமங்களில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *