தேங்கை மாநகரின் தீன்குல முத்துகள்
தேங்கை மாநகரின் தீன்குல முத்துகள்
English Version of History
Thengapattanam History Tamil Version
Thengapattanam in Books
தென்தமிழ் நாட்டில் தீனில் பூந்தென்றலை கி.பி.ஆறாவது நூற்றாண்டின் முடிவிலேயே ஆரத்தழுவிய புனித பூமி,தேங்காய்ப்பட்டணம் ஆகும்.இந்த மண்ணில்,_மாநபித் தோழர்களான ஸஹாபாக்களைப்பின்பற்றி வந்தவர்கலளாகிய "தாபியீன்"களில் ஒருவராகிய மகான் மாலிக்இப்னுதீனார் (ரஹ்)அவர்களால் எழுப்பப்பட்ட புரதன இறையில்லம், 'வலியபள்ளி' எனும் பெயரில் இன்று வரை தன் பழமையைப் பறைசாற்றி வருகிறது.ஹிஜ்ரீ.131ஆம் ஆண்டு ஈரக்கிலுள்ள 'பஸரா' நகரில் காலமான {அதாவது அருமை நபிகளார்(ஸல்) அவர்கள் மறைந்த121-ஆவது வருடத்தில் மறைந்த}-மகான் மாலிக் இப்னு (ரஹ்) அவர்கள்,தேங்காப்பட்டணம் மண்ணில் தன் திருவடிகலளைப் பதித்ததால், இஸ்லாம் இந்த மண்ணில் இறைதூதர்(ஸல்) அவர்களின் இனிய தோழர்களின் கால முடிவிலேயே இலங்கத் தொடங்கியது என்பதை நம்மால் உணர முடிகிறது.
நமது வரலாற்றுக் காலக்கணிப்புக்கள் சரியாக அமையுமானால்,இன்றிலிருனந்து 1297 ஆண்டுகளுக்கு முன், இந்த மண்ணில்-மகான் மாலிக் இப்னு தீனார்(ரஹ்) அவர்களால் -அருமை இஸ்லாதின் மணம் பரப்பப்பட்டிருக்க வேண்டும்.அஹ்ல்பைத் என்றழைக்கப்படும் நபி(ஸல்) அவர்களின் வம்சாவழியினரும் பண்டைக்காலம் முதலே இங்கு தீன் பணியற்றி வருகின்றனர்.இவ்வூரின் பழமைச் சிறப்புவாய்ந்த பள்ளிவாசலில் கத்தீபாகப் பணியாற்றி மறைந்தவர்களில் எமது நினைவுக்கு எட்டியவர்களில் முதலாமவர் ஆலி ஹஸ்ன்பிள்ளை கத்தீபு அவர்கலள் ஆவார்கள்.
அன்னாருக்கு பின் ,1981ஆம் ஆண்டுவரை வாழ்ந்து இந்தப் பள்ளி வாசலில் இமாமகவும்,கத்தீபாகவும் 25 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியற்றியவர் மவ்லானா மவ்லவி முஃப்தி எம்.எ.முஹம்மது முஸ்லியார் அவர்கள் ஆவார்கள்.
குமரிமாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவராகவும் பல்லாண்டுகள்,இவர்களின் மார்க்கப்பணி தொடர்ந்தது.அந்தக் காலக் கட்டத்தில் மாவட்டத்தின் எந்தப் பகுதியிலிருந்து மார்க்க சம்மந்தமான ஐயப்பாடுகள் மக்களுக்கு எழுந்தாலும் அவர்களெல்லாம் தீர்வுகாணத் தேடிவந்த இடமாக தேங்காப்பட்டணம் அமைந்திருந்ததது. க்ஷாபி மத்ஹ்பின் சட்ட நுணுக்கங்களில் இவர்கள் மிகுந்த தேர்ச்சிப் பெற்றிருந்ததால், பாகப் பிரிவினைச்சட்டம், மணமுறிவுச்சட்டம்[தலாக் மற்றும் ஃபஸ்கு] போன்ற சிக்கலான விஷயங்களில் மாவட்ட மக்கள் இவர்களின் மார்க்கத் தீர்ப்புக்கு[ஃபத்வா]காத்திருந்தனர்.
தமிழ்நாட்டு 'சின்ன மக்கா' என்று போற்றப்படும் காயல்ப்பட்டணத்திலுள்ள "மஹ்லறத்துல் காதிரிய்யா" அறபிக்கல்லூரியின் இந்நாள் முதல்வர் மவ்லானா எஸ்.எஸ்.கலந்தர்மஸ்தான் றஹ்மானி காதிரி ஹ்ஜ்ரத் அவர்கள் ,முஹம்மது முஸ்லியாரின் மார்க்கச்சட்ட நுணுக்க ஆற்றலை நேரில் பார்த்தறிந்து 1970 களின் தொடக்கத்தில் இவர்களை காயல்பட்டணம் மஹ்லறா அறபுக்கல்லூரியில் பணியாற்ற் அழைத்தர்கள்.அப்போது முஹம்மது முஸ்லியார் கூறிய ஒரே பதில் ,"நான் பிறந்த ஊருக்கு தீனின் பணி செய்ய நான் என்றைக்குமே கடமைப் பட்டுள்ளேன்" என்பதாகும். எனவே, தன் வாழ்நாள் முழுவதையும் தேங்காய்ப்பட்டணத்து தீன் பணிக்காகவே அர்ப்பணித்தார்கள்.
பள்ளிவாசலில் இமாமாகவும், கத்தீபாகவும், மதறஸாவில் தலைமைப் போதகராகவும் [ஸதர்முதர்ரிஸ்] பணியாற்றிய இவர்களால், மிகவும் மதிக்கப்பட்ட அஸ்ஸெய்யித் பூக்கோயா தங்ஙள் [செய்துபூக்கோயாத்தங்ஙள்] அவர்கள் 25 ஆண்டுகளாக மீலாது ஷரீப் கமிட்டியின் கீழ் இயங்கிவரும் குர்ஆன் மதரசா தலைமைப் போதகராக சிறப்பாக பணியாற்றியுள்ளார்கள். ஹாமிது கோயா தங்ஙள், ஹுசன் கோயா தங்ஙள் ஆகியோரும் அல்லாஹ்வின் வேதமாகிய அல்குர்ஆனை பன்னெடுங்காலமாகப் பிஞ்சு உள்ளங்களில் பதியவைப்பதில் ஆற்றிய ஆன்மீகப்பணி எவராலும் மறக்கவியலாத நினைவுத் தடயங்களாகும்.இவ்வூரை சேர்ந்த அப்துல்லா முஸ்லியார் பக்கத்து ஊரான பூத்துறையில் பல்லாண்டு காலமாக கத்தீபாகவும், ஸ்தர்முதர்ரிஸாகவும் பணியாற்றியுள்ளார்.
அல்லாஹ்வின் அருள்மறை குர்ஆனைப் "பார்வை உடையவர்களால் மனப்பாடம் [ஹிப்ளு] செய்வதே மிகப்பெரிய சாதனை" என்றிருக்கும்போது- தன் இரண்டாம் வயதிலேயே இருவிழிப் பார்வையையும் இழந்த ஒருவர் முழுக்குர்ஆனையும் மனனம் செய்திருப்பது சாதாரண விஷயமா? இத்தகைய ஒரு சாதனையாளரைத் தமிழ்நாட்டிற்குத் தந்த பெருமை தேங்காய்ப் பட்டிணதிற்கு உண்டு.அந்த சாதனையாளர்தான் அல்ஹாபிஸ் முஹம்மது யூசுப் அவர்கள் ஆவார்.தமிழ்நாட்டில் ஹாபிஸ்கள் மிகுந்த காயல்பட்டணம் கூட,- கடந்த ஏழாண்டுகளுக்கு முன்னர்தான் ,இருபது வயதுடைய இருவிழி இழந்த ஒரு ஹாபிஸைக் கண்டெடுத்தது.ஆனால் தேங்காய்ப்பட்டணமோ புறப்பார்வையற்ற ஒரு ஹாபிஸை முப்பத்துமூன்று ஆண்டுகட்கு முன்னரே கண்டெடுத்தது பெருமைக்குரிய விஷயமல்லவா.
இந்த ஹபிஸின் தனிச்சிறப்பு என்னவென்றால் ,திருக்குர்ஆனின் வசனங்களை மட்டுமல்ல அந்த வசனங்களின் எண்களையும், அவ்வசனங்களை உள்ளடக்கிய அத்தியாயங்களின் [சூறா] எண்களையும் மனனம் செய்திருப்பதாகும்.கண்பார்வையுள்ள ஹாபிஸ்களுக்குக் கூட வசன எண்கள் நினைவிருப்பதில்லை.
திருகுர்ஆனை மனனம் செய்த இந்த ஹாபிஸ்,பன்னூற்றுக் கணக்கான ஹதீஸ்களையும், வகை வகையான நீண்ட பெரிய துஆக்களையும், திக்றுகளையும், ஸலவாத்துகளையும், மவ்லீது பைத்துகளையும், ஹிதாயத் களையும் மனனம் செய்துள்ளார்.மார்க்க சம்மந்தமாக இவர் செவியேற்ற ஏராளமான சொர்பொழிவுகளையும், மதறஸா வகுப்பறையில் 'உச்த்தாது' மூலம் செவியேற்ற மார்க்கப் பாடபோதனைகளும் பிறர்மூலம் படிக்கக்கேட்ட மார்க்கச் செய்திகளும் ,சிந்தனைகளும், வரலாறுகளும் இவரால் மனனமிடப்பட்டிருப்பதால் நெடுநேரம் மார்க்க சொற்ப்பொழிவாற்றும் தகுதியும் இவரிடமிருக்கிறது.28.04.1989 அன்றுள்ள பிரபலமான மறுமலர்ச்சி வார இதழ்- "ஒரு அற்புதமான ஹாபிஸ் சாஹிபுடன் பேட்டி"- பார்வை இழந்த நிலையிலும் குர்ஆன் மனப்பாடச் சாதனை" என்று தலைப்பிட்டு இவரை முதல் பக்கத்தில் பேட்டி கண்டு எழுதியிருந்தது. பட்டணம் ரிபாய் பள்ளியில் பல்லாண்டுகளாகவும்,குளத்துப் பள்ளியில் சமீப காலமாகவும் 'இமாமத்' பணி செய்யும் இவர், கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக திட்டுவிளை ஜும்ஆப்பள்ளியில் தராவீஹ் தொழுகை நடத்தி வருகிறார்.
இலக்கியத்துறையில் இலங்கும் பட்டணம்
தக்கலை ஞானமாமேதை பீர்முஹம்மது அப்பாவின் மெய்ஞ்ஞானச் சுடரொளியில் ஈர்க்கப்பட்ட விட்டிலாக அமைந்த தத்துவஞானி ஹாஜி பி.எஸ்.பீர்முஹம்மது அவர்கள் [பி.எஸ்.பி.ஹாஜியார்] தொடக்க காலத்தில் பொன்மணி[நகை]க்கடை வைத்திருந்த வணிகராக இருந்தாலும் , பிற்காலத்தில் ஞானமணிகளை வழங்கும் வள்ளலானார். இவர் எழுதிய "சிந்தையேறும் விருந்து",அல்லது "மந்தம் மாறும் விருந்து", "மனித நுட்ப ரகசியம் ", "எல்லாம் அறிந்த இறைவனா?", "ஒன்றுமரியா இயற்கையா?", "தனி நிலையிலா மனிதனா/", "எது மெய்யின்பம்?", "மனித உயிர் மரணத்தால் அழிவதில்லை", "மதிக்கொரு நிதி", "திருக்குர்ஆன் அகமியம்", "சதிகாரன் இப்லீஸின் சபதம்", என்பன போன்ற பத்துக்கு மேற்ப்பட்ட வெளியீடுகள், குமரி மாவட்ட முஸ்லிம்களுக்கு இவரின் ஞானமுகவரியை வெளிக்காட்டின.
மார்க்கத்துறையைத் தொடர்ந்து இலக்கியத் துறையில் தேங்காய்ப்பட்டணத்தில் இலங்கியவர்களில் முக்கிமானவர் தோப்பில் முஹம்மது மீரான் ஆவார். தோப்பில் முஹம்மது மீரானுக்கு அடுத்துப் புகழ்பெற்ற இன்னொரு மீரான் ,பேராசிரியர் டாக்டர் திருமலர் எம்.எம்.மீரான்பிள்ளை ஆவார். தமிழிலக்கியத்தில் முதுநிலைப்பட்டம் [எம்.எ] பெற்ற இவர், அதற்குப்பின்- வரலாறு மற்றும் அரசியல் துறைகளிலும் முதுநிலைப்பட்டம் பெற்றார். பின்னர் "இஸ்லாமியத்தமிழ் வீரக்கவிதை ஓர் ஆய்வு"- எனும் பொருளில், படைப்போர் காப்பியங்களும் கதைப்பாடல்களும் குறித்து ஆய்வு மேஏகொண்டு 'முன்னவர்'(டாக்டர்)பட்டம் பெற்றார்.
1976- ல் திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில், தமிழ் விரிவுரையாளராகத் தன் கல்விப் பணியைத்தொடங்கிய இவர் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாகக் கேரள மாநிலத்திலுள்ள பல்வேறு அரசுக் கல்லூரிகளின் தமிழ்த்துறையில் பேராசிரியராக- துறைத்தலைவராக- தமிழாய்வுத் தலைவராகப் பணியாற்றிவிட்டு, தற்போது பதவி உயர்வு பெற்று திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியின் துணைமுதல்வராகத் தன் பணியைத் தொடர்ந்து வருகிறார்.
பாரதியார், பாரதிதாசன், கவிமணிதேசியவிநாயகம்பிள்ளை ஆகியோரின் புதுமைக் காப்பியங்கள் குறித்து இவர் ஆய்வு செய்து வெளியிட்ட "காப்பிய உளவியல் பார்வை" எனும் நூலும், "நாட்டுப்புறத்தமிழியல்", "பெருந்தமிழியல்- புதியபர்வைகள்", "முஸ்லிம்கள் முனைந்த முத்தமிழ்- முதன்மைப்பார்வை" ஆகிய இவரின் ஆய்வு நூல்களும் இவரின் இன்பத்தமிழ் இலக்கியத்திறனுக்கு எடுத்துக்காட்டுகளாக அமைந்துள்ளன."உள்ளவரை"- எனும் பெயரில் புதுக்கவிதைத்தொகுப்பு ஒன்றையும் வெளியிட்ட இவர்- பல்வேறு ஆய்வுத் தொகுப்புகளிலும், மலர்களிலும் ,இதழ்களிலுமாக 150- க்கும் மேற்ப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார்.
இவரின் 'காப்பிய உளவியல்பார்வை' மற்றும் நாட்டுப்புற்த்தமிழியல் ஆகிய இரு நூல்களும், கேரளாவிலுள்ள நான்கு பல்கலைக்கழகங்களிலுள்ள் கல்லூரி மாணவர்களுக்கு 'பட்ட முன் படிப்பு', 'பட்டப்படிப்பு', 'பட்டமேற்படிப்பு' ஆகிய வகுப்புகளின் தமிழ்த்துணைப்பாடநூற்கள் ஆயின. இவர் எழுதிய "இஸ்லாமியத்தமிழ் வீரப்பாடல்கள்" எனும் கட்டுரையும்,"கண்ணதாசனின் செப்பு மொழிகளில் அரசியல் விமர்சனம்"எனும் கட்டுரையும் பட்டப்படிப்புப் பட்த்திட்டத்திலும் இடம் பெற்றன.இவ்வாறே இவர் எழுதிய கட்டுரைகளான "பறவையில் அறிஞர் சாலிம் அலி" என்பதும் பள்ளிப்பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
அனைத்துலக 'இலக்கிய மாநாடுகள், தேசிய இலக்கிய மாநாடுகள்,மாநிலக்கருத்தரங்குகள் போன்றவற்றில் அறுபதுக்கு மேற்ப்பட்ட முறைகள் இவர் பங்கேஏஏஉ, ஆய்வுக்கட்டுரைகள் வாசித்திருக்கிறர்; அமர்வுகளுக்குத் தலைமையேற்று உரையாற்றியிருக்கிறார். பட்டிமன்ற்ங்களில் நடுவராகவும், அணித்தலைவராக்வும் பல முறை பங்கேற்றிருக்கிறார். கவியரங்குகளிலும் பன்முறைகள் கலந்துக்கொண்டு கலகலப்பூட்டியுள்ளார்.
25- க்கு மேற்ப்பட்ட இலக்கிய கழகப்பொறுப்புக்கள் வகித்துவந்த இவரின் வாழ்வுக் குறிப்புக்கள்,- தமிழக அரசின் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட 'உலகத்தமிழ் எழுத்தள்ர் யார்?எவர்?' எனும் நூல்' அமெரிக்காவின் வாஷிங்டனிலுள்ள உலகப்புகழ்ப்பெற்ற நூலகம் வெளியிட்ட 'ஆசிரியர் தகவல் தொகை' எனும் நூல் உட்பட பல்வேறு நூல்களில் இடம்பெற்றுள்ளன.
திருமலர் மீரானுக்குப்பிறகு தீந்தமிழிலக்கியத்தில் தனக்கென ஓரிடத்தைப் பெற்றவர், "தேங்கை ஷறபுத்தீன் " ஆவார். தமிழ் முஸ்லிம் கவிஞர்களிடையே தலைமையிடம் பெற்ற இறையருள் கவிமணி பேராசிரியர் கா.அப்துல் கபூர் சாஹிப் அவர்களை ஆசானாகக் கொண்டு கவிதை பயின்ற இவர், தன் ஆசானால் 1977- ம் ஆண்டு முதன் முதலாகக் கவியரங்கத்திற்கு அறிமுகப் படுத்தப்பட்டார். இவரின் முதல் கவியரங்கக் கவிதையினைக் கேட்டவுடனேயே- 'தேன்போன்ற கவியெழுதும் கையுடையார்' "தேங்காய்ப்பட்டினத்தார்" ஆகிய இரட்டைப் பொருளில் "தேங்கையார்" என்று தன் ஆசான் இறையருள் கவிமணியினால் புனைப்பெயர் சூட்டப்பட்டார்.
இதுவரை 48 கவியரங்குகளில் கவிதை வாசித்த இவர், கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் தலைமையில் மட்டும் 14 கவியரங்குகளில் பங்கேற்றிருக்கிறார். இவர் ஆலிமாகவும், கவிஞராகவும் இருப்பதினால் இவரை "மிம்பரில் ஏறும் கம்பர்" என்று, கவியரங்கொன்றில் கவிக்கோ அப்துல் ரகுமான் பாராட்டியுள்ளார்.
தமிழ் முஸ்லிம்களிடையே மிகவும் பிரபலமாகி அரபி மொழியில் அரபு மொழியில் ஓதப்பட்டு வரும் 'மவ்லிது' எனும் நபி புகழ் இலக்கியத்தை எல்லோரும் எளிதில் புரியும் வண்ணம் இனிய நடையில் 'சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லிது' எனும் பெயரில் முதன் முதலாக் மொழி பெயர்த்துள்ளார். இவரின் இந்த மொழி பெயர்ப்பினால் ஈர்க்கப்பட்ட சிங்கப்பூர் வணிகவள்ளல் ஒருவர், ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேல் செலவளித்து இவரைப்புனித ஹஜ்ஜுக்கு அழைத்துச்சென்றிருந்தார். "திருகுர்ஆனின் இதயம் என போற்றப்பட்டு, முஸ்லிம்களின் சமுதாய வாழ்வில் ஒன்றிவிட்ட 'யாஸீன்' எனப்படும் குர்ஆன் அத்தியாயத்திற்கு இன்றைய அறிவியல் கண்ணோட்டத்துடன் நீண்ட விரிவுரை நூல் எழுதியுள்ளார்.
கீழக்கரையில் 1990- ல் நிக்ழ்ந்த, இஸ்லாமிய உலகத்தமிழ் மாநாட்டில்- கவிக்கோ அப்துல்ரகுமான் அவர்களால் தொகுத்து- வெளியிடப்பட்ட "இஸ்லாமியத்தமிழ் இலக்கியங்கள்" என்ற நூலில் இடம்பெற்ற- மரபுவழிமாறாத செய்யுள் இலக்கிய வடிவங்களைத் தந்த- முன்னூற்றுக்கு மேற்ப்பட்ட முஸ்லிம் கவிஞர்களில் இன்று வாழ்ந்துக் கொண்டிருக்கும் மூன்று கவிஞர்களில் இவர் ஒருவராவார். "முஸ்லிம் தாலாட்டு", "முஹ்யித்தீன் ஆண்டகை முத்தமிழ் மாலை", "தவஞானி பீரப்பா முனாஜாத்து மாலை", "ஏர்வாடி இப்றாஹீம் ஷஹீது வலி முனாஜாத்து மாலை", "அஸ்மா உல் நபி மாலை", என்பன போன்ற பல கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார்.
"கஃபு இப்னு ஸுஹைர்(ரலி)" என்ற ஸஹாபிக்கவிஞர், நபி(ஸல்) அவர்களை புகழ்ந்து பாடியதால் பூமான் நபியினால் பொன்னடை போர்த்திக் கவுரவிக்கப்பட்டார்கள். இந்த பொன்னாடைக் கவிதையை முதன் முதலாக் மொழிபெயர்த்து, தமிழுலகிற்கு அறிமுகம் செய்ததால் இவரது பிறந்த தினத்தன்றே 27.05.2007 சென்னையில் நடைப்பெற்ற அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய ஏழாவது மாநாட்டில், தமிழக முதல்வர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்கள்- தமிழக ஆளுனர் மேதகு சுர்ஜித்சிங்பர்னாலா அவர்கள் முன்னிலையில்- ஆலிம்கவிஞர் தேங்கையாருக்கு, மிகச்சிறந்த அரபி இலக்கிய மொழிபெயர்ப்பாளருக்கான விருது வழங்கி பொன்னாடையும் பொற்கிழியும் வழங்கினர்கள். இதனால் தமிழக முதல்வரின் கையினால் விருது பெற்ற முதல் ஆலிம்' என்ற தகைமை இவருக்கு கிடைத்தது.
தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற 'தமிழ்த்தாய் வாழ்த்து'ப் பாடலை முதன் முதலாக அரபியில் மொழிபெயர்த்த இவர், திருக்குறளையும் அரபியில் மொழி பெயர்க்கும் திட்டம் வைத்துள்ளார். அரபி இலக்கிய 'எம்.ஏ' இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்காக சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட பாடநூலில், இவரின் அரபி இலக்கிய மொழிபெயர்ப்புப் பணி குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இசையருவி குமரி அபூபக்கர் அவர்களால் பாடப்பட்டு, கலைமாமணி கவி.க.மு.ஷரீப் அவர்களால் நிகழ்த்தப்பட்டுவந்த சீறாப்புராண விளக்கவுரை நிக்ழ்ச்சியை, கலைமா மணியின் மறைவுக்குப்பின் தொடர்ந்து செய்துவரும் இவர்- இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபா அவர்களால் பாடப்பட்டுவந்த புகழ்பெற்ற பாடலான "யா ஷஃபீயே..யாஷஹீதே..யாறசூலல்லாஹ்.." என்ற பாடலை இயற்றியவர் ஆவார்.
கடந்த 24 ஆண்டுகளுக்கு மேலாக கீழக்கரை, காயல்பட்டணம், தூத்துக்குடி, கோயமுத்தூர் ஆகிய ஊர்களிலுள்ள அரபிக்கல்லூரிகளில் திருக்குர்ஆன் விரிவுரைத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வந்த இவர்- கடந்த ஆறுவருடங்களாக ,தஞ்சை, பாபநாசம் ஆர்.டி.பி.கலை அறிவியல் கல்லூரியில் அரபி மொழித்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
via: BTMJ Soveinir