தள்ளுமுள்ளும் தில்லுமுல்லும் ஒழிய எளிய வழி

Written by mnhameed on . Posted in news

அன்னை தேசமே,

அஸ்ஸாலாமு அலைக்கும்

தேங்காய்பட்டணம் ஜமாஅத் தேர்தல்கள் முன்னெப்போதையும் விட அதிகமாக போட்டி நிறைந்து விமர்சனத்திற்குள்ளாகும் இவ்வேளையில் தேர்தல் சீர்திருத்தம் பற்றிய என் கருத்துக்களை இங்கே பதிவு செய்கின்றேன்.

 

1. ஜமாஅத் உறுப்பினர்கள்

தேங்காய்ப்பட்டணம் ஜமாஅத் அங்கத்துவம் பட்டணத்து பரம்பரையினருக்கு (அவர்கள் வெளியூரிலும் – வெளிநாடுகளில் – பிறந்தாலும் வாழ்ந்தாலும் சரியே) பிறப்புரிமை.

ஆனால் பட்டணத்தில் வாழும் பிற ஊர் மக்களுக்கோ – அவர்தம் வாரிசுகளுக்கோ – அவர் பட்டணத்திலேயே பிறந்தாலும் சரியே- இவ்வுரிமை இல்லை.

ஆனால் ஜமாஅத்திடம் உறுப்பினர்கள் யார் – அல்லாதோர் யார் – என ஒரு பட்டியலும் இருப்பதாக தெரியவில்லை. இதனால் தேர்தலின் போதும் – வேறு சில சந்தர்ப்பங்களிலும் உறுப்பினர்களை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகின்றது.

இந்த குறையினைப் போக்க உடனடியாக – எல்லா ஜமாஅத் உறுப்பினர்களின் பதிவு அவசியமாகின்றது. ஒவ்வொரு உறுப்பினருக்கும் அகர வரிசையுள்ள – நிரந்தர உறுப்பினர் எண் – வழஙகப்பட்டு – அவரை பற்றிய – அவரது குடும்பத்தினர் பற்றிய விபரங்கள், போன், ஈ-மெயில், கல்வி தகுதி போன்ற புள்ளி விபரங்கள், அவரிடமிருந்து பெறப்படும் சந்தா, நன்கொடை ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும்..

இதனை உறுப்பினர்களே நேரடியாக ON-LINE லும் – நேரிலுமாக பதிவு செய்யவும், சரிபார்க்கவும் வழிவகை செய்ய வேண்டும்.

 

2. தேர்தல் முறை

இப்போதைய தேர்தல் முறை – குறிப்பாக வார்டு பங்கீடு – நியமன உறுப்பினர், தலைவர் தேர்தல் ஆகியவை - பகை வளர்க்கும் வண்ணமாக உள்ளது. இதற்கு மாற்றாக வார்டு முறையினை மாற்றி பட்டணம் முழுவதும் ஒரு தொகுதியாக கணக்கிட்டு – பட்டணம் மக்கள் அனைவரும் தமக்கு விருப்பமான 15 வேட்பாளரை தேர்வு செய்யும் முறை வேண்டும். 15க்கும் அதிகமான வாக்குகள் கொண்ட வாக்கு சீட்டுகள் செல்லாத வக்குகளாக அறிவிக்கப்பட வேண்டும். அதிக வாக்குகள் பெற்ற 15 வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட வேண்டும்.

மிக அதிகமான வாக்குகள் பெற்றவர் தலைவராகவும், அதற்கடுத்து வருபவர் செயலாளராகவும் அறிவிக்கப்படவேண்டும். இம்முறை பின்பற்றப்பட்டால் – தொகுதிவாரியான நேரடி போட்டி, தலைவர் தேர்தலின் போது ஏற்படும் குதிரை வியாபாரம், மன கசப்புகள் களையப்படும். இம்முறையில் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர், செயலாளர் ஆகியோர் மக்களின் அபிமானம் கொண்டவராகவும் அமைவர்.

 

3. மகாசபை கூட்டங்கள்

மகாசபை கூட்டங்கள் பள்ளிகளை தவிர்து - ஏதேனும் அரங்கங்களில் வைத்து நடத்தப்பட வேண்டும். கலந்து கொள்ளும் அனைத்து உறுப்பினர்களின் பெயரும் பதிவு செய்து சரிபார்த்த பின்னரே உள்ளே அனுமதிக்க வேண்டும். கூட்டத்தில் பேச விரும்புவேர் முன்னரே பதிவு செய்து – மேடையில் வந்து – தமது பெயரையும் – உறுப்பினர் எண் – சொல்லி அஜண்டாவை ஒட்டியே பேச வேண்டும். கூட்டங்கள் ஜமாஅத் கூட்டமைப்பு / வக்ப் வாரிய பிரதிநிதிகள் முன்னிலையிலேயே நடத்தப்பட வேண்டும்.. இம்முறை பின்பற்றப்பட்டால் – இப்போது நடந்தேறும் விரும்பதகாத பல நிகழ்வுகளை தவிர்க்கலாம்,

தேங்காய்பட்டணத்தின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் எழுதப்பட்டதே இந்த மடல்.

 

அன்புடன்
M.N. HAMEED

Add comment

தனி நபர் பற்றிய விமர்சனம் கூடாது.


Security code
Refresh

We have 75 guests and no members online