உலகதரத்தில் தேங்காப்பட்டணம் துறைமுகம் ஆய்வுக்கு பின் பிரான்ஸ் நிபுணர் நம்பிக்கை

Written by abdul rashid on . Posted in Fishing Harbour

13 November 2010

 

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம் உலகதரம் வாய்ந்ததாக அமையும் என தேங்காப்பட்டணத்தில் மீன்பிடி துறைமுகத்தில் மேற்கொள்ளப்படும் கோர்லாக் பணியினை பார்வையிட்ட பிரான்ஸ் நாட்டு நிபுணர் சில்வா கூறினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பகுதியில் தேங்காப்பட்டணம், முள்ளூர்துறை, ராமன்துறை, புத்தன்துறை, இனயம் சின்னத்துறை, இனயம், ஹெலன்காலனி, இரயுமன்துறை, தூத்தூர், சின்னத்துறை உள்ளிட்ட கடற்கரை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வசிக்கின்றனர்.

 

இவர்களில் பெரும்பாலானோர் மீன்பிடி தொழில் செய்கின்றனர். தூத்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட மீனவர்கள் ஆழ்கடலில் சென்று மீன்பிடித்து வருகின்றனர். இவர்கள் உயர்ரக மீன்களை பிடிப்பதில் திறமை வாய்ந்தவர்கள். ஆனால் மீன்பிடி துறைமுகம் இல்லாதததால் விழிஞ்ஞம், விசாகப்பட்டினம், மும்பை, எர்ணாகுளம் போன்ற பகுதிகளில் சென்று மீன்பிடிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

மேலும் ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கடலில் ராட்சஸ அலை எழும்பும். சுமார் 30 அடி உயரம் வரை எழும்பும் ஆக்ரோஷமான அலைகள் கடற்கரையோரத்தை தொட்டிருக்கும் வீடுகளை இழுத்து செல்வதும், மீனவர்கள் அலறியடித்து உறவினர் வீடுகளில் தஞ்சமடைவதும் தொடர்ந்து நடக்கிறது. இதனால் இந்த மாதங்கள் மீனவர்களின் வாழ்வில் சோகம் தாண்டவமாடும். இதனால் இனயம், தூத்தூர் மண்டலங்களை சேர்ந்த மீனவர்கள் தேங்காப்பட்டணத்தில் துறைமுகம் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து அரசு தேங்காப்பட்டணத்தில் ஆய்வு மேற்கொண்டது. ஆய்வை தொர்ந்து இயற்கை வசதியுடன் இருக்கும் தேங்காப்பட்டணத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்க அரசு முடிவு செய்தது.

அதன்படி தேங்காப்பட்டணத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் 40 கோடி ரூபாய் ஒதுக்கியது. இதற்கான பணிகளும் கடந்த 11 மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டது. முதற்கட்டமாக தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம் அமையவிருக்கும் இடம் வரை பாதை வசதி ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து அலை தடுப்புச்சுவர் போடப்பட்டது. இதில் 570 மீ., தூரத்திலும், 270 மீ., தூரத்திலும் இரண்டு கட்டமாக அலை தடுப்புச்சுவர் அமைகிறது. அண்மையில் இந்த பணியை ஆய்வு செய்த மீன்வளத்துறை செயலாளர் நிர்மலா கல் அடுக்கும் முறையில் மாற்றம் செய்ய வேண்டுமென கூறினார். அதன்படி கல் அடுக்கும் முறையில் மாற்றம் செய்யப்பட்டது. கடலின் உள்ளே 10 டன், 12 டன் எடையுள்ள ராட்சஸ கற்களை கொண்டு அலை தடுப்புச்சுவர் போடப்பட்டுள்ளது. இந்த அலை தடுப்புச்சுவருக்காக போடப்பட்ட கற்களை பாதுகாக்க கோர்லாக் கற்களை பிரான்ஸ் நாட்டு நிறுவனம் அறிமுகம் செய்தது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சில்பதி என்றும் நிறுவனம் மீன்பிடி துறைமுகத்திற்காக போடப்பட்ட தடுப்புச்சுவர்களை கோர்லாக் கற்கள் போட்டு பாதுகாக்கலாம் என கூறியுள்ளது.

இதுகுறித்து பிரான்ஸ் நாட்டு நிபுணர் சில்வா கூறியதாவது: தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கு எங்களது பிரான்ஸ் நிறுவனம் சில அறிவுரைகள் வழங்கியுள்ளது. அதாவது மீன்பிடி துறைமுகத்திற்காக போடப்பட்ட கற்களை பாதுகாக்க கோர்லாக் போட வேண்டும். இந்த கோர்லாக்குகள் 5 டன், 8 டன், 10 டன், 12 டன் எடைகளில் உள்ளது. இதில் எடை குறைந்த கோர்லாக்குகளை கடற்கரை துவங்கும் இடத்தில் போட வேண்டும். ஆழம் அதிகரிக்க, அதிகரிக்க பெரிய கோர்லாக்குகளை போட வேண்டும். தமிழகத்திலே இந்த கோர்லாக் டெக்னிக்கல் அமல்படுத்தும் முதல் துறைமுகம் தேங்காப்பட்டணம். மீன்பிடித்துறைமுக பணிகளை ஆய்வு செய்ததில் இந்த துறைமுகம் உலகத்தரம் வாய்ந்ததாக அமையும். இவ்வாறு பிரான்ஸ் நிபுணர் சில்வா கூறினார். இவருடன் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக ஒருங்கிணைப்பு நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜோர்தான், மீன்வளத்துறை இன்ஜினியர் தர்மராஜ், இளநிலை இன்ஜினியர் பாலகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, இன்ஜினியர் லிங்கமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Comments   

0 #3 abulhussain 2011-12-27 12:12
good
Quote
0 #2 tpmguy. 2010-11-22 22:37
the video also very niv\ce and informative.
the local news are doing their job very well
Quote
0 #1 tpmguy. 2010-11-22 22:36
arumaiyana seythi.
I think the work will finish soon.
its positive result for thengaiyyans
Quote

Add comment

தனி நபர் பற்றிய விமர்சனம் கூடாது.


Security code
Refresh